கோப்பர்னிகஸ்
எனது மீசை குறித்து
அவள் கேட்கிறாள்.
அதை ஏன்
முறுக்கி இருக்கிறாய்?
காலத்தின் நரம்பில்
ஒரு வடு விழுந்த மீசை.
மீசைக்குள் அவள்
புகுந்துகொண்டாள்.
அங்கே
எதிர்ப்பட்ட ஒரு கப்பலில்
கோப்பர்னிகஸ் இருந்தான்.
அவளை கண்காணிக்க
தன்னை மறந்து தொடர்ந்து
ஆரம்ப தவறுகளை
செய்து முடித்தான்.
அவள் மீசைக்குள்
அலைந்து திரிந்தாள்.
ஒரு இரவை
தொகுத்தாள். ஒரு
பகலை இழைத்தாள்.
காலத்தின் முகத்தில்
விண்மீன்களை பதித்து
நிலவொளி சாந்தை அள்ளி
பூக்களின் வாசனைக்குள்
புகுத்தினாள்.
அவள் மார்புகளில்
என் மீசை உராய்ந்தது.
கப்பல் தள்ளாடியது.
அலைக்குள் தவறிய
கோப்பர்னிக்கஸ் பின்
மீட்கப்பட்டது யாரால்?
தெரியவில்லை.
மீசையில் வடியும்
அன்னங்கள் அருந்தும்
கனவுலக மது
அவள் மார்புகள் மீது
வடிந்து ஓடின.
அவள் மீசையின்
நுனியில் நின்று
பூமியை வரைந்தாள்.
மறு நுனிக்கு சென்று
என்னை வரைந்தாள்.
ஒருநாள் அங்கிருந்து
வெளியேறி சென்றாள்.
அவளை சங்கப்பாணன்
ஒருவன்
இரவுக்குள் அடைத்து விட
இரவு அவளை
பகலுக்குள்
ஒளித்து வைத்தது.
பகல் அவளை
கடலுக்குள்ளும்
கடல் அவளை
சிப்பிக்குள்ளும்
ஒளித்து வைத்தது.
மழை முதிர்ந்த
ஐப்பசி மாதத்து நாளில்
கடற்கரையோரம்
ஒரு சிப்பி விளைந்தது.
கடற்கரையில்
பொய் மீசைகள்
விற்று கொண்டிருந்த
என்னிடம் வந்து
யாரோ ஒருவள்
நீ உண்மையில் யார்
என்று கேட்டாள்.
கோப்பர்னிகஸ்
எனது பெயர் என்றேன்.
_______________________________________