முண்டாசு முறுக்கு மீசை பாரதி

முண்டாசு முறுக்கு மீசை பாரதி
முண்டாசுடன் முழித்து நிற்பது யாடி;
இவர் முகத்தைப் பார்த்து கேளடி;
மூவண்ணக் கொடியை உயர்த்தியே கோசம் போட்டவர் தானடி;
இவர்
முறுக்கு மீசை பாரதி;
முண்டாசு புரட்டிச் கவிஞர் தானடி.
சதா தமிழையே உச்சரிக்கும் உதடைக் கொண்டவரடி;
கையில் ஒரு வீரத்தடி;
கழுத்தில் வெள்ளை துண்டு;
கருப்புக்கோட்டையே அணிவாரடி;
பார் போற்றும் பாரதியாரடி;
சாகாத வரம் பெற்ற எங்கள் சிரஞ்சீவி தானடி.
இவர் புரட்சிக் கவிஞன் பாரதி
புதுமைகள் பல படைத்தார் பாரடி;
சிவ சக்தியை வணங்கியவர் தானடி.
சீற்றம்கொண்டே பெண் உரிமைக்கும்,
விடுதலைக்கும் முழக்கம் செய்த
வீர கவி தானடி;
வெளிப்படையாக பேசும் நம் மகாகவி
பாரதியாரடி.
எரிக்கும் பார்வைக்கு மத்தியில்
நெற்றிக் கண்ணாய் வெற்றித் திலகம் இட்டவர் தானடி;
சுட்டெடுக்கும் கவியால் சுண்டித்தான் இழுத்தாரடி;
சுற்றி நிற்கும் பகைவர்களை சொல்லால் சுழட்டி அடித்தாரடி
சுவையான புரட்சிக்கவியால் சுதந்திர தாகத்தை மூட்டியவர் தானடி;
வீர சுதந்திரம் வேண்டிநின்றாரடி;
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கை கட்டிப் பிழைப்பாரோ?
என்றே கதறி கலங்கி அழுதாரடி,
கல் நெஞ்சக் காரனையும் கரைத்தாரடி.
பாட்டுக்கு அவர் பாரதி
பாட்டாளி மக்களின் கூட்டாளியடி;
கும்மியர்களுக்கு சிம்ம சொப்பனமடி.
செந்தமிழ் நாடெனும் போதினிலே,
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
என்றாரடி.
காணி நிலத்திற்கு கனவு கண்டாரடி
கேணிக்கருகே தென்னைமரத்தினையும்
வீசும் சுதந்திரக் காற்றுடன்
தேடிவரும் கிளிகள் குயில்கள்கூட்டத்தினை கேட்டாரடி.
தட்டிக் கேட்டிடவே தலை நிமிர்ந்து;
தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரடி;
கொட்டு முரசே என்று கோபக் கனலுடன்
சுதந்திரத் தீயை மூட்டியவர்;
இந்த முண்டாசு பாரதி தானடி.
ஆணும் பெண்ணும் சமம்
அடுப்பங்கடையில் உறங்கவில்லை பெண்மை என்றாரடி
அடுக்கு மொழி பாரதி;
அடக்க நினைப்பவர்களை,
ஆட்டிப்படைத்தார் தன் கவியால்;
இந்த அமரகவி பாரதி.
பேயாயுழலும் சிறுமனதை
பேணிடு;
ஞாலம் பெரிது;
ஞானம் தானாய் வராது;
நாளும் உழைத்திடு என்றே;
ஞாபகப்படுத்திய
ஞானி அந்த பாரதி.
கூனிக் குனியாது;
ஓடிவிளையாடு பாப்பா;
நீ ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா;
சாதிகள் இல்லையடி பாப்பா;
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
பேணிக்காத்திட வேண்டும் சுதந்திரத்தை
என்றார் பாரதி
என்னும் மெண்ணங்கள்,
எதிலும் வெற்றி;
எதனினும் வெற்றி;
மண்ணும், காற்றும், புனலும், அனலும், வானும் வந்து
வாழ்த்தி வணங்கி நில்லாவோ;
என்று இயற்கைக்கே ஏவள் விட்டவர்;
எங்கள் முறுக்கு மீசை பாரதிதானடி.
அவன் பார்வையில் தீ பறக்கும்;
அவன் நடையில் புழுதி கிளம்பும்;
அவன் மூச்சில் அனல் தெறிக்கும்;
அவன் பேச்சில் எரிமலை வெடிக்கும்;
அவன் பாட்டில் உயிர் பிறக்கும்;
அவன் படைப்பில் புரட்சி குண்டுவெடிக்கும்;
உணர்வு கொந்தளித்து கொப்பளித்து எழும்.
உண்மைக்காதல் சுரக்கும்;
உனக்குள் ஊட்டம் கிடைக்கும்;
தடுப்பவனுக்கு ஓட்டம் கிடைக்கும்.
கேளடிப் பெண்ணே கேளடி,
கேள்வி கேட்காவிடின் நீ யாரடி;
பேடிகள் இல்லையடி பெண்கள்,
பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடக்க வரவில்லையடி
ஆளப்பிறந்தவள் பெண்ணடி;
நல் அன்பை சொறிபவளும் பெண்ணடி;
ஞாலத்தில் பெரியது பெண்மையடி;
அவள் இல்லை என்றால் உயிர்கள் இல்லையடி;
அவளே ஆதி பரா சக்தியின் வடிவம் என்றே முழங்கினாரடி
பெண்ணுரிமைபோராளி,
எங்கள் பாரதி.
பெண்ணே வீட்டுக்குள் அடங்கிக்கிடப்பதில் இல்லை விடுதலை;
விடுதலைக்காற்றை சுவாசிக்க;
விதியைமாற்றிட வீதியில் காலை எடுத்துவையடி;
விடிவு பிறக்குமடி என்றார்.
காவியம் செய்வோம்;
நல் ஓவியம் வரைவோம்;
காடுகள் வளர்ப்போம்;
கடமைகள் செய்வோம்;
உடைமைகளை காப்போம்;
உயிரே போனாலும்;
ஒன்றாய் இருப்போம் என்றார்.
ஊசிகள் செய்வோம்;
உலகத் தொழில்கள் அனைத்தையும்,
உவந்து செய்வோம்;
ஆயுதம் செய்வோம்;
நல்ல கல்விச் சாலைகள் வைப்போம்;
உழுபடைகள் செய்வோம்;
வானை அளப்போம்;
கடல் மீனை அளப்போம்;
சந்திரமண்டலம் கண்டு களிப்போம் என்றாரடி.
அந்த வீரத்திலகம் இட்ட பாரதி.
வீணாய் பொழுதை போக்க வேண்டாம் என்றார்;
வேள்விகளைவிட,
கேள்விகளைக்கேள்;
விடைதெரியாத வாழ்வில்,
விடுதலையில்லை என்றானடி;
புரட்சிப்பித்தன் பாரதி.
வீற்றிருந்தால் வீரம் பிறக்காது;
வீச்சு அருவாளில் இல்லை வீரம்;
வீணர்களிடம் விவேகம் பிறக்காது;
அடிமையில் இல்லை குடிமை;
அடங்கிவாழ்வதில் இல்லை உன் உரிமை என்றாரடி.
கூடிவாழ்ந்திடவேண்டும்,
குறைகளைமறந்திடவேண்டும்,
முடங்கிக்கிடக்கும் மூடனும்,
மழுங்கிக் கிடக்கும் இளைஞனும்,
முடவன் தானடி என்றாரடி.
சாதி, மதங்கள், மறைகளைவிட,
முறையான கல்வி ஞானம் வேண்டும் என்றாரடி
எங்கள் முண்டாசு முறுக்கு மீசை பாரதி.
அவர், எழுச்சி கவிஞர்,
என்றென்றும் நம்முள் வாழும்;
புரட்சிக்கவிஞர் தானடி.
சுழற்றும் கண்கள்;
சிகை மறைந்த முண்டாசு;
முறுக்கு மீசை ;
இவை எங்கள் கம்பிர பாரதியின்
குறியீடுகளடி.
A. Muthuvezhappan

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (11-Sep-21, 8:45 pm)
பார்வை : 39

மேலே