கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை சாந்துணையுஞ் சஞ்சலமே தான் – நல்வழி 28
நேரிசை வெண்பா
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்(து) எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான். 28
- நல்வழி
பொருளுரை:
உண்பது ஒரு நாழியரிசி உணவேயாகும்; உடுப்பது நான்கு முழ உடையேயாகும்;
(இப்படியாகவும்) நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன;
(ஆதலினால்) அகக்கண் குருடாயிருக்கிற மக்களின் குடிவாழ்க்கையானது மட்கலம்போல இறக்குமளவும் (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.
கருத்து:
உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள்
விளக்கம்:
நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள்,
மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும்.
ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.