நுண்விழைந்த நூலவர் நோக்கு மூன்று – திரிகடுகம் 29

இன்னிசை வெண்பா

பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை
மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு 29

- திரிகடுகம்

பொருளுரை:

ஒரு பெண் விரும்பி பின் சென்றாலும் தன்னடக்கையில் குறையாமையும்,

தன் இடந்தேடி வந்து கைப்பட்டாலும் பிறன் பொருளிடத்தே ஆசையில்லாதிருத்தலும்,

மனை முதலிய நிலத்தை விரும்பி அறப்பயனை யடையாமல் வாழ்கின்ற காலத்தை நல்லதென எண்ணாமையும்

ஆகிய இம் மூன்றும் நுட்பமான நூல்களை விரும்பிக் கற்றுணர்ந்தவருடைய கருத்தாம்.

கருத்துரை:

முறை பிறழ்ந்து தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறன்பொருள் வலிய வந்தெய்தினும் கைக் கொள்ளாமையும், மண்ணாளுதலை விரும்பிய வாழ்நாளை மதியாமையும் நூலுணர்வுடையார் கருத்து.

பொருள்களின் நுண்மையை அப் பொருள்களை யுணர்த்தும் நூலின்மே லேற்றி நுண்ணூல் என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-21, 10:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே