நின்றநிலை தானதாந் தத்துவமாம் – நல்வழி 38

நேரிசை வெண்பா

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

- நல்வழி

பொருளுரை:

இது நல்லது என்றும், இது தீயது என்றும், இது செய்தவன் நான் என்றும், இது செய்தவன் அவன் என்றும், இது அன்று என்றும், இது ஆகும் என்றும் பேதஞ் செய்யாமல் இரண்டறக் கலந்து நின்ற நிலையே ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும்;

தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய கடவுளைத் தேடுவது சம்பை அறுத்தவர் அதனைக் கட்டுதற்கு அதுவே அமையும் என்று அறியாமல் கயிறு தேடிப் போனது போலும்.

உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை

சம்பு - ஓர் வகைப் புல்.

விளக்கம்:

நல்லது இது என்றும், கெட்டது எது என்றும், இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை பேதம் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்றற்ற நிலையே உண்மை நிலையாகும்.

கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-21, 8:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 112

மேலே