முப்பது ஆண்டிற்குள் முதல்வனை அறி – நல்வழி 39

நேரிசை வெண்பா

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்(று) ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

- நல்வழி

பொருளுரை:

முப்பது வயதினளவிலே முக்குற்றமும் ஒழியப்பெற்று ஒருபொருளாகிய கடவுளை ஒருவன் தவறாமல் தன்னுள்ளே அனுபவ உணர்வால் அடையானாயின், அவன் முதுமையில் கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.

அது அழகிய மாதர்களின் முதுமையும் பதியுடன் கூடி இன்பம் நுகர்தலின்றி முலையினை யுடையராதல் மாத்திரமே போலவாகும்.

கருத்து:

மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப்பொருளை அடைந்தின்புற முயலல் வேணடும். முக்குற்றம் காம வெகுளி மயக்கங்கள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசம் மூன்றும் என்னலும் ஆகும்.

விளக்கம்:

ஒருவன் எத்தனை தான் கல்வி கற்றாலும், அவனது முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும் மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன் படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பு இருப்பது போல், அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன் படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் ஒரு பயனும் இல்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-21, 9:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே