ஹைக்கூ புதையல் நூல் ஆசிரியர் கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை கவிஞர் இரா இரவி

ஹைக்கூ புதையல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் !
நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

******

நூலாசிரியர் கவிஞர் பேனா தெய்வம் வரலாற்று சிறப்புமிக்க நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர். வளர்ந்து வரும் கவிஞர். முகநூலிலும் ஹைக்கூ கவிதைகள் வடித்து வருகிறார். ‘ஹைக்கூ புதையல்’ என்ற நூலின் மூலம்
தனிமுத்திரை பதித்து உள்ளார். சொற்கள் களிநடனம் புரிகின்றன. சொல்லாட்சியோடு ஹைக்கூ விருந்து படைத்துள்ளார். பாராட்டுகள்.

மழைக்காலத்தில்
வணிகம் செய்யும் குழந்தைகள்
காகிதக் கப்பல்!

மழைக்காலத்தில் குழந்தைகள் கப்பல் விடுவதை காட்சிப்-படுத்தும் விதமாக வடித்த ஹைக்கூ கவிதை நன்று. எதையும் உற்றுநோக்கும் பார்வையின் விளைவே ‘ஹைக்கூ புதையல்’
நூல் விளைவிற்குக் காரணம்.

முதியோர் இல்லத்திற்கு
தானம் செய்யப்பட்டது
பெற்றோர்கள்!

பெருமைமிகு நம்நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது நாட்டிற்கு அவமானம். ‘பெற்றோரை பேணிக்காக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை’ என்பதை பிள்ளைகள் உணரும் நாள் நன்னாள்.

கண்கள் கவனம்
வீட்டுக்குள் மின்னல்
தொலைக்காட்சி!

அயல்நாட்டிலும் தொலைக்காட்சிகள் உண்டு. அவர்கள் ஊறுகாய் போல பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் சோறு போல பயன்படுத்துகின்றனர். ‘தொடர்ந்து தொலைக்காட்சிகள் பார்ப்பது கண்களுக்கு கேடு தரும்’ என்பதை உணர்த்திய ஹைக்கூ நன்று.

பள்ளி வரை தொடர்வதல்ல
கொள்ளி வரை தொடர்வதே
நட்பு!

நட்பின் சிறப்பை பள்ளி, கொள்ளி என்று சொல் விளையாட்டின் மூலம் ‘மூச்சு இருக்கும் வரை தொடர்வதே உண்மையான நட்பு’ என்று உணர்த்தியது சிறப்பு. பாராட்டுகள்.

அறுவை சிகிச்சை செய்ய
மயக்க ஊசி வேண்டாம்
அவளைப் பார்த்தாலே போதும்!

அவளைப் பார்த்தாலே மயங்கி விடுவேன் என்பதை எள்ளல் சுவையுடன் ‘மயக்க ஊசி வேண்டாம், அவளை வரச் சொல்லுங்கள்’ என்ற நையாண்டி நன்று.

கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்டங்களைக் கடந்தார்
வரலாற்று ஆசிரியர்

‘கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டங்களைக் கடந்தவர் யாரோ?’ என வியப்பில் ஆழ்த்தி, பின் விடையாக ‘வரலாற்று ஆசிரியர்’ என்று கணிக்க முடியாத விடை சொல்லி வெற்றி பெற்றுள்ளார்.

கையூட்டு வாங்காத
காவலன்
பூட்டு!

காவலர்களில் சிலர் கையூட்டு பெற்று வருகின்றனர். எந்தக் காலமும் அவர்கள் திருந்துவதில்லை. கையூட்டு வாங்காத நல்ல காவலர்களும் பலர் உண்டு. ‘பூட்டு, கையூட்டு வாங்குவதில்லை’ என்று சொல்லி, கையூட்டு வாங்கும் காவலர் தலையில் கொட்டு வைத்துள்ளார். பாராட்டுகள்.

எண்ணங்களை இமையமாக்கு
காலத்தை பாலமாக்கு
எதிலும் வாகை தான்!

தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக ‘எண்ணங்களை இமையமென உயரமாக்கினால் வெற்றிமாலை தோள்களில் விழும்’ என்று உணர்த்தியது சிறப்பு.

தூய்மை செய்ய வேண்டியது
கைகளை மட்டுமல்ல
மனதையும் தான்!

அடிக்கடி கைகளை சுத்தம் செய்தால் மட்டும் போதாது, மனதையும் சுத்தம் செய்யுங்கள். ‘மனதில் உள்ள அழுக்கை அகற்றுங்கள்’ என்று உணர்த்தியது நன்று.

தேர்வு வந்தது
பதற்றத்தில்
பெற்றோர்கள்!

உண்மை தான். தேர்வு எழுத இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் பதட்டப்பட்டு அவர்களையும் பதட்டமாக்கி விடுகின்றனர். ‘பதட்டம் தேவை இல்லை, இயல்பாக இருந்து அறிவுரை வழங்கினால் தேர்வில் வெற்றி பெறுவார்கள், சாதிப்பார்கள்.’

அடிக்கடி தூர்வாரப்பட்டது
அரசுக் கருவூலம்
கண்மாய்?

கண்மாய் தூர் வார்க்கிறோம் என்ற பெயரில் அரசுக் கருவூலம் தூர்வாரப்படுகிறது. ஆனால் கண்மாய் தூர் வாராமல் அப்படியே உள்ளது என்பதை சொல் விளையாட்டின் மூலம் ஊழலை படம்பிடித்துக் காட்டி உள்ளார். கண்மாய் தூர் வாரவில்லை என்ற செய்தி அடிக்கடி செய்தியாகப் பார்த்தது நினைவிற்கு வந்து போயின.

இரண்டாயிரம் பதுக்கியவன் புழலில்
இரண்டாயிரம் கோடி பதுக்கியவன்
புலாலோடு!

புழல், புலால் சொல் விளையாட்டில் நாட்டுநடப்பை படம்பிடித்துக் காட்டி உள்ளார். கோடிகளைக் கொள்ளையடித்து வெளிநாடுகள் சென்றவர்களை குறைந்தபட்சம் கைது கூட செய்ய முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மட்டை விளையாட்டை ரசித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
போராட்டத்தில்
தேநீர் கொடுத்தான் சிறுவன்!

உண்மை தான். நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் ஒழிக்கபடவில்லை. காரணம் ஏழ்மை ஒழியவில்லை. அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.

வார்த்தெடுங்கள்


வறுத்தெடுக்காதீர்கள்
பாவம் மாணவர்களை!

மாணவர்களை தனிப்பயிற்சி என்ற பெயரில் வாட்டி எடுக்கும் அவலநிலை இன்றும் தொடர்கின்றன. ‘வாட்டி எடுக்காமல் வார்த்து எடுங்கள்’ என்ற அறிவுரை நன்று. மொத்தத்தில் ஹைக்கூ புதையல் மூலம் சிந்தனை விதை விதைத்துள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (24-Sep-21, 10:19 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 116

மேலே