காதலும் கடந்து போனது

மாடப்புறாவொன்று மங்கையாகி வந்ததே .....
பேடைக்குயிலொன்று பெண்மையாகி வந்ததே....
பச்சைகிளியொன்று பாவையாகி வந்ததே ....
கொண்டைக்குருவியொன்று கோமகளாகி வந்ததே.....

வனப்புகொண்ட வான்மயிலொன்று
என்னெண்ணமெல்லாம் நிறுத்திட ....
திக்கித்திணறும் சிறுபிள்ளையாய்
மொழிமறந்து நான்நின்றிட .....
தேவலோக சிற்பமது
ஊர்வலம் வந்ததடி
ஊரே வியக்கும்படி ....

கொஞ்சிடும் மைனாவொன்று
எனைக்கொஞ்சிடத் தான்வந்ததே .....
கண்சிமிட்டும் நேரமதில்
காதலென்னை தாக்கியதே .....

பனைமர ஓலையொன்று
தானாய்வந்து வீசியதே ....
ஆலமரத் தாழக்கிளையொன்று
தாகங்கொண்டு நிற்குதே .....

எழுந்தோடும் நதியெல்லாம்
எனைக்கேட்டுச் செல்லுதடி ......
பறந்தோடும் வான்பறவையோ
பாவமிவன் எனப்போகுதடி .....
மிதந்திடும் மேகமெல்லாம்
கண்ணீர்விட்டு கதறுதடி .....
விரைந்தோடும் காலமெல்லாம்
உன்நினைவோடே போகுதடி .....

கடந்துபோன காட்சியது
திரையிலுன்னும் எச்சமாய் மிச்சமிருக்க ....
வருடிப்போகுந் தென்றலில்
உன்வாசமின்னும் வாசமிருக்க .....
திருடிப்போன இதயத்தை
திருப்பித்தராமல்
திணறவிட்டு கொல்லுதல்
என்னடி நியாயம் .....
இருத்தலில் இளைப்புகொள்கிறேன்
இதுயென் எச்சென்ம பாவம் .....

பேடைக்குயிலே நீபறந்தபின்
கோடைமழையாய் கொட்டுதடி பாதையறியா இருவிழி .....
ஆறுதல்சொல்லவரும் வாடைக்காற்று
அதற்குந்தெரியலையோ என்வழி .....

வெகுதூரத்தில் தானுள்ளது
விரிந்துக்கிடக்கும் அந்நீர்க்கடல் .....
ஆனால் நுரையலையொன்றோ
என்னிடைவளைத்து இழுக்குதடி .....
என்னுடை நனைத்தது போதாதென
என்னுயிரிழுத்து சிரிக்குதடி
காதல்தந்த அக்கண்ணீர்க்கடல் .....

மாமரம் பூத்திட மாங்குயில் பாடிடும் .....
பூமரம் பூத்திட பூங்குயில் பாடிடும் .....
வேம்புபூத்திடவும் இளங்குயில் பாடும் ....
இத்தனிமரம் பூத்திருக்க தாகக்குயிலே எங்கேயுன் குரல்வளம் .....
எப்போதயறியும் என்விழியுன்
பொன்வளம் .....

தானாய்ச் சிரித்தேன் தனியாய்நடந்தேன்
தரணியில் இதுபோல் தனிச்சுகமுண்டென
உன்னால்தான் அறிந்தேன் .....
அதையொரு பெருஞ்சுமையாய்
இப்போது உணர்கிறேன் ......

அதோஅந்த மலைமுகட்டில்
ஊடல்கொள்ளும் அலைமுகிலெல்லாம்
கலையாகத் தெரிந்ததுபோய் ....
காய்ந்தயிலையொன்று
வெப்பக்காற்றில் உலவுவதாய்
வெற்றிடத்தில் திரிகிறேன் .....

இதோயிந்த ஆற்றுப்பாலத்தில்
ஓய்வெடுக்கும் அந்தரக்காற்று
சுந்தரமாய் தெரிந்ததுபோய்
எந்திரமொன்று சுவாசிப்பதாய்
இப்போது உணர்கிறேன் ......

சுட்டெரிக்கும் மதியவேளை
மரநிழலில் ஓய்வெடுக்கும்
பச்சைக்கிளியொன்று
பாதைமாறிப்போன பேதைத்தேட
பாதையறியாமல் நிற்குதோ .....
வயல்வெளி ஆசைதனில்
சிறுவெளிவிட்டு சிட்டதுபறக்க
வாட்டங்கொண்டு நிற்குதோ .....
ஆகாய மோகந்தன்னில்
அன்பிணைபிரிய
தனிமைதாங்கி நிற்குதோ .....
நெடுநேரமெனக்கு ஆறுதலாய்
பேசிக்கொண்டு நிற்குது .....
பெண்மையை நம்பாதேயென
பெருங்கவியுரைத்து நிற்குது .....

கழு அதைத்தைக்க
கற்பூரவாசம் வருமாம் ......
உளியிடிக்க உள்ளிழுந்து
கற்சிலையது வெளிவருமாம் .....
உழுதிடும் நிலந்தன்னில்
எருதிடும் வேளைதனில்
எழுதிடும் கவியை இப்போதுத்தேடி
எங்ஙனம் படிப்பது .....

வாட்டந்தந்துபோன வானவில்லே
உன்வண்ணமதை எடுத்துப்போக மறந்துபோனாயே .....
கூட்டைப்பிரிந்துபோன தேன்சிட்டே
உன்பாடல் அதையழிக்க
மறந்துபோனாயே.....
சாட்டையடி தந்துபோன சாரல்மழையே
உன்னீரப்பதமதை உலரவைக்க
மறந்துபோனாயே ......

பாய்ந்தோடும் அருவித்தடம்
காய்ந்தோடும் கோடையிலும்
கொட்டுதடி தாரைத்துளி ......
சாய்ந்தாடும் பசுமூங்கிலில்
காயாமல் நிற்குதடி
வெண்முகிலின் சிறுபனி .....

துருவம்மாறிய காந்தமே
நீதூரம் போனதால்
காரிருள் ஆந்தையென
தூக்கமின்றித் திரிகிறேன் ......
உருவம்மாறிய தங்கமே
நீயென் உவமையாகிப் போனதால்
உளறிக்கொண்டு திரிகிறேன் ......

எழுதியவர் : என்.கே.ராஜ் (25-Sep-21, 5:04 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 437

மேலே