மண்ணறிய வந்துள்ள மன்னுயிர்கள் எண்பத்து நான்கிலக்கம் - - பிறப்பு, தருமதீபிகை 902

நேரிசை வெண்பா

எண்ணரிய தோற்றங்கள் எங்கும் பரவியுள
மண்ணறிய வந்துள்ள மன்னுயிர்கள் - எண்ணியலுள்
எண்பத்து நான்கிலக்கம் என்ன இயைந்துமே
பண்பெற்(று) உளகாண் படிந்து. 902

- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அளவிடலரிய உருவத் தோற்றங்கள் ஈண்டு யாண்டும் பரவி நீண்டு நிலவுகின்றன; அவை எண்பத்து நான்கு நூறாயிரம் கூறான பேதங்களாய் இசைந்து நிற்கின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர். உயிர் இனங்களின் வகைகளைத் தொகையாய் இது உணர்த்தியுளது. பிறப்பு நிலைகளை அறிவது பெரிய கலையாய் நின்றது.

கண் எதிரே தோன்றுகின்ற உருவங்களை மாத்திரம் நாம் கண்டு வருகின்றோம்; காணாதன பல கோடிகள் உள்ளன. எண்ணியறிய முடியாதபடி எல்லை கடந்துள்ள பிறவிகளுள் மனிதப் பிறவி நல்லதாய் உயர்ந்திருக்கிறது. முன்னும் பின்னும் எண்ணி நோக்கி எதையும் நுண்ணிதாயுணர்ந்து உயிர்க்குறுதியை அடையும் தகுதி மனிதனிடம் மருவியிருத்தலால் மானுடப் பிறவி அதிசயமுடையதாய் மகிமை மிகப் பெற்றது.

சீவராசிகள் அளவிடலரியன; ஆயினும் அவை ஏழுவகையுள் அடங்கி யுள்ளன. நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்து நான்கு இலட்சம் உருவ பேதங்களாய்ப் பிறவிகள் மருவி எவ்வழியும் தொடர்ந்த பெருகி யிருக்கின்றன.

வித்து, வேர்வை, முட்டை, கருப்பை என்னும் இந்நான்கும் பிறவிக்கு மூல நிலையங்களாய் ஞாலம் கருத வந்துள்ளன.

மரம், கொடி, செடி முதலியன வித்திலிருந்து தோன்றுகின்றன, ஈ, கொசு, புழு முதலியன வேர்வையிலிருந்து எழுகின்றன; பறவை பல்லி பாம்பு முதலியன முட்டையிலிருந்து வருகின்றன; மானிடம் விலங்கு முதலியன கருப்பையிலிருந்து பிறக்கின்றன. பிறப்பின் கருவுகள் சிறப்போடு தெரிய நின்றன.

உற்பீசம், சுவேதசம், அண்டசம், சராயுசம் என ஆரிய மொழியில் முறையே இவை கூறப்படுகின்றன. தொகை நான்கு; வகை ஏழு; விரிவு எண்பத்து நான்கு நூறாயிரம், இவ்வாறு பிரிவுகள் நேர்ந்து பிறவிகள் பேர் பெற்றுள்ளன.

ஈரிரண்டு தோற்றத்(து) எழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் தீர்வரிய
கன்மத்துக்(கு) ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து வெந்நிரய
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்கா ரணம்சிறிது நண்ணுதலும். – கந்தர் கலிவெண்பா

வினைக்கு ஈடாகச் சீவகோடிகள் பிறந்துழலும் நிலைகளை இது விளக்கியுள்ளது. ஏழ்வகைப் பிறப்பிலும் ஊழ்வகை உருத்து எவ்வகையிலும் மாறாமல் வேலை செய்து வருகிறது.

எழுமை எழுபிறப்பும். குறள், 107 செய்ந்நன்றியறிதல்

பிறப்பின் வகைகளை வள்ளுவரும் இவ்வாறு குறித்திருக்கிறார்.

நேரிசை வெண்பா

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்
நீர்பறவை நாற்காலோர் பப்பத்தாம் - சீரிய
பந்தமாம் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில்சீர்த் தாவரநா லைந்து. - பிறவிநிலை

தேவர் பதினாலு இலட்சம். மானிடம் ஒன்பது இலட்சம்.
விலங்கு பத்து இலட்சம். பறவை பத்து இலட்சம்.
நீர்வாழ்வன பத்து இலட்சம். ஊர்வன பதினொரு இலட்சம்.
தாவரம் இருபது இலட்சம்.

எழுவகைப் பிறவிகள் எண்பத்து நான்கு இலட்சங்களாய்ப் பரவியிருக்கின்றன.

உரைசேரு மெண்பத்து நான்குநூ
றாயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான். 4 – 132 திருவீழிமிழலை, முதலாம் திருமுறை, திருஞான சம்பந்தர் தேவாரம்

இறைவன் நிலையைத் திருஞானசம்பந்தர் இவ்வாறு குறித்திருக்கிறார், பிறவிகளில் உழலும் உயிர்கள் தோறும் பிறவா ஒருவன் மருமமாய் மருவியிருப்பது உரிமையோடு துதி செய்ய வந்தது. உயிரினங்களுள் மனிதனிடம் பரமன் வரமாயுளன்.

தேவும் மாவும் தாபரமும் பறவையும்
மேவிய மக்கள் ஊர்வ நீரனவும்
பேசில் எழுவகைப் பிறப்பென மொழிப;
அவற்றுள்,
தேவர் ஈரேழ் மக்கள் ஒன்பான்
தாபரம் இருபான் ஊர்வன பன்னொன்று
நீரன விலங்கு புள்நிரல் பப்பத்தாம்
ஆகஎண் பத்தினால் இலக்க பேதம்
மேவும் யோனி யாமென்(று) உரைப்பர். - பிங்கலங்தை

பிறவிகளின் வகை தொகைகளை இதுவும் குறித்துளது.

பிறப்பு பெருந்துயரங்களோடு பெருகியிருத்தலால் பேரறிவு நிறைந்தபோது அதனை நீங்கி உய்ய மாந்தர் நேர்ந்து வருகின்றனர். அருமையாக அவ்வாறு வருபவரை மெய்ஞ்ஞானிகன் என்று வையம் வியந்து போற்றுகின்றது. பிறவியின் தத்துவங்களை உய்த்துணர்ந்தவர் பிறவாமையைப் பெற முயல்கின்றனர்.

15 முட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில்
நிற்பன நெளிவ தத்துவ தவழ்வ
நடப்பன கிடப்பன பறப்பன வாகக்
கண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்
பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு
20 நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்

கெண்ணான் கறமு மியற்றுதி நீயென
வள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ
அளியன் மாற்றமொன் றிகழாது கேண்மதி
எழுவகைச் சனனத் தெம்ம னோரும்
25 உழிதரு பிறப்பிற் குட்குவந் தம்ம

முழுவது மொரீஇ முத்திபெற் றுய்வான்
நின்னடிக் கமலம் போற்றுப விந்நிலத்
தொருபது வகைத்தாம் யோனிதோ றுழன்றும்
வெருவரும் பிறப்பின் வேட்கைய னாகிநின்
30 சந்நிதி புக்குமத் தாமரைக் கண்ணான்

துஞ்சினன் றுயிலொரீஇ யெழாஅன்
அஞ்சினன் போலுநின் னாடல்காண் பதற்கே. 14 சிதம்பர மும்மணிக்கோவை

நால்வகை நிலையும் எழுவகைப் பிரிவுமாய் எண்ணரிய பிறவிகள் மண்ணுலகில் பரவியுள்ளன. அந்தப் பிறவித் துயர்களுக்கு அஞ்சித் துறவிகளாய் அருந்தவம் புரிந்து ஞானிகள் வீடு பெற விரைந்து முயலுகின்றனர். கமலக் கண்ணனான திருமால் மீன், ஆமை முதலிய பத்துப் பிறவிகளில் படுதுயருழந்தும் விடுதலை பெற முயலாமல் நெடிய துயிலில் நெடுங்கிடையாய்க் கிடக்கின்றாரே; என்னே இது? எனப் பரமனிடம் கவி பரிவோடு உரையாடியிருக்கிறார். இந்தப் பாசுரத்தின் பொருள் நயங்கள் கூர்ந்து சிந்தித்து நன்கு உணரத் தக்கன.

பிறப்பின் விரிவுகள் பெரிய வியப்புகளை விளைத்திருக்கின்றன. சீவப்பிராணிகள சோகப் பிறவிகளில் ஏன் ஓயாது சுழன்று உழலுகின்றன? என்பது யாரும் அறிய முடியாத அதிசய மருமமாயுள்ளது. கருதி உணர்பவர் ஓரளவு உறுதி கூறுகின்றனர்.

விதியின் வழியே யாவும் விரைந்து திரிந்து வருகின்றன.

பிறப்பும் இறப்பும் கணம் தோறும் தொடர்ந்து நடந்து வருதலால் அவை கணித நிலைகளைக் கடந்து நிற்கின்றன.

Every moment dies a man,
To every moment one is born. ('Tennyson)

ஒவ்வொரு நிமிடமும் ஒருவன் பிறக்கிறான்; ஒவ்வொரு நிமிடமும் ஒரு மனிதன் இறக்கிறான் என டென்னிசன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு பாங்கோடு பாடியிருக்கிறார்.

பிறப்பும் இறப்பும் நினைப்பும் மறப்பும் போல் இயற்கையாய் நிகழ்கின்றன. இறந்துபடுவதை யாரும் விரும்புவதில்லை; எல்லாரும் அதனை அஞ்சுகின்றனர். இந்த அச்சம் பிறந்து வருவதில் இல்லை; அதற்குக் காரணம் யாதுமறிய முடியாத பெரிய மருள் நிலையில் அது மருவி வருதலேயாம்.

அச்சமும் திகிலும் அவலமும் கவலையும் யாண்டும் நிறைந்துள்ளமையால் பிறவியை நீங்குவது பேரின்பமாய் நின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-21, 10:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே