ஆட்டும் வினைப்படியே ஆடுகின்ற மானுடங்கள் - இருப்பு, தருமதீபிகை 912

நேரிசை வெண்பா

ஆட்டும் வினைப்படியே ஆடுகின்ற மானுடங்கள்
வீட்டுநினை வின்றி வெறிகொண்டு - மாட்டு
மதியாய் இழிந்து மறுகி யுழந்து
பதிதோறும் நொந்து படும். 912

- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வினை ஆட்டியபடியே ஆடி வருகின்ற மானிடர்கள் பேரின்ப வீட்டை நினையாமல் பேயராய் உழலுகின்றார், அறிவிலிகளாய் வெறிகொண்டு திரிகிற அவர் யாண்டும் துயரமே கண்டு எவ்வழியும் பரிந்து துடித்து மடிகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பாவைக் கூத்தைப் போல் சீவக் கூத்துகளும் நேர்ந்திருக்கின்றன. ஒருவன் ஆட்டுகின்றபடியே பாவைகள் ஆடுகின்றன. சீவர்களும் அவ்வாறே வினைகள் ஆட்டியவாறே ஆடி வருகின்றனர். மனிதனுடைய வரவு செலவுகளும் நினைவு செயல்களும் வினையின் வழியே விரிந்து எவ்வழியும் தொடர்ந்து நிகழ்கின்றன. சீவகோடிகளின் இயக்கங்கள் கருமங்களையும் தருமங்களையும் மருமங்களாய்க் காட்டி வருகின்றன.

இருவினைகளின் படியே பிறவிகள் உருவாகி வந்துள்ளன; ஆகவே இன்பமும் துன்பமும் வாழ்வில் ஊடுருவி யாண்டும் மருவி நிற்கின்றன. நல்வினை நன்கு மிகுந்த பொழுதுதான் ஞானத் தெளிவு தோன்றுகிறது; தோன்றவே வினைகளின் விளைவுகளையும் ஈனத் தொடர்புகளையும் உணர்ந்து மேலோர் சாலவும் வருந்துகின்றனர். அவருடைய உரைகள் உணர்வுகளை அருளுகின்றன.

தரவு கொச்சகக் கலிப்பா

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 2

- 31 கண்ட பத்து, எட்டாம் திருமுறை, திருவாசகம்

தமது ஆன்ம அனுபவத்தை மாணிக்கவாசகர் இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிறார். பிறவி வினையால் விளைந்தது; வேதனைகள் நிறைந்தது; அதிலிருந்து நீங்கி இறைவன் அருளால் உய்ந்தேன் என உணர்த்தியுள்ளமை ஊன்றி உணரவுரியது.

கலிவிருத்தம்
(மா விளம் விளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

கொடிய வெவ்வினைக் கூற்றைத் துரந்திடும்
அடிக ளாம்பொரு ளேருனக் கன்பின்றிப்
படியி லேழைமை பற்றுகின் றேன்வெறும்
மிடியி னேன்கதி மேவும் விதியின்றே. 62

விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட
மதியை யும்விதித் தம்மதி மாயையில்
பதிய வைத்த பசுபதி நின்னருள்
கதியை எப்படிக் கண்டு களிப்பதே. 63 பொன்னை மாதரை, தாயுமானவர்

வினை விதிகளின் நிலைகளை விளக்கிப் பரமபதியை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு பரிவோடு முறை யிட்டிருக்கிறார்.

தாம் புரிந்த வினைகளின்படியே பிறவிகளை அடைந்து யாவரும் உழலுகின்றனர். பிறவித் துயர்களியிலிருந்து நீங்க வேண்டுமானால் மனம் தூயராய் ஈசனை நினைந்துயர வேண்டும் என்பது ஈண்டு அறிய வந்தது. உண்மை உணர்வு ஒளி மிகுந்து உதயமாய போது அரிய பல நன்மைகள் தெளிவாய்த் தெரிகின்றன.

மனிதனுடைய நினைவு செயல்களால் வினைகள் விளைகின்றன; அவற்றின் நலம் தீங்குகளுக்குத் தக்கபடி சுக துக்கங்கள் உளவாகின்றன. கருமங்களின் விளைவுகளைச் சீவகோடிகள் யாண்டும் தொடர்ந்து மருமங்களாய் நுகர்ந்து வருகின்றன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

இருவினை யென்ப மனமுதன் மூன்றின்
..னியற்றுறும் இதமகி தங்கள்
பெருவினைப் பயன்கள் புண்ணிய பாவம்
..பேசுமிக் கருமத்தின் பயன்கள்
மருவிடும் இன்ப துன்பமாம் அவைதாம்
..மாய்வினவ் விருவினை தோற்றும்
ஒருதனு விளைப்ப மற்றொரு தனுவின்
..உணப்படுங் கெட்டுங்கே(டு) இலவாய். 111 நந்தி யுபதேசப் படலம்

இன்பமே பயக்கும் புண்ணியம் எல்லாம்;
..இழிதரு பாவங்க ளெல்லாம்
துன்பமே பயக்கும்; புண்ணிய பாவந்
..தொக்கதம் பயன்தரா(து) ஒழியா;
கொன்படு வினைகள் ஒழியிரு வினையுங்
..குலாவுறு புண்ணிய பாவ
வன்புறு பயனை அப்பயன் போல
..வழங்குறா(து) ஒழிவகை யிலையே. 116 நந்தி யுபதேசப் படலம், தணிகைப் புராணம்

வினையின் நிலைகளை இவை தெளிவாய் விளக்கி யுள்ளன. பொருள்களை நுனித்துணர்ந்து கொள்க. மனிதன் செய்கிற இனிய நல்வினையால் இன்பம் விளைகிறது; கொடிய தீவினையால் துன்பம் வருகிறது. இருவினையும் தம் பயனை எவ்வகையும் ஊட்டி விடுதலால் சுகதுக்கங்கள் யாண்டும் நீண்டு நிலவுகின்றன.

நேரிசை வெண்பா

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்தனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்(து)
எல்லை இகந்தொருவு வார். 33

- அறன் வலியுறுத்தல், நாலடியார்

அல்லல் சேர்ந்தால் அது தாம் முன்பு செய்த பொல்லா வினைப்பயன் என்றே நல்ல அறிவாளிகள் அமைதியாய் அனுபவிப்பார்; அத்தகைய வித்தக விவேகிகளே வினைகள் நீங்கி மேலான கதியை மேவுவர் என இது குறித்துள்ளது.

நல்வினைகளை விடத் தீவினைகளையே அதிகம் செய்து வருதலால் மனித வாழ்வில் யாண்டும் துன்பங்களே நீண்டு நிறைந்து வருகின்றன. அல்லல் வாழ்வு என்று சொல்லி வருவதால் அதன் அவல நிலைகளையும் கவலைப் புலைகளையும் தெளிந்து கொள்ளலாம்.

For Fate has wove the thread of life with pain,
And twins, ev’n from the birth, are misery and man. - Pope

அல்லல் ஆகிய நூலால் வாழ்வை விதி நெய்திருக்கிறது; ஆகவே பிறப்பிலிருந்தே துன்பமும் மனிதனும் இரட்டைக் குழந்தைகளாய் இணைந்துள்ளனர் என ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் பாடியிருக்கிறார். துயரமே உயிர் வாழ்வாயுள்ளது.

ஒருவன் புரிந்த வினையின்படியே பலன்கள் அவனுக்கு விளைந்து வருகின்றன. அவற்றிற்கு அதிகமாய் அயலே விழைவது மயலாய் முடிகிறது. வேலை அளவே கூலி; வினையளவே வாழ்வு என்பது பழமொழியாய் வந்துளதால் நிலைமையை அறியலாம்.

Fate laughs at probabilities. - Lytton

மனிதனது நசையான நம்பிக்கைகளைக் கண்டு விதி சிரிக்கிறது என்னும் இது இங்கே குறிப்போடு சிந்திக்கவுரியது.

உள்ளம் புனிதமாய் நல்லதை நாடிச்செய்; அந்த நல்வினையால் எல்லா இன்ப நலங்களும் உன்னை நாடி வரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-21, 10:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே