22ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 22
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர்: பூ.சுப்ரமணியன்

ஆன்மீக குருவானவர் தன்னிடம் சீடனாகச் சேர்வதற்கு விரும்பி வருபவனிடம் உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் அநித்தியமானவை என்று கூறுகிறார். அவற்றின் மூலம் வரக்கூடிய பெயர், புகழ், பணம், சொத்து போன்றவை அனைத்தும் அநித்தியமானவை என்று விளக்கிக் கூறுகிறார். ஒரு காலத்தில் அவை அனைத்தும் மாறும் அல்லது அழிந்துவிடும். இவையெல்லாம் சீடன் தன்னுடைய மனதில் பதிய வைப்பதற்குரிய அறிவு விவேகம் அவனிடம் சிறிதளவாவது இருக்கிறதா என்பதைக் குருவானவர் அவனை பரிசோதித்து தெரிந்து கொள்வார். இவ்வுலகத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தும், அந்த பொருட்களின் மூலம் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சி எல்லாம் காலவரையறைக்குட்பட்டது. அந்தப்பொருட்களின் மூலம் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சி எல்லாம் ஒரு காலத்தில் அழிந்து விடும். இதனை அறிந்து கொள்ளுவதே விவேகம் என்னும் ஆன்மீக அறிவு ஆகும்.

நல்லவை, கெட்டவை இன்பம் துன்பம் கலந்ததுதான் வாழ்க்கை. இனிப்பு மட்டும் இருந்தால் வாழ்க்கை திகட்டி விடும் அல்லவா? ஒருவன் குருவிடம் சீடனாகச் சேருவதற்கு விரும்பினான். குரு தன்னிடம் சீடனாக சேருவதற்கு விரும்பியவனிடம் ‘’நீ எனக்கு சீடனாக வேண்டுமானால் இன்று முதல் ஐந்து மாதங்களுக்கு நீ இறை சிந்தனையில் தொடர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு நான் கூறியபடி இறைவனைப்பற்றி சிந்தனையில்லாமல் நீ கவனமற்று இருக்கும்போதெல்லாம் உன்னை கண்டிக்கும் நோக்குடன் நான் ஒரு குச்சியால் உன்னை அடித்துக்கொண்டே இருப்பேன்.

நான் உன்னை அவ்வாறு அடிக்காமல் இருக்க வேண்டுமானால் நீ எப்போதும் இடைவிடாது இறை சிந்தனையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வாறு நான் அடிக்கும்போது நீ விழிப்புணர்வுடன் இருந்து தடுத்து விடும்போது நான் உன்னை அடிக்க மாட்டேன். அதற்குத் தயாரா?” என்று குரு சீடனிடம் கேட்டார். அதற்கு அந்த சீடன் சம்மதம் தெரிவிக்கிறான். அவன் பகலில் கவனமுடன் இறை சிந்தனையில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறான். ஆனால் அவனால் இரவில் தூங்கும்போது இறை சிந்தனையில் இல்லாதபோது குருவிடமிருந்து குச்சியால் அடி விழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

இரவில் தூங்கும்போது குருவிடமிருந்து அடிவாங்குவதை தவிர்ப்பதற்காக அதற்கான வழிமுறைகளை பற்றி சீடன் பலவிதங்களில் யோசித்தான். நாள்தோறும் இரவு நேரத்தில் வழக்கம்போல் துாங்கிகொண்டிருந்தான். ஆனால் குரு அவன் அறைக்குள் நுழையும்போது அவனுடைய ஆழ்மனம் ஓரிருமாதங்களில் விழிப்புணர்வு கொள்வதற்கு ஆரம்பித்தது. குரு அறைக்குள் வருவதை சீடனின் ஆழ்மனம் அவனையும் அறியாமல் அவனுக்கு உணர்த்தியது. அதனால் அவன் குருவின்மூலம் அடி வாங்குவதில் இருந்து தப்பித்துக் கொண்டான். குரு அவனிடம்” நீ விழிப்புணர்வு அடைந்து விட்டாய். இனி நீ என்னுடைய சீடனாக இருக்கத் தகுதியானவன்” என்று கூறி அவனை சீடனாக ஏற்றுக்கொண்டார். மனித வாழ்வில் ஆழ்மனதை அறிந்து கொள்வதற்குரிய சீடனின் விழிப்புணர்வு போன்று நிச்சயமாக மனிதனுக்கு தேவை என்பதை இந்த குரு சீடன் கதையின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

மனிதன் ஆழ்மனதிடம் கூறுவதை அல்லது கட்டளையிடுவதை மனம் கேட்டுக்கொண்டு தவறாமல் செய்வதை நமது விழிப்புணர்வு மூலம் உணர்ந்து கொள்ள முடியும். இதனை நாம் எப்படி தெரிந்து கொள்வது? நாம் தியானம் செய்வதற்கு தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் காலை ஐந்து மணிக்கு ஏதோவொரு காரணத்தினால் எழுந்து கொள்வதற்கு முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நாம் இரவு படுக்கப்போகும்பொது நமது ஆழ்மனதிடம் “நான் தியானம் செய்வதற்கு காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். எனவே மனமே தவறாமல் என்னை ஐந்து மணிக்கு எழுப்பி விடு“ என்று ஆழ்மனதிடம் உணர்வுபூர்வமாக கூறிவிட்டு படுத்து நீங்கள் தூங்கி விடுங்கள். காலையில் ஐந்து மணிக்கு அலாரம் அடித்ததுபோல் நமக்கு ஏதோவொரு குரல் ஒலியின் மூலமாகவோ, நாம் காணும் கனவின் மூலமாகவோ நினைவூட்டி நம்மை ஆழ்மனம் தட்டி எழுப்பிவிடும். நமது ஆழ்மனதின் விழிப்புணர்வு காரணமாக காலை ஐந்து மணிக்கு நம்மை அறியாமல் அப்போது எழுந்து விடுவோம்.

மற்றொரு எளிமையான எடுத்துக்காட்டு பார்க்கலாம். பொதுவாக சிறுவர்கள் தீபாவளியன்று புத்தாடை அணிந்து பட்டாசுகள் போடுவதற்கு விரும்புவார்கள். அன்று தீபாவளி ஞாயிற்றுக்கிழமை. ஒரு சிறுவன் ஞாயிற்றுக்கிழமை என்றால் காலை பத்து மணி வரை எந்தக் கவலையும் இல்லாமல் தூங்குவான். வீட்டில் உள்ள யார் வந்து சிறுவனை எழுப்பினாலும், ‘தூக்கம் வருகிறது’ என்று எழுந்தவன் மீண்டும் படுத்து தூங்குவதற்கு ஆரம்பித்து விடுவான். அந்தச் சிறுவன் தனக்கு தந்தையால் வாங்கிவந்த புத்தாடைகளையும் பட்டாசுகளையும் இரவு பார்த்தவுடன் ‘நான் காலையில் சீக்கிரம் எழுந்து புதுசட்டை போட்டுக்கொண்டு இந்த பட்டாசு எல்லாம் போடவேண்டும்’ என்ற ஆசையில் அவனையறியாமல் உணர்வுபூர்வமாக அவன் மனதோடு பேசிக்கொள்கிறான். தீபாவளியன்று அந்தச் சிறுவன் யாரும் எழுப்பாமலே சீக்கிரம் எழுந்து விடுகிறான். அந்தச் சிறுவன் முதல்நாள் இரவில் ஆர்வத்தின் காரணமாக அவனையும் அறியாமல் தன் மனதிற்கு சீக்கிரம் எழுந்து விடவேண்டும் என்று ஆழ்மனதோடு பேசி விட்டான். மனிதனுடைய ஆழ்மனது மிகுந்த சக்தி வாய்ந்தது.

ஒவ்வொரு மனிதனும் ஒரு லட்சியத்தை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறான். ஒருவன் பணத்தினை சேர்க்கவும், உயர் பதவியை அடையவும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். அவன் அந்த இலட்சியத்தை அடைந்தவுடன் சிறிது காலத்தில் அவன் அடைந்த பொருளையோ, பதவியையோ அவனை விட்டுப் போனபின் ஒன்று அதனைப் பற்றி நாள்தோறும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பான். அல்லது வேறு ஒரு லட்சியத்தை நோக்கி அவன் பயணித்துக் கொண்டிருப்பான். நாம் சிறுவனாக இருக்கும்போது மூன்று சக்கர சிறிய சைக்கிளுக்கு பெற்றோரிடம் அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்போம்.

கொஞ்சம் பெரியவனான பின்னர் இருசக்கர சைக்கிள் மீது நாம் ஆசை கொள்வோம். இப்படி மனிதனுடைய வயது ஏறிக்கொண்டு போகும்போது, அவனுடைய ஆசைகளும் இலட்சியங்களும் மாறிக்கொண்டே இருக்கும். அதுபோல்தான் இந்த உலகில் காணப்படும் பொருள்கள், செயல்பாடுகள் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அவைகள் மாறுவதற்கு செயல்படுவதற்கு வேண்டுமானால் சிறிதுகாலம் எடுத்துக்கொள்ளலாம். அந்தப் பொருட்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் அவற்றின் நிலையும் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும். இதனை உணர்வதற்கு நமக்கு ஆன்மீக அறிவு, பக்தி, விவேகம் போன்றவை இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நாம் ஆன்மீகத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்புரிய முடியும்.

ஆன்மிகம் உங்களை பொன்பொருள்களை சம்பாதிக்க வேண்டாம், அதனை அனுபவிக்க வேண்டாம் என்று நமது சாஸ்திரங்கள் இதிகாசங்கள் உபநிடதங்கள் ஒருபோதும் என்று கூறவில்லை. நமது சாஸ்திரங்கள் இதிகாசங்கள் உபநிடதங்கள் அவ்வாறு ஒருபோதும் நீ இந்த உலகில் வாழ்வதற்குத் தேவையான பொன்பொருள்களை, சொத்துக்களை, வசதிவாய்ப்புகளை மட்டும், உடல் உழைப்பினால் நேர்மையான முறைகளில் சம்பாதித்துக் கொள். அதன்மூலம் வரக்கூடிய இன்பங்களை எல்லாம் நன்கு அனுபவித்துக்கொள் என்றுதான் கூறுகிறது. உன்னை உலகில் உள்ள பொருள்களை எல்லாம் வெறுத்து துறவு நிலைக்கு சென்று விடு என்று நமது வேதங்கள் உபநிடதங்கள் இதிகாசங்கள் கூறவில்லை. ஆனால் நீ விரும்பும் அல்லது அடையும் பொருள்களினால் வரக்கூடிய இன்பங்கள் சுகங்கள் எல்லாம் நிரந்தரமானவை அல்ல என்பதை மட்டும் உன் மனதில் நிலை நிறுத்திகொண்டு, உலகில் நீ செயல்புரிய வேண்டும். அவ்வாறு நீ செயலாற்றும்போது மனதில் ஒருவிதமான அமைதி உன்னை அறியாமல் ஏற்பட்டு விடும். அதன்மூலம் உலகில் நீ அமைதியான வாழ்வைப் பெறுவதற்கு முடியும். ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ள விவேகத்தின் மூலம் அறிந்து கொண்டு, முயற்சி செய்வதோடு ஆன்மீகப் பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

மனஅமைதியும் ஒருவிதமான ஞானம் ஆகும். மனிதனுக்கு ஞானத்தை அடையவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதனை அடைவதற்கு உரிய கருவியினால்தான் முடியும். எடுத்தக்காட்டாக ஒரு மலரை ஒருவர் சிறிது தூரத்தில் வைத்துக் கொண்டு அந்த மலரின் வாசனை என்ன என்று மற்றொருவரிடம் கேட்டால். அவர் கண்ணால் அந்த மலரைப் பார்த்துக்கொண்டு கூறமுடியாது. அந்த மலரை மூக்கினால் நுகர்ந்து பார்த்துதான் வாசனையை கூறமுடியும். அதேபோல் அந்த மலரின் நிறம் என்ன என்பதை மூக்கினால் அறிந்து கொள்ள முடியாது, அவர் தன் கண்களால் பார்த்துதான் பூவின் நிறம் அமைப்பு இதழ்கள் எத்தனை என்ன என்பதுபற்றி கூறமுடியும். அந்த மலரின் பெயர் என்ன என்று கேட்டால் கண்ணாலோ மூக்கினாலோ கூறமுடியாது வாயினால்தான் கூறமுடியும்..

எனவே ஒரு பொருளின் தன்மையைப்பற்றி அறிந்து கொள்ளவோ கூறவோ அதற்குரிய கருவியின் மூலம்தான் அறிந்து கொள்ள அல்லது தெரிவிக்க முடியும். மலரின் மென்மையை உணர்வதற்கு வேண்டும் என்றால் அதனை கையினால் தொட்டு உணர்ந்துதான் கூறமுடியும். அதேபோல்தான் ஒரு பொருளின் தன்மையை அறிய வேண்டுமானால் அதை உணரக்கூடிய கருவியின் மூலமாகத்தான் அறியமுடியும். நாம் ஞானத்தை அறிய வேண்டுமானால் ஆன்மீக அறிவு என்னும் கருவியின் மூலம்தான் அறியவோ உணரவோ முடியும். ஞானத்தை கொடுக்கக்கூடிய உயர்ந்த கருவிதான் ஆன்மீக அறிவு எனப்படும். இத்தகைய ஆன்மீக அறிவு ஒரு மனிதனிடம் இருந்தால்தான், அவன் தியானம், தவம், பக்தி போன்றவைகளில் ஈடுபடுவதற்கு முடியும்.

சிலபேர் கண்களை மூடிக்கொண்டு தனிமையில் தியானம் இருந்தால் ஞானம் கிடைத்து விடும் என்று நினைத்துக் கொள்வர். அப்படிச் செய்வதால் நமது குழம்பிய மனதுக்கு வேண்டுமானால் ஒரு தெளிவு கிடைக்கும். அதன் மூலம் தற்காலிகமாக ஒருவிதமான மனஅமைதிகூட கிடைக்கலாம். இந்த உலகத்தைப் பற்றிய நிலையாமைப் பற்றி அறிவு நமக்கு வரவேண்டும். எந்ததெந்தக் கருவியைப் பயன்படுத்தினால் இந்த நிலையாமை பற்றி அறிவு கிடைக்கும் என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாஸ்திரங்கள் இதிகாசங்கள், உபநிடதங்கள் இந்த உலகத்தின் நிலையாமையைப் பற்றி தெளிவாக நமக்கு எடுத்துக் கூறுகிறது. அறிவியல் மூலம் பௌதிகம் படிக்கிறோம் என்றால் அதன் மூலம் ஒரு பொருளின் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளமுடியும். இரசாயனம் பற்றி படித்தால், ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் கலக்கும்போது அந்தப் பொருளில் ஏற்படும் மாறுதல்தன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மனிதர்களின் மனநிலை, செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளவேண்டுமானால் மனோதத்துவ நூல்கள் மூலம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது, மனிதனுடைய அனுபவத்தின் மூலம்தான் முழுமையாக அறிந்து கொள்வதற்கு முடியும். ஆன்மீக ஞானம் இந்த உலகத்தில் உள்ள பொருள்களின் நிலையாமைப் பற்றி தெளிவுபடுத்துகிறது. இந்த நிலையாமைப் பற்றி தெளிவு பெறும்போது நமக்கு மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்த உலகில் காணப்படும் பொருட்களின் மூலம் நமக்கு வரக்கூடிய இன்பத்தை சுகத்தை அடைவதற்கு இந்த மனம் ஏக்கம் கொள்வதில்லை. இந்த நிலையில்லாத பொருள்களின்மீதும் நமக்கு தீராத ஆசை உண்டாகாது. உலகில் காணும் பொருள்களின்மீது ஆசை இல்லை என்றால் மனஅமைதி தானாக நம்மை அடைந்து விடும். புத்தபகவான் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று போதித்தார். திருமூலர் ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனுடனாலும் ஆசை அறுமின்கள் என்று ஆசைக்கு அணை கட்டச்சொல்கிறார்.

நமது அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஒத்துப்போகவேண்டும் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. நமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போதுதான் நமது அறிவு தெளிவடைகிறது. ஆன்மீகத்தில் எது காரியமோ அது அநித்தியம், எது காரணமோ அது நித்தியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனைப்பற்றி மனதிற்குள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டாக மரத்தில் மேஜை, நாற்காலி, சிற்பங்கள் பொம்மைகள் போன்ற பலவிதமான பொருள்களை அழகியமுறையில் செய்கிறோம். அல்லது அவற்றை நம் கண்களால் பார்க்கிறோம். அந்த மரச்சாமான்கள்களை நாம் நினைத்தால் உடைத்து விடலாம் அல்லது நாளானால் அந்தப்பொருள்களே தானாகவே உடைந்து விடலாம். ஆனால் அந்தப் பொருட்கள் செய்வதற்கான மரம் என்ற மூலப்பொருள் அழிவதில்லை அது நித்தியம் ஆகும். மரமானது நாற்காலி மேசை, மரப்பொம்மைகள் என உருவங்கள் மாறலாம் ஆனால் மரம் என்ற மூலப்பொருள் என்றும் மாறாத பொருள் ஆகும்.

தங்கத்திலிருந்து பலவிதமான அழகிய ஆபரணங்கள் செய்யலாம். அந்த ஆபரணங்களுக்கு காசுமாலை, ஒட்டியாணம் நெக்லஸ் போன்ற பெயர்களும் உண்டு. காசுமாலை துண்டு துண்டாக அறுந்து விட்டாலோ, பழுது பட்டாலோ அதன் பெயர் காசுமாலை என்று கூறுவதில்லை. ஆனால் அது உருவாவதற்கு காரணமான தங்கம் என்ற மூலப்பொருள் மட்டும் மாறுவதில்லை. தங்கத்திலிருந்து காசுமாலை செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் காசுமாலை என்பது காரியம் ஆகும். காரியம் என்பது அநித்தியம் என்று ஆன்மிகம் கூறுகிறது. காசுமாலையை நாம் நினைத்தால் நெக்லஸ் ஆக மாற்றி செய்து விடலாம்.

காரணம் என்பது அநித்தியம் என்று ஆன்மிகம் கூறுகிறது. தங்கம் என்பது காரணப் பொருள். ஆனால் தங்கம் என்ற மூலப்பொருளைகொண்டு நாம் நினைத்தபடி வேறு ஒரு மூலப்பொருளாக மாற்றுவதற்கு முடியாது. அதாவது தங்கத்தை வெள்ளியாகவோ பித்தளையாகவோ மாற்றுவதற்கு முடியாது தங்கத்தினால் காசுமாலை என்ற நகை செய்கிறோம். காசுமாலை செய்வதற்கு தங்கம் என்பது காரணமாக இருக்கிறது. இந்த உலகமே காரண காரியங்களினால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். மனிதனுடைய வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் அடிப்படையிலேயே தவறானவைகளாக நம்முடைய மனதில் சில தீய எண்ணங்கள் செயல்கள் எல்லாம் அறிந்தும் அறியாமல் நன்கு பதிந்து விட்டன.

அதாவது அவைகள் மனதில் குப்பைகள்போல் சேர்ந்து விட்டன. அவ்வாறு தவறானவையாக நம் மனதில் பதிந்து விட்டதை குப்பைகளை அகற்றுவதைப்போல் நம் மனதிலிருந்து நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நமது வாழ்க்கை பற்றிய உண்மைகளை நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆன்மீக அறிவு வைராக்கியம் போன்ற பண்புகள் இருந்தால்தான் நாம் தேடும் விரும்பும் மனஅமைதி கிடைக்கும். நமது வாழ்க்கை பற்றிய தெளிவு கிடைக்க வேண்டுமானால் ஆன்மீக வழியில் சென்றுதான் நாம் நிரந்தரமான மனஅமைதியைத் தேடவேண்டும். நித்தியமான நிரந்தரமான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம்தான் வழி காட்டுகிறது என்பதை உணர்ந்துகொண்டு, அதன்படி நாம் செயல்புரியவேண்டும்.

ஸ்ரீ ரமணமகரிஷி நமது வாழ்வின் மனஅமைதிக்கு மூன்று விசயங்களை வாழ்வில் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். முதலாவது தவறிப்போன பொருட்களைப் பற்றியோ நடந்து முடிந்த செயல்பாடுகளைப் பற்றியோ கவலைப்படக்கூடாது. அவ்வாறு தவறிப்போனதைப்பற்றி மனிதன் மனதில் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதால் அவனிடம் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது. அதனால் அவன் மன அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் இழக்க நேரிடலாம். அதனால் அவன் வாழ்வில் அமைதியைக் காணமுடியாது.

இரண்டாவது மனிதன் தவறிப்போன பொருட்களாகவோ நடந்து முடிந்த செயலாகக்கூட இருக்கலாம். அதுபற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் தவறிய பொருளோ அவனுடைய கடந்தபோன செயலோ கடந்த காலமோ திரும்ப வரப்போவதில்லை. எதற்காக தவறிய பொருளை பற்றி மனதில் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு உனது பொன்னான நேரத்தையும் மன அமைதியையும் கெடுத்துக்கொண்டு இருக்கிறாய். நாம் தவறிய பொருள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு இல்லை. தவறிய பொருளைப்பற்றி இடைவிடாது நினைத்துக் கொண்டே இருப்பதுதான் தவறு. தவறிய பொருளைப் பற்றி மனம் கவலைப்படாமல் நமது மனம் பக்குவம் அடைவதற்கு ஆன்மிகம் வழி காட்டுகிறது.

நம்மிடம் உள்ள ஒரு பொருள் தொலைந்து போனால் அல்லது காணாமல்போன பொருள் பற்றி நாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், கிராமங்களில் உள்ள பெரியவர்கள் பேச்சு வழக்கில் ‘ஏன் வீணாக தொலைந்துபோன பொருளைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறாய்? உன்னோட பொருளாக இருந்தால் அது எப்படியும் திரும்பவும் உன்னிடமே வந்து விடும்.’ என்று ஆறுதலாக கூறுவதைக் கேட்டிருப்போம். இதனை கீதாசாரம் “உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ உலகுக்கு கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு“ என்று கூறுகிறது. இந்த கீதாசாரத்தின் அமுதமொழிகளை நாம் மனதில் உணரும்போது நம்மை அறியாமல் நாம் மனஆறுதலையும் மனஅமைதியையும் பெறுவதை நாம் உணரலாம்.

மூன்றாவது பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தவிதமான பயனும் ஏற்படுவதில்லை. பிறருடைய நற்குணங்கள் நல்லபண்புகளை நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி வாழ நினைப்பது தவறு இல்லை. ஆனால் மற்றவர்களிடம் இருக்கும் பொன்பொருள், சொத்து, பதவி செல்வாக்கு போன்றவற்றை நம்மோடு ஒப்பிட்டு ஒருபோதும் பார்க்கக் கூடாது. இதனைத்தான் மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டு ஒருபோதும் பார்க்காதீர்கள் என்று ரமணமகரிஷி கூறுகிறார். மற்றவர்களிடம் இருக்கும் சொத்து, பணம் பொருள், பதவி, செல்வாக்கு போன்றவற்றை நம்மோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் பொறாமை, பகை, வெறுப்பு போன்றவைகள் நம்மையறியாமல் நம் மனதில் புகுவதற்கு இடம் உண்டு.

எல்லா மனிதர்களையும் திருப்திபடுத்த நினைப்பது அது தேவையற்ற நம் மீது நாமே ஏற்றிக் கொள்ளும் மனச்சுமையாகும். எடுத்துக்காட்டாக நீ பணிபுரியும் நிறுவனத்தில் உனக்குக்கீழ் பணிபுரியும் ஊழியர் ஒரு தவறு செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதனை தட்டிக் கேட்பதுதான் உனது கடமையாகும். அதற்கு மாறாக அந்த ஊழியர் உனது மேலதிகாரிக்கு வேண்டப்பட்டவராகவோ அல்லது அவரது உறவினராகவோ இருப்பது தெரிந்துகொண்டு தவறு செய்த ஊழியரைத் தட்டிக் கேட்காமல் இருந்தால் அந்த ஊழியருக்கும் மேலதிகாரிக்கும் வேண்டுமானால் திருப்தியாக இருக்கும். ஆனால் நீ பணிபுரியும் நிறுவனத்துக்கு துரோகம் செய்து விட்டதாக உன்னொட மனம் உன்னையும் அறியாமல் நாள்தோறும் உன்னை வருத்திக்கொண்டேயிருக்கும்.

இந்த மனச்சுமையை நீயேதான் உன்மீது ஏற்றிக்கொண்டு உடலளவில் மனதளவில் கஷ்டப்படுகிறாய். அந்த ஊழியரையும் மேலதிகாரியையும் திருப்திபடுத்த தேவையற்ற மனச்சுமையை உன்னிடம் வரவழைத்துக் கொண்டாய். எந்தநிலையிலும் உனது கடமையிலிருந்து தவறக்கூடாது. என்று ஆன்மிகம் வலியுறுத்திக் கூறுகிறது. கீதையில் ‘கடமையைச் செய்’ என்றுதான் கூறுகிறது. எல்லா மனிதர்களையும் திருப்திபடுத்த நினைப்பது மனச்சுமையை மனதில் ஏற்றிக்கொள்வதால் உன்னுடைய மன அமைதியை இழக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (8-Nov-21, 5:50 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே