கனிமரம்போல் யார்க்கும் கனிந்து புனிதர் இனியவர் ஆகி இருப்பர் - பிறப்பு, தருமதீபிகை 908
நேரிசை வெண்பா
கனிமரம்போல் யார்க்கும் கனிந்து புனிதர்
இனியவர் ஆகி இருப்பர் - துனிமிகுந்த
எட்டி மரம்போல் இழிமக்கள் எவ்வழியும்
கெட்டதே செய்வர் கிளர்ந்து. 908
- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:.
இனிய கனி மரம் போல் எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து செவ்விய புனிதர் சிறந்து திகழ்கின்றார்; வெவ்விய தீயர் எட்டி மரம்போல் எவ்வழியும் கெட்டதே செய்து கேடாய் நிற்கின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர். நல்லவர் நிலையும் தீயவர் புலையும் தெரிய வந்தன.
ஒருவன் பிறந்த பிறப்பு சிறப்பாயுயர்ந்து விளங்குவது அவனுடைய இனிய குண நீர்மைகளாலேயாம். மனம் மொழி மெய் புனிதமாய் இனிமை தோய்ந்து வரவே அவன் ஒரு மனித தெய்வமாய்த் தனி மகிமை வாய்ந்து திகழ்கின்றான்.
அன்பும் பண்பும் நிறைந்த உள்ளம் கனிந்து உயர்ந்தபோது அந்த மனிதனை உலகம் விழைந்து புகழ்ந்து வருகிறது. அரும்பு, மலர், காய்கள் மரங்களில் நிறைந்திருந்தாலும் கனிகள் விளைந்த பொழுது தான் பறவைகள் அங்கே விரைந்து வருகின்றன. இனிய பலன்கள் எவ்வுயிர்க்கும் இன்பம் தருகின்றன. அயலார் உவந்து வாழ இயல்பாய் இசைந்து வாழ்பவன் சமுதாயத்தில் உயர்வாய் இசைபெற்று ஒளி வீசி மிளிர்கின்றான்.
நல்ல நீர்மைகள் உள்ளத்தில் சுரந்துவரின் அந்த மனிதன் உலகத்தில் உயர்ந்து திகழ்கிறான். பிறந்த ஒருவன் பெருந்தகையாளன் என்று விளங்கி வருவது சிறந்த பேறாம். சொல்லும், செயலும் நல்லனவாயின் அவனை எல்லாரும் உள்ளம் உவந்து போற்றுகின்றனர். அவனுடைய கருமங்கள் தருமங்களாம்.
குளிர் நிழலைத் தந்து இனிய கனிகளை உதவி உயிரினங்களுக்கு இயல்பாகவே இதம் புரிந்து வருதலால் கொடை வள்ளல்களுக்கு மரங்கள் உவமானங்களாய் வந்தன.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 217 ஒப்புரவறிதல்
உயர்ந்த பெருந்தகையாளனுடைய செல்வம் சிறந்த மருந்து மரம்போல் பலர்க்கும் இதமாய் இனிது பயன்படும் என வள்ளுவர் இங்ஙனம் உபகார நிலையை உணர்த்தியிருக்கிறார். மருந்து என்னும் சொல் நிறைந்த பொருள்களையுடையது. உடல் நோய்களைத் தீர்த்து உயிர்க்குறுதி நலங்களை அருளுவது மருந்து என வந்தது. இனிய இதங்கள் அரிய அமுதங்களாகின்றன.
உற்ற துயர்களை நீக்கி மக்களுக்கு உதவிபுரிந்து வருபவன் உயர் குலமகனாய் ஒளி மிகப் பெறுகிறான். உயிர்கள் இன்புற ஒழுகி வருபவன் உருவத்தில் மனிதனாயினும் உண்மையில் தெய்வமாய் அவன் உயர்ந்து நிற்கின்றான்.
எவ்வழியும் தன் நலமே நாடியுழல்பவன் தக்க நலங்களை அடையாமல் வாழ்வில் தாழ்வுறுகிறான்; பிறர்க்கு இதம் கருதி வருபவன் பெரிய மேன்மையாளனாய் அரிய கதிகளை எளிதே அடைகிறான். எண்ணம் இனிதாய் வரப் புண்ணியம் வருகிறது.
ஒரறிவுடைய மரமும் நிழல் முதலியன உதவி விழுமிய வாழ்வின் நிலையை ஆறறிவுடைய மனிதனுக்கு அறிவுறுத்தி வருகிறது; அந்த உபகார நீர்மை மதிநலம் சுரந்து அதிசய போதனையாய்த் துதி கொண்டு யாண்டும் மகிமை தோய்ந்துள்ளது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
இலைதழை தளிர்க ளாலும் இனியநல் நிழல்க ளாலும்
அலர்மலர் கனிக ளாலும் அடியுறு வேர்க ளாலும்
பலவுயிர்க் கிதமாய் நின்று பயன்படு மரம்போல் தன்னை
உலகினுக்(கு) உதவி நின்ருன் உயர்பர னாகி நின்றான்.
சீவர்களுக்கு இதம் செய்து வருபவனிடம் தேவதேவனுடைய திருவருள் ஆவலோடு வந்து அவர் எவ்வழியும் திவ்விய நிலைகளைச் செவ்விதாய் எய்தித் தேசுறுகிறார்.
எங்கே உபகார நீர்மைகள் பொங்கி வருகின்றனவோ அங்கே கடவுளுடைய கருணை ஒளி தங்கி யிருக்கின்றது. வெளி ஆடம்பரங்களாகக் களியாட்டங்கள் புரிந்து வள்ளல் எனப் பிறர் சொல்ல வேண்டும் என்னும் நசையோடு செய்யாமல் உள்ளப் பண்புடன் உவந்து புரிவதே உயர்ந்த மேன்மையாம். இயல்பான இனிய உதவி உயர்வாய் ஒளி புரிகின்றது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
பிறர்புக ழினைக்கைம் மாற்றைப்
= பேணியே யுதவி செய்வோர்
அறமுளா ரல்லர் நித்தன்
= அருட்குமே யருக ரல்லர்
திறவலக் கரஞ்செய் நன்றைத்
= திகழிடக் கரங்கா ணாமல்
வறியர்பாத் திரம றிந்து
= வழங்குவோர் மாட்சி யோரே. 6
மக்கடம் பொறையைத் தாங்கு
..மகிக்குமன் னாரைக் காக்க
மிக்கநீர் பொழியா நின்ற
..விண்முகி லினுக்குஞ் செய்யத்
தக்கவோ ரெதிர்நன் றுண்டோ
..சமயத்தோர் பயனும் வேண்டா(து)
ஒக்கவே செய்த நன்றி
..யுலகினும் பெரிதா மாதோ. 7
மன்னிய கனிகாய் நீழல்
= மற்றெலா முதவிப் பின்னுந்
தன்னையு முதவா நின்ற
= தருவெனத் தங்கை யார்ந்த
பொன்னெலா முதவிப் பின்னும்
= பூட்சியா லுழைத்திட் டேனும்
இன்னுயி ருதவி யேனும்
= இடுக்கண்தீர்ப் பார்நல் லோரே. 8
- கைம்மாறு கருதா உதவி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல், நீதி நூல்
இவை இங்கே கூர்ந்து நோக்கி ஓர்ந்து சிந்திக்கத் தக்கன.
கனிவான இனிய தன்மையளவே மனிதன் இன்ப நிலைகளை அடைகிறான்; இந்த நல்ல நீர்மை இல்லையாயின் அவன் பொல்லாதவனாய்ப் புலையுறுகின்றான். எட்டி மரமாய் இழிந்து போகாமல் இனியனாயுயர்ந்து தனியே இசை மீக் கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.