ஓடும் நினைவோ ஒருகோடி மனத்தை மருவி யுளவரை தீய துயரே தெளி - இருப்பு, தருமதீபிகை 918

நேரிசை வெண்பா

ஆடும் திரிகை அரைச்சுற்(று) அடையுமுனே
ஓடும் நினைவோ ஒருகோடி; - கூடியயிம்
மாய மனத்தை மருவி யுளவரையும்
தீய துயரே தெளி. 918

- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆடுகிற திரிகை அரைச் சுற்று வருமுன் ஒரு கோடி நினைவோடு ஓடிவருகிற மாய மனம் மருவியுள்ள வரையும் தீய துயரங்கள் ஒழியாது; அம்மாயம் ஒழியின் மகிமை விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இராகி, வரகு முதலிய தானியங்களை அரைத்து மாவாக்கும் யந்திரத்துக்குத் திரிகை என்று பெயர். சுழன்று திரிந்து வருவது என்னும் காரணக் குறி அமைந்தது. அது அரைச்சுற்று வருமுன்னரே மனிதனுடைய மனம் உலக முழுவதையும் பலமுறை சுற்றி அலகிலாத அடலோடு யாதும் சலியாது வந்து விடும்,

அதிசய வேகத்துக்குக் காற்றை உவமை கூறுவர்; அதனிலும் கடுவேகம் உடையது மனம். வாயுவேகம், மனோவேகம் என்பன பழமொழிகளாய் வந்துள்ளன. ஒரு நிலையில் இன்றி ஓயாமல் ஓடியுழல்வதே மனத்தின் இயல்பாய் மருவியுளது. அத ஆட்டியபடியே மனிதன் ஆடி வருகிறான். நீர்மை தோய்ந்து மனம் நெறியோடு அமைந்து நிற்பின் அந்த மனிதன் பெரிய மகானாய்ப் பேரின்ப நிலையைப் பெறுகிறான்; அது வெறி கொண்டு திரிய நேர்ந்தால் அவன் பேயனாயிழிந்து பெருந்துயரங்களை அடைகிறான். ஆசை மோகம் எனப் பேசுகின்ற மோசங்கள் யாவும் நினைவின் வழியே நெடிது நிமிர்ந்து நிலாவுகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

காதலெனும் மனைவியின்பின் செல்கின்ற மனமென்னும்
கடிய ஞானி
பேதமைமே வியஎன்னைப் பிணந்திண்ணு மாறுபோல்
பிடுங்கித் தின்னும்
மோதுபெருங் காற்றினால் முறிந்தெழுந்த துரும்புபோல்
மோகம் எய்த
வாதைமனம் பெரும்பாழின் மிகவீழ அதிதுாரம்
மலங்கத் தள்ளும். 1

வேரறுபொய் யாய்ச்செறிந்த வடிவாகி விசாரத்தால்
விரோதம் ஆகும்
கோரமனம் பேய்பிடித்த சிறுவரைப்போல் பலதொழிலில்
கூட்டா நிற்கும்
பாரகன்று பாதலம்போம் பாதலத்தின் நின்றகன்று
பாரில் மீளும்
சோரமனம் கிணற்றுமரம் பழங்கயிற்றால் எடுப்பதுபோல்
தொழிலில் தள்ளும். 2

கடுமனவன் பேய்கனலில் கொடிதாகும் மலைகளினும்
கடத்தற்(கு) ஒண்ணா
நெடுவயிரத் தினும்வலிது கடல்பருகி மேருவினை
நேரே பேர்த்துச்
சுடுகனலை விழுங்குகினும் நிறுத்தரிது புலன்முழுதும்
தோன்று மூலம்
கெடுமுல(கு)ஈ துண்டெனி(ல்)உண் டிலதாகில் இலதிதனைக்
கெடுத்தல் வேண்டும். 3 ஞான வாசிட்டம்

மனநிலைகளைக் குறித்து மகான்கள் இவ்வாறு கருதியுள்ளனர். உருவக வகையில் மருவி வந்துள்ள பொருள்நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். மானச மருமங்கள் அதிசய விளைவுகளாய்ப் பெருகி வினைநிலைகளை விளக்கியிருக்கின்றன.

கடல்களைப் பருகிவிடலாம்; மலைகளை எடுத்து எறியலாம்; கனல்களை விழுங்கலாம்; வேறு எதையும் செய்து முடிக்கலாம் மனதை அடக்க முடியாது; இதனை அடக்கி ஒழித்தால் ஒழியப் பிறவித் துயரங்கள் ஒழியா; உயிர்க்கு உய்தியில்லை; ஒரு கதியும் கிடையாது எனக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது.

உலகப் பொருள்களை ஓயாது அவாவி, தேக போகங்களை வேகமாய் விழைந்து மோக மயக்கங்களில் நீண்டு மூண்டு வருவனவெல்லாம் நீண்ட துன்பங்களுக்கே நிலையான காரணங்களாய் நிலைத்து வருகின்றன. துக்க விளைவு தெரியாது புரிகின்றனர்.

கூடிவந்த அரிய பிறவியால் அடையவுரிய பயனை யாதும் உணராமல் அயலே மயலாயோடி அவல ஆசைகளை மனம் விளைத்து வருதலால் துறவிகளும் தவசிகளும் ஞானிகளும் அதனோடு மாறாய் யாண்டும் மூண்டு போராடி வருகின்றனர்.

இமையளவு போதையொரு கற்பகா லம்பண்ணும்
இவ்வுலகம் எவ்வுலகமோ
என்றெண்ணம் வருவிக்கும் மாதர்சிற் றின்பமோ
என்னில்மக மேருவாக்கிச்
சுமையெடுமி னென்றுதான் சும்மாடு மாயெமைச்
சுமையாளு மாக்கிநாளுந்
துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தி யாவையுஞ்
சூறையிட் டிந்த்ரசாலம்
அமையவொரு கூத்துஞ் சமைந்தாடு மனமாயை
அம்மம்ம வெல்லலெளிதோ? 4

- 11. சச்சிதானந்த சிவம், தாயுமானவர்

மனத்தின் மாயசாலங்களை விளக்கித் தாயுமானவர் இவ்வாறு மறுகியிருக்கிறார். புலன்களை அடக்கிப் புனித நிலையில் பரமான்மாவை மருவி மகிழ்ந்த இராசயோகியாதலால் இடை யிடையே மனம் சலனம் அடையும் பொழுது அதனோடு இதமாய் வாதாடியுள்ளார். அந்த வுண்மையை அவருடைய வாய்மொழிகள் தெளிவாக்கியுள்ளன. மனமாயை என்றது நினைவுற வுரியது,

கொச்சகக் கலிப்பா

வஞ்சமோ பண்டையுள வாதனையால் நீஅலைந்து
கொஞ்சமுற் றாயுன்னைக் குறைசொல்ல வாயுமுண்டோ
அஞ்சலஞ்சல் என்றிரங்கும் ஆனந்த மாகடற்கீழ்
நெஞ்சமே என்போல நீயழுந்த வாராயோ. 4

வந்த வரவை மறந்துலகாய் வாழ்ந்துகன்ம
பந்தமுற உன்னைப் படிப்பிக்கக் கற்றவர்யார்
இந்தமதி ஏன்உனக்கிங் கென்மதிகேள் என்னாலே
சந்ததநெஞ் சேபரத்திற் சாரினின்பம் உண்டாமே. 7 - 29. ஏசற்ற அந்நிலை, தாயுமானவர்

தம் உள்ளத்தோடு அம்மாதவர் உரையாடியுள்ள உணர்வு நலன்களை இங்கே ஓர்ந்து தெளிகிறோம். மனம் நல்லதானால் அந்த மனிதன் எல்லா நன்மைகளையும் எளிதே அடைகிறான்: அது தீயதேல் எவ்வழியும் கொடிய அல்லல்களையே அவன் அடைய நேர்கின்றான்.

இனிய நீர்மையில் மனம் பழகிவரும் அளவே மனிதன் புனிதனாயுயர்ந்து தனி மகிமைகளைப் பெறுகிறான்.

The mind makes a man noble. - Seneca

மனிதனை மேன்மையாக்குவது மனமே என இது குறித்துளது.

அமைதியான மனம் அதிசய நிலைகளில் உயர்த்தி ஆனந்தத்தை அருளுகிறது. தன் உள்ளத்தை அடக்கி ஆள்பவன் உயர்ந்த மகானாய் ஒளிபெற்று நிற்கின்றான். அவ்வாறு அடக்காமல் அதன் வழியே உழல்பவன் அறிவிலியாய் இழிந்து கழிகிறான்.

A wise man will be master of his mind,
a fool will be its slave. (Syrus)

தன் மனத்தை அடக்கி ஞானி தலைவனாய் நிற்கிறான்; மூடன் அதற்கு அடிமையாய் அலைகிறான் என்னும் இது ஈண்டு அறிய வுரியது. சிறந்த மேதைக்கும் இழிந்த பேதைக்கும் உள்ள வேற்றுமையை இங்கே தெரிந்து கொள்கிறோம். உள்ளத்தை வசப்படுத்திய அளவு மனிதன் உயர்ந்து திகழ்கின்றான்.

கலிநிலைத்துறை
(மா விளம் விளம் விளம் மா)

இசையும் இன்பமும் இனியநல் இதயத்தால் எய்தும்;
வசையும் துன்பமும் மாசுறு மனத்தினால் மருவும்:
அசைவில் ஆண்மையாய் அதிசய நிலையுற அமைந்தார்
நசையை வென்றனர் நன்னெறி நின்றனர் நயந்தே.

இதன் பொருளை உணர்ந்து புனிதனாய் உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-21, 5:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே