உதிராப்பூக்கள் மதிப்புரை புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் தொகுப்பாளர் எழுத்தாளர் ஆத்மார்த்தி
மதிப்புரை புதுவைத் தமிழ்நெஞ்சன் !
ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் தொகுப்பாளர் எழுத்தாளர் ஆத்மார்த்தி !
மனதுக்குள் பொழிகின்ற
மாமழையாய் இருக்கின்ற
மதிமிகு தோழர் இரா. இரவி அவர்களின்
"உதிராப் பூக்கள்" துளிப்பா நூலில் பற்றி
துளிப்பா களஞ்சியம் இரவி
மூச்சு விடுவதைப் போல
ஆழிப் பேரலைப்போல
அடங்காத அலங்காநல்லூர் காளைப் போல ...
முப்போதும் மூவடியான பாவடியை
எழுதிக் கொண்டிருக்கிறார்.
மழையாய் பெய்துகொண்டிருக்கிறார்
நன்றாக உழுதுக் கொண்டிருக்கிறார்
களைகளை பறித்துக் கொண்டிருக்கிறார்
கதிர்களை அறுத்துக் கொண்டிருக்கிறார்
களஞ்சியத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்
உழவர்களின் பசியை தீர்த்துக் கொண்டிருக்கிறார்
உண்மையாக உயிர்நேயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்
உதிரிப்பூக்களின் மணமாய் மணந்து கொண்டிருக்கிறார்
அதனால்தான்
தமிழ்நெஞ்சன் அதன் மணத்தை நுகர்ந்து கொண்டிருக்கிறார ்
புதுவைத் தமிழ்நெஞ்சத்தில் துடிப்பாய் துடித்துக் கொண்டிருக்கிறார்
நட்புக்கு இலக்கணமாகவும்
துளிப்பா இலக்கியமாகவும்
விளங்குகின்ற வீறுமிக்கவர்.
தமிழ்ச்சாறு மிக்கவர்.
நற்பேறு மிக்கவர் இரவி
பிறமொழிகள் கலவாத தனித்தமிழ்ப்
போல.. துளிப்பாவில் தனித்துவம் கொண்டவர்.
தமிழ்நெஞ்சத்தை வென்றவர்.
துளிப்பா உலகில் நிமிர்ந்து நின்றவர்
அன்புநெஞ்சங்களில் உள்ளவர், நல்லவர்
வல்லவர் இரா. இரவி
சிந்தனைக்கு விருந்தளிக்கும்
சிந்துப்பாவென துளிப்பாவிற்கு சொந்தக்காரர், நம் உறவுக்காரர் இரவி
தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல துளிப்பா சுரங்கமாக தோழர் இரா. இரவி இருக்கிறார்
மிகச்சிறந்த பண்பாளர், அன்பாளர் அறிவாளர் , ஆற்றல் மிக்கவர்.
ஆன்றோர், சான்றோர் போன்றோர் மதிக்கின்ற தூயர், உயிர்நேயர் இரவி
எதைப் பார்த்தாலும் அதனை துளிப்பாவாக மாற்றுகின்ற நுண்ணறிவு பெற்ற பேரறிவாளர் இரா. இரவி
சுருக்கென என்று மட்டும் சொல்லாமல்
நறுக்கெனவும் நற்துளிப்பா படைப்பவர்
இருக்கின்ற சூழலை மறைக்காமல்
நெருப்பாய் நிமிர்ந்து உழைப்பவர் இரவி
தன் சிந்தனை முகிலில் இருந்து சிந்திய மழைத்துளியால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமான மாமழை குளம், குட்டை,ஆறு, ஏரி எல்லாம் நிரம்பி வழிந்து மதகு திறந்து விட்டதும் வெளியேறி வயல்வெளியில் பாய்ந்து விளைச்சல் தருவதைப் போல இரவின் துளிப்பாக்கள் ஒவ்வொன்றும்
உயிர்ப் பாக்கள், உணர்வுப் பூக்கள்
மழை நின்ற பின்னும்
மழை
மரத்திலிருந்து... 01
மரத்தை நட்டால்தான் மழை பொழியும். காடே மழை முகிலின் தாய்வீடு. காடழிந்தால் நாடழியும் வீடழியும் உயிர்கள் அனைத்தும் அழியும்
உயிர்களின் தாய்ப்பால் மழையல்லவா?
மரத்தின் அடியில் இரட்டிப்பு மழை என்பார்கள்.
மரங்கள் தலைத்துவட்டிக் கொள்வதில்லை.
குடை பிடிப்பதில்லை.
மழையின்பத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு ஒற்றைக் கலில்
தவமிருக்கிறது மரங்கள்.
நாமும் மரம் போல வாழவேண்டும்.
பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்.. 06
பள்ளி என்கிற சிறைக்கூடத்தில்
அடைபட்டுக் கிடக்கின்ற மழலைகளின்
அடிமை நிலையை ஒடுக்கு முறையை
சிந்தனை தூரிகையால் வரைந்து காட்டுகிறார்.
தமிழ்வழிக் கல்வி இன்றி
அயல் மொழி வலையில் சிக்கிய புள்ளிமான் போல அகப்பட்டு
துள்ளித் திரியும் பிள்ளைகள் சிக்கிக்கொண்டு இருப்பதை சொல்லுகிறார். வெல்லுகிறார்.
வீணையும் விறகு தான்
அருமை
அறியாதவனிடம்... 13
உலக பொது மறையான திருக்குறளின் பெருமையை அறியாதது போல
நம் தாய்மொழியாக மட்டுமின்றி மொழிகளின் தாய்மொழியான தமிழ்மொழியின் அருமையை பெருமையை இனிமையை, வளமையை அறியாத பேதையாக இருப்பதை உணர்ந்து நம் அறிவிற்கு எட்டும் படி தலையில் குட்டும் படி துளிப்பா வெடி வெடிக்கிறார் இரவி
செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்... 16
ஒருவழிப் பாதையைப் போன்றது
காதலூர் செல்லும் வழி என்று
காதல் மொழியில் சொல்லுகிறார்
உயிர்வளியாய் இருப்பதோடு உயிர் வலியையும் தருவது காதல் என்பதை கசடறக் கற்று உணர்ந்து இருக்கிறார் தமிழ்நெஞ்சனைப் போல நன்கு
இரசிப்பதில் தவறில்லை
பறிப்பதில் தவறு
மலர்கள் .. 17
செடியின் புன்னகையே பூக்கள்.
அது செடியோடும்
பூங்கொடியோடும்
சேர்ந்து இருக்கும் போதே அழகு.
அதனைப் பறிப்பது தலையை கொள்வது போன்றதாகும்
நம் மகிழ்ச்சிக்காக பிறரின் மகிழ்ச்சியை பறிக்கக் கூடாது
உலகெங்கும் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்... 19
எண் திசையில் எவ்வளவு உறவுகள்
இருந்தாலும் நமக்கென உடனே துணைக்கு வந்து தோள் கொடுப்பவர்கள்
எதிர் வீடு, பக்கத்து வீட்டினர்கள்தான் என்பதை மறந்து விடுகிறோம்.
அதனால் தான் தொல்லைகள் படுகிறோம்
என்பதை உறவு பகை என்கிற முரணழகால் நம் மூளையில் பதியும் படி சொல்கிறார் துளிப்பா வேந்தர் இரவி
தரம் தாழ்ந்தால்
களையாகும்
கலை... 20
கலை என்கிற பெயரால் களைகளே மண்டிக் கிடக்கின்றன மடமையால்.
தனிவுடமையால். களைகளை களைவோம்
பயிர்களை பாதுகாப்போம்
ஆயிரம் நெல்லுக்கு
ஓர் அந்துப்பூச்சி
மதவெறி... 21
சாதிவெறி, மதவெறி மற்றும் உள்ளூர் வெறிகள் தனி என்பதைப் போல...
மாந்தநேயமற்ற சாதி மத வெறியால்
கொன்று குவித்து குருதி குடித்து கும்மாளம் போடுகின்ற குரங்கு கூட்டத்தின் கைகளில் சிக்கிய பூமாலைகளாக உயிர்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்ற சூழலில் உதிராப்
பூக்களை நமக்குத் தந்து நம் வாழ்வில் நறுமணம் வீச செய்கிறார் துளிப்பாத் தோழர் இரா. இரவி
புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்... 68
உழைப்புக் குருதியை உறிஞ்சிக் குடிக்கும்
அட்டையாய், புல்லுருவியாய், மூட்டைப்பூச்சியாய் நம்மை ஆளகின்ற பன்னாட்டு கைக்கூலிகளினால்
வாழ்விழந்து வறுமையில் கிடக்கிறோம்
நடைப்பிணமாய் நடக்கிறோம். என்று ஓரணியாய் திரண்டு போர்ப்பரணி பாடப் போகிறோம்?
பட்டாடைக்கு கனவு கண்டவன்
விழித்தெழுந்த போது கட்டியிருந்த நீர்ச்சீலையும்(கோவணம்) களவு போனது போல..
நாம் வாழ்விழந்து கிடக்கிறோம்
சோலையாகும் என்று எண்ணிய போது
பாலையாகி போனதை அறிந்து துடிக்கிறோம். கண்ணீர் வடிக்கிறோம்.
என்று கண்ணிவெடியாய் வெடிக்கச
போகிறோம்?
பேருந்து சாலையில்
பரிசல் பயணம்
அடைமழை... 71
நீர்நிலைகளை தூர்த்து விட்டு மனைகளாக்கியதும், நீர்த்தேக்க வாய்க்கால்களை அடைத்துவிட்டதும்
முறையான, சரியான திட்டமிடல் இல்லாத வாழ்க்கை முறையாலும் பரிசல்களில் மிதக்கிறது நகரம்.
யார் அணிவிப்பது
தினமொரு சேலை
வானம்... 72
இயற்கையில் எழிலழகை இனிதாய்
சுவைக்கும் மனம், குணம் காரம் உள்ளவர்
துளிப்பா துணைவர் இரா. இரவி.
போதுமென்றால் போ
வேண்டுமென்றால் வா
மா மழையே... 100
மா மழைப் போற்றுதும்
மா மழைப் போற்றுதும்
என்கிற நிலை மாறி தூற்றுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது இன்று.
இயற்கையை அழித்து செயற்கையின்
பிடிக்குள் சிக்கி சீரழிகிறது இந்த உலகம்
அதனால்தான் இத்தனை கலகம்
பூவுலகை சூடாக்கி
சுற்றுச் சூழலை மாசாக்கி
நீர்நிலைகளை கழிவாக்கி
வாழ்விடத்தை தூசாக்கி
உயிர்கள் வாழுகின்ற இவ்வுலகத்தை
குப்பைத்தொட்டியாக்கி
இயற்கை மலைகளை கல்குவாரிகளூக்கு
விட்டுவிட்டு. பாரியின் பறம்பு மலை வரலாற்று சுவடழித்து பதைபதைக்கும்
இழிச்செயலை பதற்றமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பனை செய்து நம் வாழ்விடத்தை சுடுகாடாய், இடுகாடாய்
மாற்றுவதை எதிர்த்து மானப்போரிட வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டுகின்ற துளிப்பாவை தமிழ்நிலமெங்கும் விதை போல தூவி இருக்கிறார்
இந்த மழைக்காலத்தில் மண்ணில் முளைப்பது போல நம் மனத்திலும்
முளைக்கும் என்பதில் ஐயமில்லை
துளிப்பாச் சுடர் இரவியில் பாடல்கள்
மடமை இருளை மாய்த்து
தனிவுடமை கேட்டை சாய்த்து
அனைவருக்குமான பொதுவுடமை சிந்தனையை வளர்த்து நம்மை வாழவைக்கும் என்பது திண்ணம்
அதுவே தமிழ்நெஞ்சனின் எண்ணம்
--