தொல்லறி வாளர் தொழில் மூன்று – திரிகடுகம் 40

இன்னிசை வெண்பா

வெகுளி நுணுக்கும் விறலும் மகளீர்கட்(கு)
ஒத்த வொழுக்க முடைமையும் பாத்துண்ணும்
நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந்
தொல்லறி வாளர் தொழில் 40

- திரிகடுகம்

பொருளுரை:

தம் இடத்து எழுந்த சினத்தை சுருங்கச் செய்யும் வலிமையும், பெண்கட்கு இசைந்த நடையை உடையராயிருத்தலும், பகுத்து உண்ணுதற்குக் காரணமாகிய நல்லறிவை ஆளுந்தன்மையில் கூடுதலும் ஆகிய இம்மூன்றும் பழைமையாகிய நூலறிவை ஆளுதலுடையவர் செயல்களாம்.

கருத்துரை:

எழுந்த சினத்தை அடக்குதலும், பெண்களுக்கு வயப்படாமலும், அவர்களால் வெறுக்கப்படாமல் நடத்தலும், தக்கார்க்குக் கொடுத்துத் தானும் உண்கின்ற நன்மையோ டிருத்தலும் இன்றியமையாதன.

நுணுக்கும்: பெயரெச்சம். தன் வினைப் பகுதி – நுணுகு;

தொல்லறிவு: தொன்மை + அறிவு; தொன்மை – பழைமை;

ஒத்த ஒழுக்கமாவது தன்சொற்கு இசைந்து நடக்கும்படி செய்தலும் அவரோடு இசைந்து இன்புற்றிருத்தலுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-21, 6:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே