கடலளவு துன்பம் கடுகளவே இன்பம் – பிறப்பு,, தருமதீபிகை 909

நேரிசை வெண்பா

கடலளவு துன்பம் கடுகளவே இன்பம்
உடலளவே வாழும் உயிர்கள் - குடலளவே
உண்டு களித்திங்(கு) உழலும் உயர்நலங்கள்
கண்டு தெளியா கனிந்து. 909

- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

துன்பம் கடல்; இன்பம் கடுகு, இந்த நிலையில் உடலோடு கூடி உயிர்கள் வாழுகின்றன; உயர்ந்த கதிநலங்களை உணர்ந்து தெளியாமல் குடலளவே உண்டு உடலளவே கண்டு ஒரு பயனும் காணாமல் உள்ளம் களித்து மடமையாய் உழலுகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறவியில் பெருகியுள்ள துயரங்கள் அளவிடலரியன. கருவடைந்த நாள் முதல் கொடிய துன்பங்களையே உயிர்கள் அடைந்துள்ளன. கருவிலிருந்து வெளியேறி உருவடைந்தபின் குழந்தைப் பருவம் தொடங்கி வளர்ந்து வருந்தோறும் அல்லல்களையே எவ்வழியும் சீவர்கள் அலைந்துழந்து அலமந்து உழலுகின்றனர்; நிலைமைகளை நினைந்து உணராமையால் நெஞ்சம் களித்துத் திரிகின்றனர்; உண்மையை ஊன்றி உணர்ந்தால் உள்ளம் நடுங்கி உய்தியை ஓர்ந்து விரைந்து நாடுவார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

கருவிடை அழுந்தும் துன்பமும் நிலத்தின்
கண்ணுறின் கொடியவெந் நோயால்
மருவுவெந் துயரும் கரைதிரை எய்தி
வருந்திடுந் துன்பமும் கூற்றால்
உருவினை ஒருவும் துன்பமும் மீட்டும்
கருக்குழி ஒன்றுறு துயரும்
வெருவர எண்ணி இன்பவீ டதனை
மேவநன்(கு) உணர்தலே வேண்டும். – ஆனந்தத் திரட்டு

கலிநிலைத்துறை
(மா விளம் விளம் விளம் மா)

கருப்பம் என்னுமக் காரிருட் சிறையினில் கதுவும்
நெருப்பின் வெந்துள்ள நிலைகெடத் தலைநகர்ந் திடவே
பொருப்பில் நின்றுவீழ் பவரெனப் போந்தமை நினையா
இருப்பு நெஞ்சினர்க்(கு) என்னையாம் இனிஇயம் புவதே. (1)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

குழவியில் அறியாத் துன்பம் குரவரால் குமாரம் துன்பம்
கழிதரு காம நோயால் காளையாம் பருவம் துன்பம்
விழைவுறு போகம் சுட்டி வெறுக்கையை விரும்பி மேவும்
தொழிலினால் துன்பம் அந்தத் தொழிலிடை யுறாத துன்பம், 2

கோடையில் வெப்பால் துன்பம் குளிரினால் துன்பம் கூதிர்;
வாடையில் ஏற்றால் துன்பம்; வார்பனி நோயால் துன்பம்;
நீடிய தாக மோக நித்திரை மலாதி தன்னால்
நாட்தொறும் துன்பம் ஆனால் நலமொரு நாளும் இன்றே. 3 குறுந்திரட்டு

வேட்டன பெறாமை துன்பம் விழைநரைப் பிரிதல் துன்ப
மோட்டெழில் இளமை நீங்க மூப்புவந் தடைதல் துன்பம்
ஏட்டெழுத் தறித லின்றி யௌ்ளற்பா(டு) உள்ளிட் டெல்லாஞ்
சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க் கென்றான். 201

- முத்தி இலம்பகம், சீவகசிந்தாமணி

அருந்திய குறையின் துன்பம்; ஆங்கவை நிறையின் துன்பம்;
பொருந்துநோய் பொறுத்தல் துன்பம்; பொருந்திய போகத் துன்பம்;
மருந்தினுக்(கு) உஞற்றல் துன்பம்; மற்றவை அருந்தல் துன்பம்;
இருந்தவா(று) இருத்தல் துன்பம்; யார்கொலோ துன்பம் இல்லார்? - நாரதம்

நேரிசை வெண்பா

இன்போர் அணுவாய் இடரதற்கு மாமலையாம்
புன்போகம் வேண்டிப் புலம்பாதே - என்போடே
உள்ளம் உருகவரும் ஒண்போரூர் ஐயனருள்
வெள்ளமுற நெஞ்சே விரும்பு. - திருப்போரூர்ச் சந்நிதி முறை

பிறவித் துன்பங்களுள் சிலவற்றை வரைந்து காட்டிப் பிறவா நிலையைப் பெறும்படி இவை உணர்த்தியுள்ளன. கவிகளின் பொருள்களை ஊன்றி நோக்கினால் அல்லல் வாழ்வையும், அவல நிலையையும் ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

பசித் தீயை அவிக்க உண்ணுவதும், அந்த உணவுகளைத் தேட உழைப்பதும், மலசலங்களை அருவருப்போடு கழிப்பதும் ஓயாத துயரங்களாய் நாளும் உடன் தொடர்ந்துள்ளன. பிணி, மூப்பு, சாக்காடு எவ்வழியும் மூண்டு யாண்டும் நீண்டு நிற்கின்றன. இழவுகளின் ஒலிகளே எங்கும் ஓங்கியுள்ளன.

செத்த சவங்களுக்காகச் சாகின்ற சவங்கள் அழுவதே உலக வாழ்வில் இயல்பாய் ஊடுருவி யுள்ளது; அந்த அவல நிலையை உணர்த்தவே பிறந்தபொழுதே குழந்தைகள் அழுகின்றன. சாகும் வரையும் சஞ்சலமே என்பதை அந்த அழுகை தெளிவாய் ஒலித்து நிற்பினும் யாரும் அதனை உணர்வதில்லை. அதன் காரணங்கள் பூரண அனுபவங்களால் அறிய வருகின்றன.

We wept when we came into the world, and every day tells us why. (The Good-natured man, 1)

இந்த உலகில் வந்து பிறந்த பொழுது நாம் அழுதோம்; அதன் காரணத்தை நாள்தோறும் கண்டு வருகிறோம் என்னுமிது இங்கே காணத்தக்கது. எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் அறிஞர்கள் பிறவியைப் பெருந்துயரமுடையதாகவே கருதியுள்ளனர். துக்க மயம் பிறவி எனத் துறவிகள் துணிந்தனர்.

அழிதுயரங்களிலிருந்து நீங்கி உய்ய நல்ல வழியை நாடிக் கொள்ளுவதே சிறந்த அறிவு பெற்ற பயனாம். பிறந்த பிறப்பையும் அதனால் பெறவுரியதையும் உணர்ந்து உயிர்க்குறுதியை அடைந்து கொள்பவனே அதிசய பாக்கியவான் ஆகின்றான்.

பவப்பிணி ஒழிவதே தவப் பயன் ஆகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Nov-21, 12:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே