அரிய மனிதன் பெரிய பயனைப் பெறவே இவ்வுருவம் எய்தி இருக்கின்றாய் - இருப்பு, தருமதீபிகை 919

நேரிசை வெண்பா

அரிய மனிதன் அடைய உரிய
பெரிய பயனைப் பெறவே - பிரியமுறும்
இவ்வுருவம் எய்தி இருக்கின்றாய் உன்இருப்பின்
செவ்வி தெரிக தெளிந்து. 919

- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அருமையான இந்த மனித உருவத்தை உரிமையோடு மருவியிருப்பது விழுமிய பயனைப் பெறவேயாம்; இவ்வுண்மை தெளிந்து நன்மையை ஓர்ந்து விரைந்து விழைந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அடைய அரியதை அடைந்தவன் மேல் அடைய வுரியதை விரைந்து அறிந்து கொள்ள வேண்டும். உரிமையை உணர்ந்து கடமையைச் செய்து வருபவனே கருதிய பலன்களைக் கைவரப் பெறுகிறான். மேலான கருத்துகள் எவ்வழியும் மேன்மைகளை விளைத்து வருகின்றன. எண்ணம் உயர எல்லாம் உயர்கின்றன.

தன் பிறப்பின் அருமையை எண்ணிப் பெறுவதை நோக்கிய அளவுதான் அந்த மனிதனுடைய இருப்பு சிறப்படைந்து வருகிறது. எண்ணி உணராத வாழ்வு இழிந்து படுகிறது.

உள்ளம் நல்ல இயல்புகள் தோய்ந்து உயர்ந்துவரின் எல்லா மகிமைகளும் அங்கே வெள்ளமாய் விரைந்து வருகின்றன. மனம் புனித நீர்மையில் இனிது வளர்ந்தபோது அந்த மனிதன் தனிநிலையில் உயர்ந்து திகழ்கிறான். நெஞ்சமே நிலைமைகளுக்கெல்லாம் தலைமையாயுள்ளது. புறத்தில் நிகழும் செயல்கள் உளத்தின் சாயல்களே. அகம் இனியதேல் யாவும் இனிமையாம்.

மனமே மனிதன்; மதியே கதி என்பது முதுமொழியாய் வந்துள்ளது. மனம் பண்பு படிந்த சீரோடு முயன்றுவரின் அம்மனிதன் பெருமையடைந்து பேரோடு பெருகி வருகிறான்; மதி நெறிமுறையே கருதிவரின் நல்ல விதி விளைந்து கதிநலங்களை அருளுகிறது. மனமும் மதியும் இழிவாய் மாறுபடின் மனிதன் எவ்வழியும் கழிவாய்ச் சிறுமை அடைந்து சீரழிய நேர்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

மனமே மனிதன் அதன்வழியே வாழ்வும் தாழ்வும் வளர்ந்துவரும்;
தனமே தலமே தனிக்கலையே சார்ந்த யாவும் மனமினிதேல்
இனமே எல்லாம் இன்பமாய் இசைகள் பரவித் திசைஏறும்;
முனமே அதுதான் தீதானால் முழுதும் பழுதாய் முடிவுறுமே.

மானச நீர்மையை விளக்கி வந்துள்ள இது இங்கே கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிந்திக்கத்தக்கது. வெளியே தோன்றுகின்ற பெருமை சிறுமை முதலிய தோற்றங்களுக்கெல்லாம் உள்ளே மனமே மூலகாரணமா யுள்ளது. அதை ஒருவன் நல்ல வழியில் பழக்கி வந்தால் அவன் எல்லாப் பாக்கியங்களையும் எளிதே அடைந்து எவ்வழியும் திவ்விய நிலையில் உயர்ந்து கொள்கிறான்.

தன் அகத்தைத் தனக்கு இனிய சுகமாகப் பெற்றவன் சகத்தில் உயர்ந்து யாண்டும் மகத்துவங்கள் காணுகிறான். பெரிய மகான், அரிய ஞானி என உலகில் உயர்ந்து விளங்குபவர் எவரும் உள்ளத்தின் நன்மையாலேயே ஒளிமிகுந்து வெளியறிய நின்றுள்ளனர். மனம் நலமாய் உயர மனிதன் மகிமையாய் உயர்கிறான். அவன் உயர்ந்த அளவு இழிந்த புலைகள் அவனை யாதும் அணுகாமல் ஒழிந்து போகின்றன.

The higher a man stands, the more the word vulgar becomes unintelligible to him. (Fuskin)

மனிதன் உயர உயர இழிமொழி அவனுக்குத் தெரியாது போகிறது என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது.

உருவத்தால் மனிதன் எனத் தோன்றினாலும் உள்ளம் நீர்மையாய் உயர்ந்த போதுதான் அவன் சீர்மை மிகுந்து சிறந்து திகழ்கிறான். நல்ல பண்புகள் அமைந்த அளவே பிறவி பெருமை பெறுகிறது. அவை சரியாக அமையவில்லையானல் அப்பிறப்பு யாதொரு சிறப்பும் இன்றி இழிவாய் ஒழிந்து போகிறது.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 972 பெருமை

பிறப்பையும் சிறப்பையும் சேர்த்து வள்ளுவர் இவ்வாறு விளக்கியிருக்கிறார். அரிய செயல் பெரிய நிலையை அருளுகிறது.

மக்களுக்கு இருவகை நிலைகள் வாய்ந்துள்ளன. ஒன்று பிறப்பு; மற்றது சிறப்பு. முன்னது பழவினை வசத்தால் இயற்கையாய் அமைவது; பின்னது விழுமிய தொழில்களால் விளைவது. சீரிய கருமங்களைக் கூரிய நோக்கோடு செய்து நேர்மையாய் வருபவன் சிறந்த மனிதனாயுயர்ந்து சிறப்பு மிகப் பெறுகிறான். அரிய வினைகளை ஆற்றிப் பெரியவன் ஆகுக.

மனித மரபில் பிறப்பது மிகவும் அரிது; அவ்வாறு பிறந்தவன் எவ்வகையும் இறந்து போகவே நேர்ந்துள்ளான்; அந்த இறப்பு நேருமுன் இடையே சிறிது இருந்து வாழுகிறான். இந்த இருப்பில் பிறப்பின் பயனைப் பெற வேண்டும். உண்மையான பிறவிப் பயன் யாது? மீண்டும் பிறவாமையேயாம்;. பிறவி எவ்வளவு உயர்வுடையது ஆயினும் எவ்வழியும் துன்பங்களே நிறைந்துள்ளமையால் அதனை நீங்கி உய்வதே பேரின்பம் என நேர்ந்தது. அந்த இன்பநிலை எய்துவதே மனிதனாய் வந்த பயனாம்.

கூர்மையான அறிவு மனிதனிடம் சீர்மையாய் அமைந்துள்ளது; அதனால் உண்மையை உணர்ந்து அவன் உய்தி பெற வேண்டும். சிறந்த அறிவுடைமைக்கு அடையாளம் நிறைந்த ஒழுக்கமே, அந்தச் சீலமே மனிதனை மேலான நிலையில் உயர்த்தி யருளுகிறது. இனிய பான்மைகள் அரிய மேன்மைகளாகின்றன.

The highest manhood resides in disposition, not in mere intellect. (H. W. Beecher)

உயர்ந்த மனிதத் தன்மை அறிவில் இல்லை; குணத்தில் தங்கி யுள்ளது என்னும் இது இங்கே ஊன்றி உணர வுரியது.

நல்ல நீர்மையால் உள்ளம் தூய்மையாய் உயர்ந்து, உயிர் துயர் நீங்கி உயர்கதி யுறுகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Nov-21, 12:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே