திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் – மூதுரை 29

நேரிசை வெண்பா

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமு மெல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
போம்போ தவளொடு போம். 29

– மூதுரை

பொருளுரை:

தழுவிய இனிய உறவினர்களும், மேலான பொருளும், நல்ல அழகும், உயர்வான குலமும் எல்லாம் சீதேவி வந்து சேரும் பொழுது அவளுடனே வந்து சேரும். அவள் நீங்கிப் போகும் பொழுது அவளுடனே நீங்கிப் போகும்.

கருத்து;

சுற்றமும், பொருளும், அழகும், உயர் குலமும் நிலையுடையனவல்ல.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Nov-21, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

மேலே