தார்வேந்தர் மனஞ்சிறிய ராவரோ மற்று – மூதுரை 28
நேரிசை வெண்பா
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங்
கந்தங் குறைபடா தாதலால் - தந்தந்
தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று. 28
– மூதுரை
பொருளுரை:
மென்மையான சந்தனக் கட்டை தான் தேய்ந்து போன நேரத்திலும் அதற்கு மணம் குறைவு படாது.
ஆதலால், மாலையை அணிந்த அரசர்கள் தங்கள் செல்வத்தில் குறைவு ஏற்பட்டாலும் இரவலர் கேட்கும் பொழுது மனத்தால் சுருங்கி ஈகைத் தன்மையில் சிறு மனம் படைத்தவர்களாக ஆவார்களா? மாட்டார்கள்.
கருத்து;
அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மனத்தால் சுருங்கி ஈகைத்தன்மையில் குன்றார்.