தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க - நாலடியார் 117

நேரிசை வெண்பா
(’ம்’ ’ன்’ மெல்லின எதுகை)

தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க;
என்னை அவரொடு பட்டது?- புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும். 117

- மெய்ம்மை, நாலடியார்

பொருளுரை:

தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்க வேண்டும்; என்ன அவரோடு உண்டான தொடர்பு!

புன்னையின் வெற்றி வாய்ந்த மலர் மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! வரற்குரிய நன்மை தீமைகள் யார்க்கும் வரும்.

கருத்து:

வருவன வந்தே தீருமாதலின் அதன் பொருட்டு உலகத்தில் யாரும் தம் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்ளுதலாகாது.

விளக்கம்:

இகழ்தல் ஈண்டுப் புறக்கணித்தற் பொருட்டு

அவரின் முன் - அவர் இகழ்தற்குமுன்பே.

எதுவும் தம் பழவினைப்படியே வருதலின், ‘என்னை அவரொடு பட்டது" என்றார்.

முன்னும் கடலின் புலால் நாற்றத்தைக் கடிதலின் புன்னைமலர்க்கு விறல் நுவலப்பட்டது.

வீங்கு நீர் - கடல்; மிக்க நீர் என்னும் பொருட்டா வந்தது.

பிறர்க்குத் தாழ்ந்தொழுகுவாரை நினைந்து ‘யார்க்கும்' என்றாரென்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Nov-21, 7:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே