பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி – நாலடியார் 118
இன்னிசை வெண்பா
ஆவே றுருவின வாயினும், ஆபயந்த
பால்வே றுருவின வல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு 118
- மெய்ம்மை, நாலடியார்
பொருளுரை:
ஆக்கள் வேறுவேறு நிறத்தன வாயினும் அவ்வாக்கள் உதவிய பால்கள் அவ்வாறு வேறு வேறு நிறத்தன அல்ல;
பாலைப்போல் அறம் ஒரே தன்மையுடையதாகும்; இவ்வுலகில் அவ்வறத்தை ஆற்றும் முறைகள் ஆக்களைப் போல் பல செயல்களாக உருக்கொள்ளற்குரியது.
கருத்து:
இயன்ற செயல்களின் வாயிலாக அறத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.
விளக்கம்:
உரு, நிறத்திற்காயிற்று; கொளல் என்னும் முற்று ஈண்டு உடன்பாட்டிற் படர்க்கைக்கண் வந்தது.
பல செயல் முகமாகவும் அறந்தேடிக் கொள்ளுதற்குரியதாக உலகத்தின் இயல்பு அமைந்திருக்கின்றது என்பது பொருள்.