நாயும் சைக்கிள் ஆசாமியும்

என் இளமை பருவத்தில் நடந்த ஒரு சுவையான சிறு சம்பவத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

அப்போது நான் மூன்றாவது அல்லது நாலாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என நினைக்கிறன். ஒரு நாள் மாலை நானும் என் மூத்த சகோதரியும் எங்கள் வீடு மாடியிலிருந்து எதிரே இருக்கும் தெருவை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தோம். எங்கள் வீடு மற்றும் எங்கள் வீட்டிற்கு இடது புறம் இருக்கும் இன்னொரு வீடும் சரியாக எதிரில் உள்ள தெருவை நோக்கி அமைந்து இருந்தன. அதே நேரத்தில் எங்கள் வீடு உள்ள தெருவும் எதிரில் உள்ள தெருவும் எங்கள் வீடு எதிரில்தான் சந்தித்திக்கொண்டிருந்தன. எங்கள் மாடியிலிருந்து இந்த இரண்டு தெருக்களையும் நோக்கிய வண்ணம் இருப்பது, வருபவர்களையும் போகின்றவர்களையும் பார்த்து வேடிக்கை பேசுவது எங்களுக்கு ஒரு பொழுது போக்கு. மாடியிலிருந்து எதிர்த்தெரு கிட்டத்தட்ட 300 மீட்டர் வரை நன்றாக கண்ணுக்கு தெரியும். (அப்போது எங்களுக்கு பார்வையும் மிக அதிகம் அல்லவா?)

அப்படி நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் எதிர்த்தெருவிலிருந்து ஒருவர் சைக்கிளில் பெடல் செய்து வந்துகொண்டிருந்தார். திடீரெண்டு ஒரு நாய் அவரை துரத்த ஆரம்பித்தது. பொதுவாக நாய் அதிகம் 20 அல்லது அதிகமாக 40 மீட்டர் வரை துரத்திவிட்டு பின் அதன் போக்கில் சென்றுவிடும். அன்று சைக்கிள் சவாரி செய்தவருக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை போலும். நாய் அவரை விடாமல் துரத்தியது .அவருக்கு நாய் என்றால் மிகுந்த பயம் போல் தெரிந்தது. ஏனெனில் நாய் துரத்தியபோது அவர் ஒரு காலை பெடலிலிருந்து எடுத்து விட்டு மேலே தூக்கிக்கொண்டார்.நாய் இன்னும் துர்த்தியபோது , பாவம் இன்னொரு காலையும் மேலே தூக்கிகொண்டுவிட்டார். எங்களுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. சின்ன பிள்ளைகளான எங்களுக்கு அது ஒரு வேடிக்கை தானே.

இடையிடையில் அவர் கொஞ்சம் பெடல் செய்து மீண்டும் இரண்டு கால்களையும் எடுத்து உயர்த்தி வைத்து கொண்டார். நாயோ விடாமல் துரத்தியது. அதே நேரத்தில் இன்னொருபக்கத்திலிருந்து நாயின் நண்பன் ஒன்றும் சேர்ந்து கொண்டு அவரை துரத்தியது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஆசாமி இன்னும் வேகமாக பெடல் செய்ய முயற்சி செய்தபோது சைக்கிள் செயின் கழண்டுவிட்டது. வேகவேகமாக அவர் காலால் பெடல் செய்தார். அவருடைய இரண்டு கால்கள்தான் சுற்றின சைக்கிள் ஓட்டம் மிகவும் குறைந்து விட்டது. எங்கள் வீடு தெருவுக்குள் நுழைய இருக்கும்போது அவர் தம் இரண்டு கால்களையும் எடுத்து சைக்கிளின் ஹாண்டில் பார் மேல் போட்டுவிட்டார். எப்படி என்று கேட்காதீர்கள். இவை அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தது. அவர் பயத்தில் சைக்கிள் பிரேக்கையும் போடவில்லை போலிருக்கிறது. சைக்கிள் எங்கள் தெருவினில் திரும்பாமல் சரியாக எங்கள் வீடு மதிற்சுவரின் மேல் மோதியது. துரத்திய இரு நாய்களும் எங்கள் தெரு முனையில் துரத்துவதை நிறுத்திக்கொண்டன. ( அந்த நாய்களுக்கு அது தான் எல்லை போல் என்று நினைத்தேன்).

சைக்கிள் சுவரின் மீது மோதியதில் சைக்கிள் மீது இருந்தவர் தொப்பென்று கீழே விழுந்தார். நல்ல வேலை அவருக்கு லேசான காயம் தான். ஆனால் சைக்கிளுக்கு கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டது. நாங்கள் கீழே ஓடிச்சென்று அவருக்கு ஏதாவது உதவ நினைத்தோம். அவர் உதவி எதுவும் தேவை இல்லை கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடுங்கள் என்று தண்ணீர் குடித்து விட்டு மெல்ல சைக்கிளை தள்ளி கொண்டு சென்றார், அருகில் இருந்த சைக்கிள் ரிப்பேர் கடைக்கு.

பாவம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. இப்போது நினைத்தாலும் இந்த நிகழ்ச்சி எனக்கும் என் சகோதரிக்கும் அவ்வளவு சிரிப்பை வரவழைக்கும். அதே சமயம் இந்த தெரு நாய்களின் உபத்திரவத்திற்கு இன்று வரை ஒரு முடிவு இல்லாமல் இருப்பதையும் நினைத்து நான் இன்றும் வேதனை படுகிறேன். துரதிருஷ்ட வசமாக என்னை இதுவரை எந்த நாயும் கடித்ததில்லை. பல நாய்கள் குறைக்கும் ( நாய்களில் பல வகை என்று உங்களுக்கு நன்றாக தெரியுமே) , கொஞ்சம் பின்னால் வரும், பிறகு சென்று விடும். நான் நாய் துரத்தினால் வேகமாக நடக்க மாட்டேன். அப்போது அருகில் வரும் நாயும் துரத்தாமல், கொஞ்சம் உறுமிவிட்டு சென்று விடும். என் அண்ணனை ஒருமுறை ஒரு நாய் கடித்துவிட்டது. தெரு நாய் அல்ல. அவன் அடிக்கடி சென்று வரும் அவனது நண்பனின் இல்லத்தில் வளர்த்து வந்த நாய் தான். அந்த கதையை இன்னொரு முறை கூறுகிறேன்.

'நாய்கள் ஜாக்கிரதை' பலகை சிலர் வீட்டில் இருக்கும். சிலர் வீட்டில் இந்த பலகை இருக்காது. ஆனால் நாயோ நாய்களோ உள்ளே இருக்கும். ஆகவே இந்த பலகை ஒவ்வொரு தெருவிலும் இருக்கவேண்டும். அப்போது தான் எல்லா நாய்களும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கும்??? சரிதானே?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Nov-21, 2:08 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 95

மேலே