கையேந்தி பவன்கள்

இது முப்பது வருஷங்களுக்கு முன்னால் நடந்தது. டேட், ப்ரூஃப் எல்லாம் கெடயாது.
நடுத்தர, மற்றும் ஏழை மக்கள் ஸ்டார் ஹோட்டலுக்குப்போகமாட்டார்கள். அங்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு ஆகும் செலவில் சாதா ஹோட்டல்களில் மூணு நாள் சாப்பிடலாம். ஏழைங்க ஒரு மாதம் கூட சாப்பிடலாம். நான் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தரம் ஒரு டீசண்ட் ஹோட்டல்லே நொழஞ்சுட்டேன். அங்கே மெனு கார்டைப்பாத்தவுடனே எனக்கு இல்லாத B.P. எகிறிடுத்து. இட்லி ப்ளேட் 25 ரூபாய், சாதா தோசை 65 ரூபாய்னு பாத்தவுடனே எனக்குத் தலை, கால் ,கண்ணு, மூக்கு எல்லாம் சுத்த ஆரம்பிச்சுடுத்து. கடைசியிலே உள்ளே நொழஞ்ச பாவத்துக்காக ஒரு ப்ளேட் இட்லி ஆர்டர் பண்ணி அதை மாத்திரம் தின்னுட்டு ‘போதும்டா அப்பா, நமக்கு இது சரிப்பட்டு வராது’ ன்னு ஒரு சின்ன ஏப்பம் விட்டுட்டு கிளம்பிட்டேன்.

‘டிப்ஸ் கூட தராம போறானே கஞ்சப்பய’ ன்னு அந்த சர்வர் முணுமுணுப்பையும் லட்சியம் செய்யாம வெளியே வந்து விசாரிச்சப்போ, அது வெறும் 3 ஸ்டார் ஹோட்டல்தான்னு தெரிஞ்சது. 3 ஸ்டாரே இப்படின்னா, 5 ஸ்டார் ? நெனச்சிக்கூட பாக்கமுடியவில்லை. இதுதான் என்னை மாதிரி இருக்கிற பெரும்பாலான ஜனங்களோட நெலமை.
அதே எங்க தெரு ஓரத்துலே இருக்கிற ஹோட்டல்லே ரெண்டு இட்லி வெறும் பத்து ரூபாதான். நான் அந்தக்காலத்துலே ஒரு இட்லி பத்து பைசான்னு பல வருஷம் சாப்பிட்டவன். எனக்கு இட்லி ஒரு ரூபா ஆன போதே பெரிய ஷாக். என்னை மாதிரி அந்தக்கால மனுஷங்களுக்கு எல்லாம் இப்ப ஹோட்டல் பண்டங்களோட வெலை வாசியைக்கேட்டவுடனே வயித்தைக்கலக்கும். இருந்தாலும் வீடுவாசல்னு இல்லாதவங்க எப்படியும் சாப்பிட்டுத்தானே ஆகணும். அதுக்குத்தான் அம்மா கான்டின் இருக்கேன்னு நீங்க சொல்லலாம். அப்போ அது கிடையாது. அப்படி இருந்திருந்தாலும் அது இருக்கிற இடத்தைக்கண்டுபிடிச்சி, அங்கே வர ஜனங்களோட போட்டி போட தில் இருந்தா அங்கே போகலாம். அப்படிப்போனாலும் ‘நீங்க எல்லாம் எங்களோட போட்டி போட வரலாமா?” என்று சிலர் கேக்கும்போது ஊசிப்போன வடையைத்தின்ன மாதிரி ஆயிடும் நம்ம நெலமை. அதனாலே அதை அவாய்ட் பண்ண வேண்டியதாப் போயிட்டுது .

எனக்குக்கீழ இருக்கிறவன் என்னை ஹை கிளாசுங்கறான். எனக்கு மேலே இருக்கிறவன் என்னை லோ கிளாசுங்கறான். ஆகமொத்தம் மிடில் கிளாசா இருக்கறதுலே இது ஒரு பிரச்சினை. ரெண்டு பேருமே என்னை விட்டு ஒதுங்கறான். ஒருத்தன் மரியாதையாலே ஒதுங்கறான். இன்னொத்தன “ அட தூ நீயெல்லாம் மனுஷனா” ன்னு சொல்லி ஒதுங்கறான். என்னை மாதிரி ஆளுங்களுக்குன்னே இருக்கிற சில தெருவோர சாப்பாட்டுக் கடைகள்தான் எங்களுக்கு ஆபத்பாந்தவங்க. இதை நாங்க எங்க பாஷையிலே ‘கையேந்தி பவன்’ னு சொல்வோம். இந்தக்கையேந்தி பவன்லே சாப்பிறதினாலே எந்த அவமானமும் கிடையாது, சார், எங்க கடையிலே சோ சாப்பிட்டு இருக்கிறார். ரஜினி சாப்பிட்டு இருக்கார், கிரேசி மோகன் சாப்பிட்டு இருக்கிறார், விசு சாப்பிட்டு இருக்கிறார்னு அங்கே இருக்கிறவங்க சொல்லும்போது நமக்கு இல்லாத பெருமை கிடைக்கிறதா நெனப்பு. அவங்க எல்லாம் அங்கே சாப்பிட்டாங்களா இல்லையான்னு நாம என்ன CID விசாரணையா பண்ணப்போறோம்?

ஏன்னா, இந்த கையேந்தி பவன்களிலே எல்லாம் ஸ்டைலா போய் சௌகரியமா ஒரு டேபிளுக்கு முன்னாலே போட்டிருக்கிற சேர்லே உக்காந்து ஆர்டர் பண்ணி சாப்பிட முடியாது. காசைக்கொடுத்தா, இட்லியோ, தோசையோ, வடையோ, போண்டோவோ ஒரு இலையிலே போட்டுக்கொடுப்பாங்க, அல்லது ஒரு பிளேட்லே போட்டுக் கொடுப்பாங்க. அதுலேயே சட்னி , சாம்பார் ஓரளவுக்கு ஊத்தி கொடுப்பாங்க. நின்னபடியே வாங்கி, அங்கேயே ஒரு ஓரமாப்போய், நின்னபடியே சாப்பிட்டுட்டு, அங்கே கெடைக்கிற தண்ணியை குடிச்சிட்டு ( கூடிய மட்டும் இதை அவாய்ட் பண்றது பெட்டர்) , அங்கே ஒரு ஓரமா வெச்சிருக்கிற பாத்திரத்துலே இருந்து அங்கே இருக்கிற டம்பளராலெ எடுத்துக் கையை ரோட்டோரத்துலேயே கழுவிக்கிட்டு, அந்தத்தட்டையும் கழுவி அந்த கையேந்தி பவன் ஓணர் கிட்டே கொடுத்துடணும். பக்கத்துலே இருக்கிறவங்க யார்மேலேயும் படாம பண்ணணும். பட்டா அவங்க சொல்ற திட்டையும் அந்த பஜ்ஜிகளோட உங்களாலே ஜீரணம் பண்ணவேண்டி இருக்கும். இப்படி வாங்கி சாப்பிடறதுக்கு, ஒரு தில் வேணும், ஒரு நேக்( knack) வேணும். அங்கே உங்களோட போட்டி போட்டுக்கிட்டு நிக்கிற சகபாடிகளுடன் மோதி நீங்க உங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கிறது உங்க சாமர்த்தியத்தைப் பொறுத்தது. இருந்தாலும் அந்த டேஸ்டும், விலையும் உங்களை கட்டிப்போட்டுடும். இங்கே சாதா, அல்லது ஸ்டார் ஹோட்டல்லே கிடைக்காத பல சில்வண்டு சிற்றுண்டிகள், அதாவது ஸ்நாக்ஸ் கிடைக்கும்.

நான் மைலாப்பூரிலே இருந்த வரைக்கும், கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டு பிடிச்ச மாதிரி (!) கையேந்தி பவன்களை கண்டு பிடிக்கிறதுலே எனக்கு ஒரு இன்டரெஸ்ட். இந்த மாதிரி கையேந்தி பவன்கள் பிளாட்பார கடைகளைவிட பரவாயில்லை. இந்த வீதிக்கடையிலே தின்பண்டங்க எல்லாம் திறந்தே இருக்கும். அங்கே போற, வர ட்ராபிக் புகை பூராவும் இந்தப் பண்டங்கள்மேலே படிஞ்சு அதுகளுக்கு எக்ஸ்ட்ரா டேஸ்ட் கொடுக்கும். நான் சொல்ற கையேந்தி பவன்லே அந்தப்பிரச்சினை கிடையாது. அது ஒரு வீட்டு ஜன்னலுக்குள்ளே நடக்கிற சமாசாரம். தின்பண்டங்கள் எல்லாம் உள்ளேசெய்வாங்க. Fresh from the oven னு சொல்றமதிரி அடுப்பிலே இருந்து எடுத்துக் கொடுப்பாங்க. சாப்பிடறது மாத்திரம் வெளியே. இதனாலே நாம சாப்பிடும்போது மட்டும் அதுலே படியற புழுதியும், புகையும் தான் நம்ம பண்டத்தோட டேஸ்டை இம்ப்ரூவ் பண்ணும்.

நான் மைலாப்பூரிலே இருந்தபோது வாரந்தவறாம கபாலீஸ்வரர் கோவிலுக்குப்போறதுண்டு. அப்போ அந்த பொன்னம்பலவாத்தியார் தெருவிலே ஒரு ஜன்னல் வழியா ஒரு கையேந்தி பவன் இருந்தது. ( இப்ப இருக்கா இல்லையான்னு தெரியாது) . அப்படிக் கோவிலுக்குப்போற ஒவ்வொரு தடவையும் அந்த கையேந்தி பவன்லே பஜ்ஜி வாங்காம வீடு திரும்ப மாட்டேன். அங்கேயே எனக்கு வேண்டிய பஜ்ஜியை சாப்பிட்டுட்டு, ஒரு பொட்டணம் வீட்டுக்கும் வாங்கிட்டுப் போவேன். என் ஒய்புக்கும் அது ரொம்ப இஷ்டம். இது ரொம்ப நாளாத்தொடர்ந்து, நான் அந்த பஜ்ஜி வாங்கறதுக்காக கோவிலுக்குப்போறேனா, இல்லே கோவிலுக்குப் போறதுக்காக பஜ்ஜி வாங்கறேனான்னு சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு என் பஜ்ஜி ஆசை வளந்துட்டுது.

அங்கே மொதமொதல்லே பஜ்ஜி மாத்திரம் செஞ்சவங்க, நாளாவட்டத்துலேயோ, சதுரத்திலேயோ தொழிலை டைவர்சிஃபை பண்ணி, போண்டா, வடை, இட்லி, தோசைன்னு அதை ஒரு குட்டி விண்டோ கேடரிங் ஹோட்டலாவே மாத்திட்டாங்க. இருந்தாலும் ஜனங்க சொல்றது அதை பஜ்ஜிக்கடைன்னுதான். அந்தக் கோவிலுக்கு வர கும்பல்லே பாதி பேருக்கு மேலே அந்த பஜ்ஜி கடையோட வாடிக்கையாளர்கள் கட்டாயம் அங்கே அடெண்டன்ஸ் கொடுத்துடுவாங்க. இப்படி அந்தக் கையேந்தி பவன் எங்களைமாதிரி பக்தர்களாலே நாளொரு கும்பலும், பொழுதொரு ஸ்நாக்ஸுமாக வளந்துகொண்டே வந்தது.

ஏதோ கையேந்தி பவன்தானேன்னு சாதாரணமா நெனச்சுடாதீங்க. ரூல்ஸ் எல்லாம் ரொம்ப ஸ்டிரிக்ட். பஸ் கண்டக்டர் சொல்றாப்போல கரெக்டான சில்லறை தரணும். அப்படி இல்லேன்னா அந்தப் பாக்கி சில்லரையை மறுநாள் கணக்குலே அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். இல்லேன்னா போய்க் கிட்டே இருக்கணும் வேறே எந்த ஹோட்டலுக்காவது. அந்த ஜன்னலுக்கு உள்ளே இருப்பவர் கொஞ்சம் தாட்டியான பேர்வழி மாத்திரம் இல்லே கொஞ்சம் முசுட்டுப் பேர்வழியும் கூட. அதனாலே யாரும் அவரோடே தகராறு வெச்சிக்கிறது இல்லை.
“வெங்காய பஜ்ஜி இருக்கா” ன்னு ஒருத்தர் தெரியாத்தனமா கேட்டுட்டார்.
“நாங்க வெங்காய பஜ்ஜி போடறது இல்லை” அப்படின்னார்
“ஏன்”னு அவர்கேட்டதுக்கு
“உங்களுக்குப் பதில் சொல்லவா நான் இங்கே ஒக்காந்து இருக்கேன்?. அதோ அத்தனைபேர் காத்துண்டிருக்கா. இருக்கறதை வாங்கறதுன்னா வாங்குங்க. வேணாம்னா காத்துண்டு இருக்கிறவாளுக்கு வழியை விட்டுட்டு நீங்க கிளம்புங்கோ”ன்னு ஒரே அடியா அந்த ஆளை டிஸ்போஸ் பண்ணிட்டார். அதனாலே அவர்கிட்டே யாரும் வீணா பேச்சு வெச்சிக்கிறதில்லே. கான்ஸ்டிட்யூஷன் படி நீங்க பேச்சுரிமை கேட்டீங்கன்னா அதோடே உங்களை கட் பண்ணிவிடுவார். மறுநாள்லே இருந்து அந்தக்கடைக்கு நீங்க வரமுடியாது. இந்திய அரசியல் சட்டம், டெமாக்ரசி அதெல்லாம் அங்கே எடுபடாது. அவர் வெச்சதுதான் சட்டம்.

ஒருசமயம் அந்த ரோடுலே அங்கங்கே 30 அடிக்கொரு ஆளுயரப்பள்ளம் 3’x3’ அளவுக்கு சதுரமா வெட்டி வெச்சிருந்தாங்க. நான் அங்கே போகும்போதெல்லாம் இது யாருக்காக வெட்டின குழியோன்னு நெனைக்கிறதுண்டு. அது கேபிள்காரங்க ரோடு ரோடா தோண்டிட்டு இருந்த காலம் அது. அப்ப ஒரு நாள் அந்த ரோடுலே கபாலீசுவரரைத் தரிசிச்ச பிற்பாடு உஷாரா நடந்து போய்க் கொண்டு இருந்தேன். எங்கே போய்க்கொண்டிருந்தேன்?. வேறே எங்கே? நம்ம பஜ்ஜிக் கடைக்குத்தான். அப்ப என்னன்னு தெரியல்லே எப்பவும் பஜ்ஜிக்கடைக்கு பக்கத்துலே எரியற கார்ப்பரேஷன் தெரு விளக்கு எரியல்லை. ஒரே இருட்டு. அது கும்மிருட்டா இல்லை கம்மிருட்டா தெரியலை. நான் வழக்கம்போல கடைக்குப்போய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டுட்டு கடைக்கு ஒரு நன்றி சொல்லிட்டு கொஞ்சம், ஒரு அஞ்சு அடின்னு வெச்சுக்கோங்களேன், முன்னேறினேன். திடீர்னு அங்கே இருட்டிலே இருந்த ஆழக்குழியிலே விழுந்ததுதான் தெரியும். ஒரு கால் பள்ளத்தோட தரையிலேயும், இன்னொரு கால் ஆகாயத்தை நோக்கியும் மகாபலிகிட்டே வரம்கேட்ட வாமனனோட மூணாவது அடி மாதிரி போஸ் கொடுத்து அந்த குழியை வெட்டினவங்க அதைச்சுத்தி அதுக்குப்பக்கத்துலேயே போட்டிருந்த மண்மேட்டிலே என் முகம் புதைய அங்கிருந்த சில பரோபகாரிகள் என்னைக் கை கொடுத்து தூக்கிவிட்டு ஒரு சொம்புலே கொடுத்த தண்ணியை எடுத்து முகத்தைக் கழுவிகிட்டு என் முகத்தை யாரும் பார்த்துவிடக்கூடாது என்ற துடிப்போடு அந்த இருட்டிலே வேகமாக அங்கிருந்து கிளம்பி வீடு போய்ச்சேர்ந்தேன். ஏதாவது பாடி டேமேஜ் ஆயிருக்கான்னு வீட்டுக்கு வந்தப்புறம் செக் பண்ணினேன். கடவுள் புண்ணியத்துலேயோ என்னவோ எந்த டேமேஜும் ஆகல்லை. அப்பாடா யாரும் நம்ம மூஞ்சியை பார்க்கிறதுக்கு முன்னேயே வந்ததுலே எனக்கு பரம சந்தோஷம்.

இந்த சந்தோஷத்தோடு மறு நாள் சாமி கும்பிட்டு பஜ்ஜிக்கடைக்குப்போனா அங்கே எல்லாரும் “ என்ன சார் , உங்களுக்கு ஒண்ணும் ஆகல்லியா? என்று குசலம் விசாரித்தனர். அதில் சில பேர் “நீங்க விழுந்த போஸைப் பார்த்த போது உங்களுக்கு சீரியஸா டேமேஜ் ஆயி ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆயி இன்னும் ஒண்ணரைமாசம் பஜ்ஜி சாப்பிட வர மாட்டீங்கன்னு இப்பத்தான் பேசிக்கிட்டிருந்தோம். டேமேஜ் ஒண்ணும் ஆகல்லையா? என்று விசனத்துடன் கேட்க, எனக்கு டேமேஜ் எதுவும் அவர்கள் எதிர் பார்த்த மாதிரி ஆகாததற்கு ரொம்பவுமே நொந்து போய்விட்டார்கள் என்பது தெரிந்தது. அவ்வளவு ஜாக்கிரதையாக அந்த இருட்டில் யாரும் என்னைசரியாக பார்ப்பதற்கு முன்பே விருட்டென்று எழுந்து போன என்னை எப்படி இவ்வளவு பேர் பார்த்தார்கள் என்ற வயிற்றெரிச்சலில் நான் இருந்த போது கடைக்காரர்
“ என்ன சார், ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா?” என்று சாஃப்டாக முதன் முறையாக பேசியதைப் பார்த்து என்னைப்போல் அங்குள்ளவர்களும் ஆச்சரியப்பட்டார்கள். சரி. இவருக்குள்ளேயும் ஒரு சாஃப்ட் ஹார்ட் இருக்குபோல இருக்கேன்னு நெனச்சுகிட்டு நான் நேத்து பட்ட அவஸ்தை காரணமா ஏதாவது கன்சஷன் எனக்குத் தருவாரோன்னு எதிர் பார்த்து பஜ்ஜி வாங்கினேன் அவரிடம். கொஞ்சம் சட்னி கூட வையுங்களேன் என்று கேட்டேன். உடனே அவருடைய ஸ்வய ரூபம் வெளிப்பட்டு “இந்த இலை பார்சல்லே எவ்வளவு போடமுடியுமோ அவ்வளவுதான் போடமுடியும்” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு “ நகருங்கோ. நகருங்கோ என்று ஜரகண்டி, ஜரகண்டி என்று திருப்பதி பாணியில் “ இங்கே எத்தனை பேர் காத்துண்டிருக்கா, கிளம்புங்கோ, என் டைமை வேஸ்ட் பண்ணாதீங்கோ” என்று என்னைத்துரத்தாத குறையாகத் துரத்தினார்.
*************************
நான் எப்பொழுமே ஒரு சிந்தனாவாதி. சிந்தனாவியாதின்னு கூட நீங்க வெச்சிக்கலாம். 5 ஸ்டார், 7 ஸ்டார்னு பல ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கு நம்ம நாட்டுலே பஜ்ஜி, வடை, போண்டோவுக்கு நிறைய, சின்ன , பெரிய ஹோட்டல்கள் எல்லாம் இருக்கு. ஆனால் அங்கே எல்லாம் சுண்டல் போடுவதில்லை. கொழுக்கட்டை கிடையாது. அப்புறம் எத்தனை ஸ்டாரா இருந்து என்ன பிரயோசனம்? நம்ம வீட்டுலே செய்யற வகை வகையான உப்புமாக்கள் எந்த ஹோட்டல்லேயும் கிடைக்கறதேயில்லை. இருந்தா ரவா உப்புமா, கிச்சிடி இது தவிர்த்து வேறே எந்த உப்புமாவையும் ஹோட்டல்களிலே நான் பாத்ததேயில்லை.
அரிசி உப்புமா, அரிசிமா உப்புமா, கோதுமை உப்புமா, பிரெட் உப்புமா, அவல் உப்புமா இட்லி உப்புமா இப்படி ஏதாவது எந்த பெரிய ஹோடல்லேயும் சாப்பிட்டு இருக்கீங்களா? அதேபோல கொத்துக்கடலை சுண்டல், கடலை சுண்டல், கடலைப்பருப்பு சுண்டல், பயத்தம் பருப்பு சுண்டல், சென்னா சுண்டல், பட்டாணி சுண்டல், ஓட்ஸ் சுண்டல் இப்படி பலவகைப்பட்ட சுண்டல்களை நீங்க எந்தப் பெரிய ஹோட்டல்லேயும் சாப்பிட்டு இருப்பீங்களா? மாட்டீர்கள். பேரு பெத்த பேரு, தாக நீளு லேதுங்கற கதைதான் . எவ்வளவு பெரிய ஹோட்டலாக இருந்தால்தான் என்ன? இந்த அன்றாட சின்ன சமாசாரங்க அங்கே எல்லாம் கிடைக்காது. அதை விட்டுத்தள்ளுங்க.

கொழுக்கட்டையை எந்த பெரிய அல்லது சின்ன ஹோட்டல்லேயாவது சாப்பிட்டு இருக்கீங்களா? குணுக்குன்னு சொல்லக்கூடிய அடைமா உருண்டையை சாப்பிட்டு இருக்கீங்களா? கிடையாது. இப்படி ஏராளமான ஐடெங்களை சாப்பிட ஸ்டார் ஹோட்டலுக்கோ, மூன் ஹோட்டலுக்கோ போய் பிரயோஜனம் இல்லே. இதெல்லாம் கிடைக்கக்கூடிய இடம் கையேந்தி பவன்கள்தான்.

பிள்ளையார்சதுர்த்தி நேரம். அப்ப உங்களுக்கு உடனே ஞாபகம் வர சமாசாரம் எது? கொழுக்கட்டைதான். கொழுக்கட்டைன்னு சொல்லும்போது அத்ரிமாக் கதை ஞாபகம் வராம இருக்காது. மதுரை முக்குறுணிப்பிள்ளையாருக்கு படைக்கிற கொழுக்கட்டையைப்பத்தியும் உங்களுக்குத்தெரிஞ்சி இருக்கும். இவ்விநாயகருக்கு 3 குறுணி, அதாவது 18 படி பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தி நாளன்று படைக்கிறாங்க. இதேபோல் பிள்ளையார்பட்டி வினாயகருக்கும் இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத் தலத்தில் முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) படைத்து வழிபடுறாங்க. அதனாலே நான் கொழுக்கட்டையின் மகாத்மியத்தை இதற்கு மேலே விளக்கத் தேவை இல்லை.

என் மனைவிக்கு கொழுக்கட்டை மிக நன்றாக செய்யத் தெரியும். அவளே மெனக்கெட்டு இழுத்துப் போட்டுக்கொண்டு கொழுக்கட்டை செய்கிறேன் என்றாள் ஒரு சமயம். அவள் கொழுக்கட்டை செய்த போது நான் அவளுக்கு செய்த ஒரே உதவி அவள் செய்திருந்த மாவையும், பூரணத்தையும் அடிக்கடி வாயில் போட்டுக்கொள்ளாதது தான். இப்போதெல்லாம் கொழுக்கட்டை சொப்பு செய்வதற்கான அச்சு வந்து விட்டது. மும்பை வினாயக சதுர்த்திதான் உலகப்பிரசித்தி ஆயிற்றே. எனவே பூனாவில் கொழுக்கட்டை செய்வதற்கான மெஷினே வந்துவிட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

சரி. எங்கள் கதைக்கு வருவோம். என்மனைவி ஒரு இருபது தித்திப்புக் கொழுக்கட்டையும், ஒரு இருபது உப்புக் கொழுக்கட்டையும் செய்தாள். அவள் செய்த கொழுக்கட்டையின் சொப்பு அவ்வளவு மெல்லியதாகவும், சாஃப்டாகவும் எங்கள் குடும்ப ஸ்டாண்டேர்ட் ஸ்பெசிஃபிகேஷனுக்கு ஏற்றாற்போல் அற்புதமாக வந்திருந்தது. கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு சுப்புடு போல யாராவது ஒரு கொழுக்கட்டை சுப்புடு இருந்திருந்தால் என்மனைவிக்கு கொழுக்கட்டை ராணி என்று விருது அளித்திருப்பார். அவர் இல்லாது போகவே நான் அப்படி ஒரு விருது அளித்தால் நான் அவள் உடல் வாகை கிண்டல் செய்கிறேன் என்று சொல்லி அப்புறம் பல நாட்களுக்கும் நான் ஹோட்டல் சாப்பாட்டையே சாப்பிட வேண்டும் என்ற பயத்தினால் அந்த விருதை நான் அவளுக்கு அளிக்கவில்லை. அந்தமாதிரி சொப்பு செய்ய இப்போது யாருமே இல்லை என்று அடித்துச்சொல்வேன். அந்த மாதிரி கொழுக்கட்டையை நானே ஒரு டஜன் ஈஸியாக ஒரே மூச்சில் ஸ்வாஹா செய்வேன். அவ்வளவு மிருதுவான சொப்புக்குள்ளே சுவையோ சுவையான பூர்ணம். அப்படி செய்த உப்புப்பூர்ணமும், தித்திப்புப்பூர்ணமும் ரொம்ப அமர்க்களம். யார் சாப்பிட்டிருந்தாலும் அந்த கொழுக்கட்டைகளுக்கு ஆயுள் அடிமை ஆகியிருப்பார்கள். எப்பொழுதும் எல்லாப்பெண்களுமே தன் சமையலை வேறு ஒருவர் புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து போய்விடுவார்கள்.எதிர் ஃப்ளாட்டில் இருந்தவர்களுக்கு நான்கு கொடுத்தாள் ( கொழுக்கட்டையைத்தாங்க) அவர்கள் அதைப்புகழோ புகழ் என்று புகழ்ந்து
“இந்த மாதிரி சூப்பர் கொழுக்கட்டையை தங்கள் வாழ்நாளிலேயே சாப்பிட்டது கிடையாது. சூப்பரோ சூப்பர்” என்று சொல்லிவிட்டனர். அதை அந்த பதத்திலே எப்படி செய்யவேண்டும் என்ற குடும்ப மெனு ரகசியத்தை , ஒரு டெமான்ஸ்ட்ரேஷனோடு பெற்றுக்கொண்டார்கள். என் மனைவிக்கு சந்தோஷமான சந்தோஷம். அப்படி ஒரு சந்தோஷம். அவர்கள் சமையலையோ செய்த பண்டங்களையோ பேஷ் என்று சொன்னால் மகிழாத பெண்கள் இந்த உலகத்திலேயே கிடையாது. உண்மைதான். அதில் தவறேதும் இல்லை.

இன்டர்நெட்டில் நான் 40 வகை கொழுக்கட்டை இருப்பதாக அறிந்தேன். அவையெல்லாம் மனிதக்கொழுக்கட்டைகள். எங்கள் வீட்டில் செய்வது தான் ஒரிஜினல் அக்மார்க் பிள்ளையார் அப்ரூவ்டு கொழுக்கட்டை.இதை யார் தலையில் அடித்து வேணாலும் சொல்வேன்.

கொஞ்சம் நேரத்தில் எங்கள் வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் இருந்த பெரியவர் ஒருவர், எங்கள் மதிப்பிற்கு உரியவர், ரொம்ப நாளையப் பழக்கம், எங்கள் வீட்டுக்கு டிராஃபிக் மிகுந்த அந்த ரோட்டைத்தாண்டி வந்தார். என்மனைவியும் அவரை வரவேற்று தான் செய்த கொழுக்கட்டை நான்கை அவரிடம் தந்தார். அவரும் சந்தோஷமாக சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும் என்மனைவி அவரிடம் “ எப்படித்தாத்தா இருந்தது? என்று கேட்டாள். அவர் சொன்ன பதில் என்னையும் என்மனைவியையும் தூக்கிவாரிப் போட்டது. அவர் சொன்னதாவது
“ என்னம்மமா, வாய்க்குள்ளே போட்டவுடன் கரைஞ்சிடுத்து. நல்ல கனமா கெட்டியா வாயிலே கொஞ்சம் நேரம் வைத்துக் கடித்து சாப்பிடும்படியாக இருக்க வேண்டாமா? இப்படி குழந்தைங்க சாப்பிடறமாதிரி இவ்வளவு சாஃப்டா செஞ்சி இருக்கியே “ என்று சொல்லிவிட்டார். கர்நாடக சங்கீதப்போட்டிக்கு லியோனியைத் தலைமை தாங்கக் கூப்பிட்டமாதிரி ஆயிட்டுது. அதுக்கப்புறம் கொழுக்கட்டை செய்வதையே என்மனைவி நிறுத்திவிட்டாள்.

அன்றிலிருந்து வெளியில் எங்கே கொழுக்கட்டை கிடைக்கும் என்று நோட்டம் விட ஆரம்பித்தேன். கடைசியில் பொன்னம்பல வாத்தியார் தெருவில் இருந்த என் பஜ்ஜிக்கடைக்குப் பக்கத்திலேயே மூணு நிமிஷ நடை தூரத்திலே பிச்சுப்பிள்ளைத் தெரு என்ற சந்தில் ஒரு மாமியின் திண்ணைக்கடையில் தோசை, பஜ்ஜி, போண்டா, வடை, போன்ற வழக்கமான ஐடெம்கள் தவிர பட்டாணி சுண்டலும் இருந்தது. அதிசயத்திலும் அதிசயமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கு உப்பு, மற்றும் தித்திப்புப் கொழுக்கட்டை போடுவார்கள் என்ற செய்தி கிடைத்தது. விடுவேனா? அன்றிலிருந்து வாராவாரம் வெள்ளிக்கிழமை மாமி கடைக்குப் படை எடுப்புதான். அந்தக் கொழுக்கட்டை எங்கள் குடும்ப ஸ்டாண்டார்டுக்கு ரொம்ப தூரம் . கனமான சொப்பு. அதில் ஒரு சுண்டைக்காய்அளவுக்குப்பூர்ணம். அந்த தாத்தா சொன்னது போல் அந்த திக்கான சொப்புதான் வதக் வதக்கென்று வேகவைத்த அரிசிமாவை சாப்பிடுவது போல் வாய்நிறைய இருக்கும். நாங்கள் இருவரும் ஆபத்துக்குத் தோஷமில்லை என்ற அளவில் அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். இதை சாப்பிட ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

ஆக இன்னும் வேறு எங்கெல்லாம் கொழுக்கட்டை கிடைக்கும் என்ற ஆராய்ச்சி தொடர்ந்தது. கடைசியில் அதையும் கண்டுபிடித்தேன். வடக்கு மாட வீதியில் கிராண்ட்ஸ்வீட்ஸுக் கு அருகில் இருந்த ஒரு சிறு கடையில்சாயந்திரம் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் கொழுக்கட்டை கிடைக்கும் என்று தெரிந்தது. கொஞ்சம் லேட்டாகப்போனாலும் ‘நோ ஸ்டாக்’ தான். அதன் பிறகு நான் செய்த ஆராய்ச்சியில் தெற்கு மாட வீதி சித்திரைக்குளம் கட்டிங் ரோடில் ஒரு டெய்லரிங் கடைக்கு அடுத்தாற் போல் அங்கும் கொழுக்கட்டை தினமும் லிமிடெட் ஸ்டாக் விற்கிறார்கள் என்று தெரிந்தது. கொழுக்கட்டைப்பிரியர்கள் மைலாப்பூரில் நிறைய பேர் இருப்பது தெரிய வந்தது. ஆனால் எல்லா இடத்திலும் கிடைக்கும் கொழுக்கட்டைகளின் க்வாலிட்டியும் சுமாருக்குக்கீழேதான். எங்க எதிர்த்த வீட்டு தாத்தா ஸ்டாண்டர்டு தான். அடையார் ஆனந்த பவனில் கொழுக்கட்டை கிடைப்பதாகச்சொன்னார்கள். அது வீட்டில் செய்யும் சொப்புக்கொழுக்கட்டை இல்லை, பிடிச்ச கொழுக்கட்டை. எனக்கு அவ்வளவாக பிடிக்காத கொழுக்கட்டை .அது உப்புமாவை கையால் பிடித்து செய்வது. அதை கொழுக்கட்டை லிஸ்ட்லே இருந்து டிஸ்குவாலிஃபை செய்துவிட்டேன்.

அதற்குப்பிறகு விநாயக சதுர்த்திக்கு மைலாப்பூரில் அதற்கென்றே இருக்கும் மாமாக்கள், மாமிகள் மூலம் ஆர்டர் செய்து வாங்க ஆரம்பித்தேன். இவ்வளவும் எதனால்? அந்த தாத்தா சொன்ன ஓரிரண்டு வார்த்தையினால். “எங்கே தேடுவேன், நல்ல கொழுக்கட்டை சாப்பிட எங்கே தேடுவேன்” என்று நான் சோக கீதம் பாடிக்கொண்டிருந்த நேரத்தில் எங்கள் வீட்டுப்பெண்களால் மொபில் என்ற ஊரில் , அமெரிக்காவில் செய்ததை 2018ம் ஆண்டு சாப்பிட்டதை மறக்கவே முடியாது. ரொம்ப நாள் கழித்து அக்மார்க் கொழுக்கட்டை அமெரிக்காவில் கிடைத்தது.

இதற்கிடையில் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஒரு சைனீஸ் ரெஸ்டாரன்டில் டம்ப்ளிங் என்ற பெயரில் செய்யப்படும் கொழுக்கட்டையை சாப்பிட்டேன். அதே போல் சென்னையிலும் ஒரு சைனீஸ் ரெஸ்டாரெண்ட்லே சாப்பிட்டேன். அதெல்லாம் சீனா நம்ம நாட்டு எல்லையிலே விஷமம் செய்யறதுக்கு முன்னாடி. அவ்வளவுதான். நம்ம கொழுக்கட்டைக்கு அது ஈடாகாது. சீனா சமாசாரமே எல்லாம் அவ்வளவுதான். ஹை ஸ்டாண்டர்டு எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். நூடில்ஸ்கூட நான் இப்போது சாப்பிடுவதில்லை. ஏனென்றால் கொரோனா மாதிரி அதன் பிறப்பிடம் சீனா என்பதனால்.
********************

கையேந்தி பவன்கள்-3
அந்தக்காலத்தில் என் கொள்ளுப்பாட்டி நிறைய ஸ்நாக்ஸ், அதாவது தின்பண்டங்கள, செய்வார்கள். அதிலே பலவற்றின் பேரே எனக்கு மறந்து போய்விட்டது. எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அந்தப்பண்டிகைக்கான பலகார சிலபஸ்படி செய்வார்கள்.. வினாயக சதுர்த்தி என்றால் சொல்லவே வேண்டாம் கொழுக்கட்டை, கோகுலாஷ்டமி என்றால் உப்புச்சீடை, வெல்லச்சீடை, தவிர முறுக்கு, தேன்குழல் போன்ற இதர பல ஸ்நாக்ஸும் செய்வார்கள். கிருஷ்ணனுக்கு பால் சமாசாரம் பிடிக்கும் என்பதால் பால்கோவா செய்யும் பழக்கமும் உண்டு. தீபாவளி வந்தால் அதன் ஸ்நாக்ஸ் சிலபஸ் அன்லிமிடெட். சிறுவர்கள் பட்டாசு, மத்தாப்பு விஷயத்தில் தீபாவளி வருவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பே பிஸியாகி விடுவார்கள்.. எனவே வீட்டில் பெண்கள் அவர்கள் தொந்திரவு இல்லாமல் வகை, வகையான பட்சணங்கள் செய்வார்கள். தீபாவளி விடியற்காலையில் எண்ணை ஸ்நானம் செய்து விட்டு ஒரு தட்டு நிறைய ஸ்வீட்ஸையும், காரத்தையும் மொக்கினால், வயத்துக்கோளாறு வராமல் என்ன செய்யும்? எனவே அதிலிருந்து தப்ப அதற்கு முறிவாக தீபாவளி லேகியம் ஒன்றையும் தருவார்கள். அதுவும் பட்சணங்கள் போலவே மணம், குணம், சுவை நிறைந்ததாக இருக்கும். பொங்கலின்போது சக்கரைப் பொங்கலும், பல்லிருப்பவர்களுக்குக் கரும்பும். அவ்வளவுதான். வேறு தின்பண்டங்கள் இல்லை. திருவாதிரைக்குக்களி. காரடையான் *நோம்புக்கு உப்பு அடை, தித்திப்பு அடை . இப்படி பண்டிகைக்கு ஏற்றாற்போல் தின்பண்டங்கள் கிடைக்கும். அவை பண்டிகை முடிந்த பின்பும் ஒரு பத்துப் பதினைந்து நாட்களுக்கு வரும்.* அந்த பண்டிகை சீசன் முடிந்த பிறகு இம்மாதிரி தின்பண்டங்களை சாப்பிட அடுத்த சீசன் வரையிலும் காத்திருக்க வேண்டும்.

ஆனால் இன்றோ அவ்வாறு இல்லை . எல்லா நாட்களிலும், எல்லா திக், மற்றும் தின் பண்டங்களும் வருடம் பூராவும் கிராண்ட ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன் போன்ற பெரிய கடைகளிலும், வீதிக்கு வீதி பிள்ளையார் கோவிலுக்குப்போட்டியாக வந்துவிட்ட ஸ்னாக்ஸ் கடைகளிலும் எந்நேரமும் கிடைக்கிற படியால், விசேஷ நாட்களுக்கு மவுசு போய்விட்டது. அதனாலே பண்டிகைகளினால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு குறைந்து இன்று சிறுவர்களும், சிறுமியர்களும், இளைஞர்களும், இளைஞிகளும் பண்டிகைகளை முன்போல் அவ்வளவு ஆர்வத்துடன் கொண்டாடுவதில்லை.
எல்லாவிதமான பட்சணங்களும் கடையில் கிடைக்கும் இந்தக்காலத்திலும் என்னைப்போல ஒரு சிலர் ஒரு ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும்தான் இருக்கிறோம். ஒரு நாள் மோர்களி சாப்பிடவேண்டும் என்ற ஒரு தீராத அற்ப ஆசையின், விளைவாக நான் இந்த சென்னைப் பட்டிணத்தில் அலையாத இடமில்லை. சுற்றாத தெரு இல்லை. பல பேருக்கு அது என்ன வென்றே தெரியாது. என்ன காரணத்தினாலோ எனக்கு மோர்களி பிடித்துப் போய்விட்டது. மாதங்களில் மார்கழி என்பது போல் டிபன்களிலே மோர்களி.

ஒரு நாள் நான் தற்செயலாய் நங்கநல்லூரிலுள்ள ஒரு சிறு ஹோட்டலுக்குப்போய் பாகற்காய்தோசை ஆர்டர் பண்ணினேன். நான் பாகற்காய் தோசை என்று ஒன்றை அது வரையில் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்தில்லை. இதற்கு முன் டி.டி.கே ரோடில் பல வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு நடுத்தர தோசா என்ற ஹோட்டலில் 64 வகை தோசைகள் போடுகிறார்கள் என்று கண்டு பிடித்தேன். சாதா தோசை, மசால்தோசை, ரவா தோசை போன்ற ஐடெங்களெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கடுகு தோசை, கொத்தமல்லி தோசை, காரட் தோசை, வெஜிடபிள் தோசை, எள்ளு தோசை, கொள்ளு தோசை என்று தோசையின் மறு பக்கத்தில் ஏதாவது காய்கறியையோ, தானியத்தையோ பதமாக்கிப் போட்டு அதற்கு அந்தப்பெயர்சூட்டி விட்டார்கள். அங்கு கூட நான் இந்த பாகக்காய் தோசையைப் பார்த்ததில்லை. பாகற்காய்கறியை தோசை மீது ஒரு புரட்டுப்புரட்டி மசால்தோசை பாணியில் செர்வ் செய்வதுதான் பாகற்காய்தோசை. எனவே தோசையில் ஏதாவது ஒரு காயையோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காய்கறிகளையோ வேகவைத்து அத்துடன் தேவையான உப்பு, காரம் போன்று சேர்க்க வேண்டியவைகளை சேர்த்து தோசைக்குள் சுருட்டியோ பரப்பியோ வைத்தால் உங்களுக்கு எந்தப் பெயரில் தோசை வேண்டுமோ அதை செய்து கொள்ளலாம் என்ற ரகசியத்தை நான் தெரிந்து கொண்டேன். நம் வீட்டில்கூட இம்மாதிரி செய்து, நம்வீட்டுக்கு வரும் கெஸ்டுகளை பிரமிக்க வைக்கலாம். “உங்களைச்சொல்லிக் குத்தமில்லை. உங்க நாக்கு வர வர நீளம். அதை கொஞ்சம் அடக்கி வெய்யுங்க” ன்னு என் மனைவி சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பயந்து நான் சொல்றதில்லை.
நான் அந்தப்பாகற்காய்தோசையை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்த டேபிளில் அமர்ந்திருந்த ஒருவர் மோர்களி கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடடா, ஏமாந்து விட்டோமே என்று மோர்களிக்கு வயிற்றில் இடம் இல்லாததால் அதை சாப்பிடமுடியாமல் அதை சாப்பிட்டுக்கொண்டிருப்பவரை ஒரு ஏக்கத்துடன் பார்த்தபடி ஹோட்டலிலிருந்து வெளியேறினேன். நான் மறுநாள் காலையிலேயே நங்கநல்லூர் விட்டுக் கிளம்பிவிட்டபடியால் நான் அதற்குப்பிறகு இன்று வரையில் வேறே எங்கேயும் மோர்க்களியை கண்டேனில்லை. அது ஏன் எந்த கையேந்தி பவன்களிலும் போடுவதில்லை. காரணம் தெரியாது. ஒருவேளை மோர்களி ஃபேன்கள் என்னைத்தவிர வேறு யாரும் கிடையாதோ என்னவோ? ஆராய்ச்சிக்கு இது ஒரு நல்ல சப்ஜெக்ட்.
இதே போல சில ஏக்கங்களும், சந்தேகங்களும் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.

சில எக்ஸிபிஷன்களில் பொறித்த அப்பளாம் டெல்லி அப்பளாம் என்ற பெயரில் விற்பதுண்டு. அதன் சைஸ் கிட்டத்தட்ட ஒரு அடி விட்டம், அதாவது , டயாமீட்டர். அந்த மாதிரி அப்பளத்திற்கு பெரிய டிமாண்டு இருப்பதை நான் செய்த அப்பள சர்வேயில் கண்டிருக்கிறேன். எனக்கு இப்போது வரும் டௌட் என்னவென்றால் ஏன் இது எக்ஸிபிஷன் தவிர கையேந்தி பவன்களில் பாபுலர் ஆகவில்லை என்பதுதான்.. இதைப்பற்றி மூன்று நாள் ராத்திரி நித்திரை இல்லாமல் ஆராய்ந்தும் எனக்குத் தெளிவான காரணம் தெரியவில்லை. எல்லா ஹோட்டலிலும் சாப்பாட்டோடு அப்பளமோ, பப்படமோ போடுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, ஸ்டார் ஹோட்டல்களில் மசாலா பப்பட் என்ற பெயரில் பப்படம் மீது பல வெங்காய, காரட், பீட்ரூட் இன்னும் சில கண்ணினால் கணிக்கமுடியாத அளவுக்கு பொடியாக நறுக்கின காய்கறித்துகள்களை வதக்கிப்போட்டு மொறு மொறு என்று இருக்கவேண்டிய பப்படை மெதுக் மெதுக் என்று செய்து ஒரு ப்ளேட் பப்பட் ( 2) ரூ 50க்கு சப்ளை செய்கிறார்கள். கையேந்திபவன்களில் மசாலா இல்லாத பொறித்த ப்ளெயின் பப்படமோ, அப்பளமோ ஏன் விற்கக்கூடாது? . என்னைப்பொறுத்தவரையிலும் பொறித்த அப்பளத்திற்கோ பப்பட்டுக்கோ ரசிகர்கள் ஏராளம் இருப்பார்கள் என்பதால் கையேந்தி பவன்கள் கை அல்லது பை நிறைய சம்பாதிக்க முடியும். இது கஷ்டமான வேலை இல்லை. இதற்கு கொஞ்சம் ஆர்வம் தேவை. அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் மைக்ரோவேவில் சுட்ட அப்பளத்துடன் கெட்டி பசு நெய் சூப்பர் காம்பினேஷன். நான் இதன் அடிமை. அதற்கு நிரம்ப ரசிகர்கள் இருப்பார்கள் என்பதற்கு நான் காரண்டி.
இதேபோல் வடாம்களில் பல வகை இருக்கின்றன. அரிசி வடாம், ஜவ்வரிசி வடாம், நீள வடாம், இடியாப்ப வடாம், வெங்காய வடாம், இந்த மாதிரி. அவற்றைப்பொறித்து ஒரு 10 கிராம் பாக்கெட் அளவில் கையேந்தி பவன் கணக்குப்படி விற்றால் கொஞ்ச மாதங்களிலேயே கையேந்தி பவன்கள் ஓகோ என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிடும். ஒருவேளை ஜன்னல் வழியாக அவற்றைக் கொடுக்கும்போது அவை பொடியாகிவிடும் என்ற பயமோ? பீச் போன்ற இடங்களில் பஜ்ஜிபோல் இவற்றையும் அவ்வப்போது போட்டு சுடச்சுட விற்கலாம். எண்ணை சமாசாரமாச்சே என்று கவலைப்படுபவர்களா நீங்கள்? பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணை சமாசாரங்களை கையேந்தி பவனில் சாப்பிடுபவர் இப்படிச் சொல்லலாமா?

வடாமைவிட அந்த வடாம் மாவோட டேஸ்ட் இருக்கே அதற்கு ஈடு இணை கிடையாது. எங்கள் வீட்டிலே அந்தக்காலத்தில் என் அம்மாவும், பாட்டியும் வடாம் பிழிவதில் எக்ஸ்பர்ட்ஸ். பிழிந்த வடாத்தை நன்றாக வெய்யிலில்( அந்தக்காலத்துலேயே நாம் சோலார் எனர்ஜியை எப்படி எல்லாம் பயன் படுத்தி இருக்கிறோம்) காயப்போடுவது வழக்கம். அந்த வடாத்தை காக்கை ,குருவி எங்கள் ஜாதி என்று பாடிய படியே அவை வடாத்தில் தங்கள் மூக்கை, சரி அலகை என்று வைத்துக்கொள்ளுங்களேன், வைக்காமல் காவல் இருக்க வேண்டும். அந்த வேலைக்கு என் அம்மா என்னை மாத்திரம் கூப்பிடமாட்டார்,. ஏனென்றால் என் அம்மாவுக்குத்தெரியும், காக்காய், குருவி வைக்காத மூக்கிற்குப்பதிலாக, அந்த வடாம் ஈரம் காய்வதற்கு முன்பே அதை நான் பதம் பார்த்து விடுவேன் என்று. வானிலை ஆராய்ச்சியாளர்கள் எங்கள் அம்மா வடாம் வைக்கும் நேரத்தை அறிந்துதான் அன்று மழை பெய்யுமா, பெய்யாதா என்று அறிவிப்பார்கள். மழை வரவழைக்க சிலர் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு அமிர்த வர்ஷினி ராகத்தில் பாட்டுப்பாடுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு அவசியமே இல்லை. எங்கள் வீட்டில் வத்தல் செய்தால் அதைக்காயவைக்கும் நேரத்தில் நல்ல மழை பெய்யும் என்ற அறிக்கை கொடுத்துவிடலாம். இது சினிமாவின் மெயின் ஸ்டோரியில் ஒரு கிளைக்கதை மாதிரி. எனக்குத்தெரியும் அப்படி வடாம் மாவை யாரும் விற்கமாட்டார்கள் என்று . ஆனால் சபலம் யாரை விட்டது?

இன்னொரு விஷயம். வீட்டுலே இதை எல்லாம் கேட்டா, இப்ப எண்ணை விக்கிற விலையிலே இதெல்லாம் நமக்குக்கட்டுபடியாகாது என்றோ, எண்ணை பதார்த்தம் உடம்புக்கு ஆகாது என்றோ ‘வீடோ’ செய்துவிடுவார்கள் அப்போது ஃபேமிலி குடும்ப ஆண்களுக்கும் கையேந்தி பவன் கைகொடுக்கும். எனக்குத்தெரிஞ்சி கையேந்தி பவன்களுக்கு வர பல ஆண்களும் வீட்டுக்குத்தெரியாம வரவங்கதான் என்பதை அடித்துச்சொல்லமுடியும்

இதை எல்லாம் வீட்டிலேயே சாப்பிடலாமே என்று விஷயம் தெரியாதவர்கள்தான் கேட்பார்கள். இப்ப இப்படி ஏதாவது வெளியிலே கிடைக்காதா என்று பல வீட்டுப் பெண்களே ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது போலும். ஆனா பெண்கள் யாரும் கையேந்தி பவன்களுக்கு வருவதில்லை. வீட்டுக்காரரையோ, வீட்டுப் பையனோ அனுப்பி அந்த வீதி ஓரத்துலே நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். அது தவிர பல நடுத்தர வாலிபர்களுக்கு இந்த கையேந்தி பவன்கள்தான் Bachelors paradise. அவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
இவை எல்லாம் எண்ணை பண்டங்களாக இருப்பதால் பல வயிறு கேசுகள் இதை அவாய்ட் பண்ணலாம். ஆனால் ருசிக்கு அடிமையானவர்கள் தான் மெஜாரிட்டி. அவர்கள் அதைப்பற்றிக்கவலைப்படமாட்டார்கள்.
இதேபோல் படுசுவையான ஒரு ஐடம் குணுக்கு என்று சொல்லப்படும் அடைமாவு பக்கவடா. இதை சரியான பதத்தில் செஞ்சி சாப்பிட்டா அதோடே டேஸ்டு நாக்கை சுழட்டி, சுழட்டி அடிக்கும். அப்புறம் அந்த குணுக்குகளை அது தீருற வரையிலும் சாப்பிடுவதை நிறுத்தவே முடியாது. நிறுத்த ஒரே வழி வயிறு கொடுக்கும் சிக்னல்தால். அதையும் அலட்சியம் செய்தால் ஏதாவது சித்த, ஆயுர்வேத அல்லது அல்லோபதி டாக்டர்களிடம் போய் மருந்தோடு செமத்தையாக திட்டும் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். அமிர்தமுமே ஆனாலும் அளவுக்கு மிஞ்சினா விஷம்னு சொல்லும்போது அப்புறம் இதுக்கு மாத்திரம் விதிவிலக்காஎன்ன?
எந்த கையேந்திபவன்கள்லேயும் எனக்குத் தெரிஞ்ச வரையில் வெறும் வறுத்த கடலை, பொரி, பட்டாணி,பொட்டுக்கடலை மிக்சர் கிடைக்கிறது இல்லே. இது உடம்புக்கு ரொம்பவும் ஹெல்தி மாத்திரம் இல்லை. ரொம்பவும் டேஸ்டியாவும் இருக்கும். இன்னும் நிறைய ஐடியா வெச்சிருக்கேன். என்னை மாதிரி நாக்குக்கு அடிமையானவர்களுக்கு ஒரு நல்ல எதிர் காலம் காத்துக்கிட்டு இருக்கு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்வார்கள். டேஸ்டான உண்டி கொடுத்தோர் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தோரே.
என்வீட்டிலே என்மனைவி உயிரோடு இருந்தவரையிலும் இட்லி தோசைன்னு ஒண்ணு பண்ணுவா. அது ஒரு பக்கம் இட்லியாகவும், மறுபக்கம் தோசையாகவும் இருக்கும். இதை நான் கையேந்தி பவன் உட்பட எந்த ஹோட்டல்லேயும் பாத்ததில்லை. அப்படி ஒரு சமாசாரத்தை பலபேர் கேள்விப்பட்டதுகூட கிடையாதுன்னு நான் கேள்விப்பட்டேன். அது இட்லி பிடிக்காதவங்களை இட்லி சாப்பிடவும், தோசை பிடிக்காதவங்களை ( அப்படி யாராவது இருப்பாங்களா தெரியவில்லை) தோசை சாப்பிடவும் வைக்கும்

பாரம்பரிய பண்டங்கள் பலவற்றை மறந்ததோடு. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய தான்யங்களைப் பயன்படுத்தி தின்பண்டங்கள் செய்யலாம். ராகி களி, ராகி இட்லி, ராகி தோசை, கம்பங்கூழ், கம்பங்களி , கேழ்வரகு தோசைன்னு இப்ப பல டயடீஷியன்ஸ் தான்யங்களுடைய மகத்துவங்களை பக்கம்பக்கமக எழுத, அவை எல்லாம் ரொம்ப பாபுலர் ஆகிக்கொண்டு வருகின்றன. ஆனால் அதில் சோகமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்தத் தானிய தின்பண்டங்கள்தான் ஒரு காலத்தில் நம் ஊரில் ஏழைகளின் உணவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அது மேல்தட்டு மக்களின் உணவாக மாறி ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவோ, களியாகவோ ஆகிவிட்டது.
இப்ப எல்லாம் கையேந்தி பவனுக்குப்போட்டியா சங்கீத சீசன்லே சபா கச்சேரி நடக்கற மண்டபத்துக்கு ஓட்டலைப்போல சாப்பாட்டுக்கடைகள் வந்து விட்டன. கச்சேரி செய்பவர்கள் இங்கிருந்து வரும் கம கம வாசனையை தங்கள் பாட்டில் கமகம் ஏற்றி எஞ்சாய் பண்ணிப் பாட இது ஒரு நல்ல சான்ஸ். இங்கே சாப்பிடுவதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு. சங்கீதம் இவர்களுக்கு இரண்டாம் பக்ஷம்.. ஆனா இங்கே ரேட்டெல்லாம் கையேந்தி பவன் போல அந்த அளவுக்கு சீப்பா இருக்காது. பல பிரமுகர்கள் வரதுனாலே அதுக்கேத்தபடி இருக்கும். இங்கே இப்ப பல தான்யங்களை உபயோகிச்சி புது மாதிரியான தின்பண்டங்கள் எல்லாம் கிடைக்கிறதா கேள்வி.
குழிப்பணியாரம் என்பது நம் வீடுகளில் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது,. இன்றும் அதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கையேந்தி பவன்லேயும் குழிப்பணியாரம் கிடைப்பதில்லை. கிரான்ட் ஸ்வீட்ஸ், அடையாரில் குழிப்பணியாரத்திக்கென்றே ஒரு தனி செக்‌ஷன் இருக்கு. அதற்கு நீங்கள் க்யூவில் வெயிட் பண்ணிக் காத்திருந்துதான் வாங்க வேண்டி நேரும்.
இந்தத்தொழிலில் டைவர்சிபிகேஷனுக்கு நிறைய சான்ஸ் உண்டு. ஒரு ஆட்டோ ஓட்டுனர் 1000 விதமான இட்லிகளைத்தயாரித்து ( 64 வகை தோசைகளுப்போல பீட்ஸா இட்லி வகைகள், வெஜிடபிள் இட்லி வகைகள் என்று அசத்தி) உட்கார்ந்தபடியே நல்ல வருமானம் வரவே அதை பிரதானத் தொழிலாகக் கொண்டு ஆட்டோவை கஸ்டமர்ஸுக்கு செர்விஸ் செய்யப்பயன்படுத்துகிறார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஆட்டோ பவன் என்ற ஒரு பெரிய ஸ்டார் ஓட்டல் சொந்தக்காரர் ஆகிவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நீங்கள் பேப்பரில படித்திருப்பஈர்கள் சுயவேலை என்று சொல்லும்போது ஒருவர் வட நாட்டில் பக்கவடா விற்று ஒருவர் லட்சாதிபதியாக ஆகி இருக்கிறார் என்று.
அதை சில எதிர் கட்சி அரசியல் தலைவர்கள் கிண்டலடித்திருக்கிறார்கள். இதெல்லாம் வேலையில் சேர்த்தியா என்று. பாவம் அவர்களுக்குத்தெரிந்தது அவ்வளவுதான் இப்படி பக்கவடாவோ, பஜ்ஜியோ போட்டு சுய உழைப்பில் பிழைப்பவர்களை வக்கத்தவர்கள்தான் கேலிசெய்வார்கள். இதுவம் ஒரு நல்ல தொழில்தான். இந்தத் தொழிலுக்கு என்றும் அழிவு கிடையாது. மனிதர்கள் இருக்கும் வரையிலும், அவர்களுக்கு வயிறு என்று ஒன்று இருக்கும் வரையிலும், நாக்கு என்று ஒன்று இருக்கும் வரையிலும்,

இந்த சாப்பாடு சம்பந்தப்பட்ட தொழில்கள் எல்லாம் சாகா வரம் பெற்றவை. சிரஞ்ஜீவத்துவம் வாய்ந்தவை
அப்படி இருப்பதால்தானே சில MBAபடித்தவர்கள்கூட தாங்கள் செய்து வந்த பெரிய தொழிலை விட்டு விட்டு, ஹோட்டல் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது தெரியுமா? இந்தக,காலத்தில் B.E படித்து முடித்து வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள் ஏராளம். பலரும் 5000 அல்லது 6000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மளிகைக்கடையில் குமாஸ்தாவாக வேலை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதே போல M.Sc, PhD படித்து முடித்தவர்கள் எல்லாம் தோட்டி வேலைக்கு அப்ளை செய்கிறார்கள் என்றும் பத்திரிகையில் பார்த்தேன். இவர்களெல்லாம் இவர்கள் படிப்புக்கு செய்த அரைக்கால் செலவில் நான் மேலே குறிப்பிட்ட தின்பண்டங்களை செய்யக் கற்றுக்கொண்டு இருப்பார்களே ஆயின் குறைந்த பட்ச முதலில் ஒரு கையேந்தி பவனை ஆரம்பித்தால் யாருக்கும் அடிமைப் பட அவசியம் இல்லாமல் சுயசம்பாத்தியத்திலேயே ஒரு
டீசன்ட்தொகையை மாசாமாசம் சம்பாதிக்க முடியும். இதில் எந்தவிதமான அவமானமும் இல்லை. நானே எனக்கு யஜமான் என்ற தோரணையில் தலை நிமிர்ந்து வாழலாம். படித்தவர்கள் என்றவகையில் இவர்கள் செய்யும் தொழிலில் புதுமையைப்புகுத்தலாம். நன்றாக தொழில் செய்தால் நன்கு வளர்ந்து இவர்கள் மேலும் பத்து இருபது பேருக்கு வேலை தரலாம்.
.
இந்தக் கையேந்தி பவன்களின் அருமையை உணர நீங்கள் பேசலர்களாக இருக்கணும், இல்லை வொய்ஃபாலே அலட்சியம் செய்யப்பட்டவர்களா இருக்கணும் அல்லது நல்ல டேஸ்டுக்காக அலையும் நாக்கு வீங்கி நாராயணனா இருக்கணும்
காலத்தினால் மறக்கப்பட்ட சில தின்பண்டங்களை சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் மைலாப்பூர் திருவிழா அல்லது தெருவிழாவின்போது எழுப்பப்படும் ஸ்டால்களில் கிடைக்கும். நான் சென்னையில் இருந்தவரை எதையும் தவற விட்டதில்லை. இப்போது அந்த இனிய நாட்களை நினைத்து நாக்கைச் சப்புக்கொட்டியபடி எண்ண அலையில் மிதப்பதில் சந்தோஷம் காண்கிறேன். இன்றைய கையேந்தி பவன்கள் நாளைய உலகளாவிய மகேந்திர பவன்கள் என்பதை உணரவேண்டும்.

இப்ப கையேந்தி பவன்களுக்குப்போட்டியாக டிவிக்களில் பல சேனல்களிலும், சமையல் குறிப்பு, நாள் தவறாமலோ, வாரந்தவறாமலோ வந்து கொண்டு இருக்கிறது. அதனாலே பல பெண்கள் அடுப்படியில் செய்யும் தவறுகள் எல்லாம் புதுப்பெயரில் புது தின்பண்டமாக தினமும் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு டிவி ரசிகர்கள் பலியாவதற்குமுன்பு அந்த விளக்கம் சொல்லும் பெண்களின் கணவன்மார்கள் பலிகடாவாக (கினி பிக்) ஆகிறார்கள். அவர்களுக்கு நாம்நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். .

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (17-Nov-21, 8:19 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 108

மேலே