ஹரித்வாரில் லீலைகள் - பகுதி 1

நான் இங்கே பகிரப்போகும் சில சுவையான விஷயங்கள் என் வாழ்வில் நடந்த சாதாரண சம்பவங்களே . முதல் சம்பவம் நடந்து 35 வருடங்களுக்கு மேல் இருக்கும். நான் அப்போது ஹரித்வார்( உத்திர பிரதேசம்) நகரில் ஒரு மத்திய அரசு பொதுவுடமை கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன்.நானும் என்னுடன் பணி புரிந்த இரண்டு தமிழ் நண்பர்களும் ஒரு அறையில் சேர்ந்து வசித்து வந்தோம். நாங்கள் அப்போது கட்டை பிரம்மச்சாரிகள் என்பதை சொல்லவும் வேண்டுமா?. மூவருமே சென்னையிலிருந்து நேரடியாக ஹரித்வாருக்கு தூக்கி அடிக்கப்பட்டதாலும் , ஹிந்தி பாஷை புரியாததால் மிகவுமே தத்தளித்து கொண்டிருந்தோம். அங்குள்ள மிக அதிக குளிரினால் அதிக உதறலுடனும் தவித்துக்கொண்டிருந்தோம். பிரம்மச்சாரிகளால் வேறு என்ன செய்ய முடியும்?)

தமிழ் கேட்டு குளிர்ந்த காதுகள்:
அலுவலகத்தில் சேர்ந்து கொஞ்ச நாட்களில் வேலை விஷயமாக ஒருவரிடம் சென்றோம். எங்கள் தேவை குறித்து ஆங்கிலத்தில்( ஆங்கிலமும் அப்போது அந்த அளவுக்கு சரளமாக வராது. ( இப்போ மட்டும் எப்படியாம் என்ற தர்மசங்கடமான கேள்விகளை கேட்கவேண்டாம்) அவருக்கு மிகவும் சிரமப்பட்டு எடுத்து சொன்னோம். இவற்றை கேட்டுவிட்டு " அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம். நான் ஏற்பாடு செய்கிறேன் " என்று ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்த மொழியில் கூறுவார் என்று எதிர்பார்த்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம். ஏனெனில் மேற்கூறிய வார்த்தைகளை அவர் தமிழில்தான் கூறினார். பின்னர் அவரது பாட்டனார் ஹரித்துவார் நகரில் 50 வருடங்களுக்கு முன் வந்து குடியேறினார்கள் என்றும் கூறினார். தமிழ் எழுத படிக்க தெரியாது. ஏதோ சுமாராக பேச முடியும் என்றார். அதன் பின்னர் அவர் எங்களுக்கு பல வகையில் உதவினார். அதைப்போலவே ஒருமுறை எங்கள் கம்பெனி ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அனைவரும் ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தனர் . ஒருவரிடம் நான் அரைகுறை ஹிந்தியில் " (மெடிக்கல் கிதாப் கஹான் மிலேகா") மருத்துவ புக் எங்கே கிடைக்கும்? என்று கேட்டோம். அவர் எங்களை உற்று பார்த்துவிட்டு " எங்கும் போக வேண்டாம். நானே உங்களுக்கு அவற்றை ஏற்பாடு செய்கிறேன்" என்று தமிழில் சொன்னது எங்களுக்கு அவ்வளவு திருப்தியாக இருந்தது. கிடைத்தார் இன்னொரு தமிழ் நண்பர் என்ற மகிழ்ச்சியும் கூடவே கிடைத்தது.

சர்க்கஸ் கரடி மோட்டார் பைக்கில் செல்வது:
இன்னொரு முறை நாங்கள் ஐந்து ஆறு தமிழ் நண்பர்கள் கலந்து எங்களது அலுவலக அதிகாரிகள் சகா ஊழியர்கள் பற்றி கொஞ்சம் நகைசுவையாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது நான் இப்படி கூறினேன் " நம்முடைய உயர் அதிகாரி ராம்கோபால் (கொஞ்சம் குள்ளமான பருமனான கண்ணாடி போட்ட நபர்) , கருப்பு கோட் அணிந்து ஹெல்மெட் அணிந்து (அந்த காலத்திலேயே) கொண்டு அவரது மோப்பெட்டை(moped) ஆமையின் வேகத்தில் ஓட்டி செல்லும்போது, சர்க்கஸில் கரடி பைக் ஒட்டி செல்வது போல இருக்கும்" என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சுப்ரமணியன் என்கிற ஒரு நண்பன் சிரிக்க ஆரம்பித்தான், சிரித்துக்கொண்டே இருந்தான். அப்போது மட்டும் இல்லை அடுத்த மூன்று நான்கு மாதங்கள் வரையில் அவ்வப்போது இதை நினைத்து கொண்டு சிரித்து கொண்டிருந்தான். இதை எனக்கு தெரியவும் படுத்தினான்.

ஒரு முறை நான் அவன் அறைக்கு சென்று அவனுடன் இரவில் தங்கினேன். அப்போது இரவு நாங்கள் படுக்கையில் படுத்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென நான் சொன்ன ராம்கோபால் மோப்பெட்டில் சென்றது பற்றிய நகைச்சுவை அவனுக்கு ஞாபகம் வந்து அப்படி வயிறு வலிக்க சிரித்தான். ஆனால் அந்த நகைச்சுவையின் தயாரிப்பாளரான நான் கூட இந்த அளவுக்கு சிரிக்கமுடியவில்லை. அப்போது தான் நினைத்தேன் " நகைச்சுவை உணர்வு வேறு, நகைச்சுவையை கேட்டு வயிறு விட்டு வயிறு குலுங்க வயிறு வலிக்க சிரிப்பதென்பது வேறு". நகைச்சுவை உணர்வு இருப்பது மிகவும் நல்லது ஆனால் வயிறு வலிக்க சிரிப்பது தான் உடலுக்கு ஒரு நல்ல மருந்து.

ஓடாமஸுக்கு அடங்காத கொசுக்கள்:
சரி, இப்போது சுப்ரமணியுடன் அன்று நான் பட்ட அவஸ்தை ஒன்றை சொல்கிறேன். மேலே குறிப்பிட்ட நகைச்சுவைக்கு பிறகு வேறு கொஞ்சம் அரட்டை அடித்து விட்டு இருவரும் தூங்கி விட்டோம். நள்ளிரவுக்கு பின் திடீரெண்டு எனக்கு எதோ சத்தம் கேட்டு விழித்து பார்த்தேன். சுப்பிரமணி படுக்கையில் உட்கார்ந்து கொண்டு " அட ச்ச்ச, அட ச்ச்ச " என்று புலம்பியபடி முதுகிலும் கையிலும் அடித்துக்கொண்டிருந்தான். நான் கேட்டேன் " என்னடா என்ன ஆயிற்று? ஏன் உடம்பை அடித்துக்கொள்கிறாய் ?. " அட நீ ஒண்ணு, உன்னை கடிக்கவில்லையா இந்த பயங்கர கொசுக்கள்?.என்று கேட்டான் சுப்ரமணியன். " இல்லையே என்னை கொசு கண்டிக்கவில்லை" என்று சொல்லி மீண்டும் தூங்கிவிட்டேன். பின்னர் மீண்டும் சத்தம் கேட்கவே முழித்து பார்த்தால் " ஏய், என்னை தூங்கவிட மாட்டீங்களா என்று கோபத்துடன் கொசுக்களை திட்டிய வண்ணம் உடம்பிலும் கையிலும் அடித்துக்கொண்டிருந்தான். " ஏன்டா உன்கிட்ட ஓடோமாஸ் இல்லையடா? இருந்த கொஞ்சம் தடவிக்கொண்டு படு. கொசு கடிக்காது" என்றேன். அவன் இன்னும் கோபம் கொண்டு " நான் ஒரு ஓடோமாஸ் டியூப் முழுவதையும் இதுவரை காலி செய்து விட்டேன். இன்று மாலை தான் வாங்கி வந்தேன்" என்றபோது என்னை அறியாமல் சிரித்து விட்டேன். அப்போது நினைத்தேன் " நான் ஓ பாசிட்டிவ் ரத்தம் என்பதால் இந்த கொசுக்கள் என்னை விட்டுவிட்டதோ" என்று.

சில்லறை எண்ணுவதை அனுபவித்த கண்டக்டர்:
ஒரு முறை நாங்கள் அங்கே லோக்கல் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் அங்கே குறைந்த டிக்கெட் விலை 15 பைசா அதிகம் 50 பைசா அவ்வளவே. ஒரு பயணி நடத்துனரிடம் பத்து ரூபாய் கொடுத்து ஒரு 15 பைசா டிக்கெட் கொடுங்க என்று கேட்டபோது அவர் பொறுமையுடன் " அவருடைய நடத்துனர் ஜோல்னா பையில் கையை விட்டு சில்லறை எடுக்க ஆரம்பித்தார். முதல் முறை எடுத்தார். மீதி கொடுக்க சரியாக 85 பைசா கிடைக்கவில்லை. எடுத்த சில்லறையை எல்லாம் மீண்டும் பையில் போட்டுவிட்டு மறுபடியும் கையில் சில்லறையை அள்ளினார். அப்போதும் தேவையான 85 பைசா சில்லறை கிடைக்கவில்லை. எடுத்த சில்லறை எல்லாவற்றையும் மீண்டும் பையில் போட்டுவிட்டு மறுபடியும் சில்லறையை கையில் எடுத்தார். இதை போல ஐந்து ஆறுமுறை செய்துவிட்டு பின்னர் ஒரு வழியாக 85 பைசாவை பயணிக்கு கொடுத்தார். பயணி வாங்கிக்கொண்டு " இன்னும் 9 ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டும்" என்றார். கண்டக்டர் கைவிரல்களின் நடுவே சொருகி இருந்த நோட்டுகள் அனைத்தையும் பிரித்து வைத்து கொண்டு, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை தேடி எடுத்து, மீண்டும் கொஞ்சம் குறைகிறது என்று மறுபடியும் ஜோல்னா பையில் கைவிட்டு மூன்று நான்கு முறை மொத்த சில்லறைகளையும் வாரி எடுத்து, அதிலிருந்து தேவையான சில்லறைகளை பொறுக்கி எடுத்து, அந்த பயணியிடம் கொடுக்கும்போது அவன் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்து விட்டதால், அவன் அவசர அவசரமாக கண்டக்டர் கொடுத்ததை எண்ணி கூட பார்க்காமல், இறங்கி விட்டான்.
இதற்கிடையில் பஸ்ஸில் ஏறியவர்கள் " கண்டக்டர், எனக்கு 15 பைசா , எனக்கு 20 பைசா, எனக்கு 25 பைசா டிக்கெட் கொடுங்கள் என்று மாறி மாறி கேட்டுக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் டிக்கெட் கூட வாங்க முடியாமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி சென்று விட்டனர். இந்த காட்சியை கண்டு நானும் என் இரு நண்பர்களும் வாய்விட்டு சிரித்தோம் (கண்டக்டருக்கு தெரியாமல் தான்). இந்த மாதிரியான வித்தியாசமான கண்டக்டரை நான் இதுவரையில் வேறு யாரையும் கண்டதில்லை.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Nov-21, 9:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 43

மேலே