ஹரித்வாரில் லீலைகள் நிறைவு பகுதி

ரசகுல்லா ரச பிரியர்:
ரோஷன் லால் சர்மா என்ற ஒரு சக ஊழியர் என்னுடன் ஹரித்துவாரில் பணியாற்றியவர். இவர் புகழ் பாடும் சரித்திரத்தை உங்களுடன் பகிர துடிக்கிறேன். நான் பணி புரிந்த அந்த தொழிற்சாலை வளாகம் முழுவதும் கேன்டீனில் தயார் செய்து காலை 9 மணி அளவில் தேநீருடன் எதாவது உப்பு தின்பண்டமும் மதியம் 2 மணி அளவில் தேநீருடன் ஏதேனும் இனிப்பும்( பாதுஷா, கடலை மாவு லட்டு , குஞ்சா லட்டு இது போல) எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. ஓசியில் இல்லை ஆனால் மிக மிக குறைந்த விலையில். ஒரு கப் தேநீர் 5 பைசா. அனைவரும் இரண்டுக்கு குறையாமல் இனிப்பை வாங்கி தேநீரை அருந்தியபடி அதனுடன் ரசித்து சாப்பிடுவார்கள். ஒரு லட்டு 10 பைசா என்பதால் நிறைய பேர் 10 , 20 என்று வீட்டுக்கும் வாங்கி செல்வார்கள். வாரத்தில் ஆறு நாட்களில் மேலே சொன்ன பட்சணங்கள் காலை மாலை தேநீருடன் கிடைக்கும்.

இதை தவிர, மாதத்தில் குறைந்தது மூன்று முறையாவது வேறு ஏதாவது பார்ட்டி ஒவ்வொரு செக்ஷனிலும் நடக்கும். புதிதாக வீடு வாங்கினால், மகனோ மகளோ ஒரு வகுப்பிலிருந்து அடுத்த உயர் வகுப்புக்கு சென்றால், பதவி உயர்வு எவருக்கேனும் வந்தால் , புதிய ரேஷன் கார்டு கிடைத்தால், புதிய வாகனம் வாங்கினால், திருமணம் எவருக்கேனும் நடந்தால், எவரது மனைவிக்காவது குழந்தை பிறந்தால் இது போன்ற பல சந்தோஷம் தரும் நிகழ்ச்சிகள் குறித்து எவராவது ஒரு சகா ஊழியர் சத்தமின்றி கூறிவிட்டால் கூட போதும் மேலே சொன்ன பார்ட்டி கண்டிப்பாக செக்ஷனில் நடை பெற்றுவிடும். யார் இதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால், எவர் வீட்டில் இதுபோன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கிறதோ அவர்தான் இதற்கான பணத்தை மேலே குறிப்பிட்ட ரோஷன்லால் சர்மாவுக்கு கொடுக்க வேண்டும். ரோஷன் லாலுக்கு பிடித்த இரண்டு இனிப்புகள் ரசகுல்லா அதன் தம்பி குலாப் ஜாமூன். எந்த ஒரு பார்ட்டி என்றாலும் இவர் தான் இனிப்பு வாங்கி வருவார். இவர் கார வகைகளை எப்போதாவது தான் வாங்குவார். ஏனெனில் இவருக்கு ரொம்ப பிடித்தது இனிப்புதான்.
மதிய உணவு முடித்து இவர் இவருடைய நெருக்கமான நண்பர் திவேதி என்பவரை அவருடைய வண்டியில் கூட்டிக்கொண்டு சென்று இனிப்பு வாங்கி வருவார். முக்கால் வாசி ரசகுல்லா தான் இருக்கும்.
அதை மூன்று நான்கு பாலிதீன் பைகளில் தான் வாங்கி வருவார். ஏனெனில் கிட்டத்தட்ட 20 பேர்களுக்கு கொடுக்க வேண்டுமே.சர்மா திவேதி இருவர் தான் இனிப்பை காகித தட்டுகளில் எடுத்து வைத்து அனைவருக்கும் கொடுப்பார்கள். காகித தட்டு என்பதால் ரசகுல்லா இரண்டை ஒவ்வொரு தட்டினில் வைத்து எல்லோருக்கும் கொடுத்து விடுவார், ஆனால் ரசகுல்லாவுடன் ஜீரா தண்ணீர் இருக்கும் அல்லவா? அதை கொஞ்சமாவது எவருடைய தட்டிலும் ஊற்ற மாட்டார். அப்படி ஊற்றினால் கீழே சிந்தி விடும் என்று சொல்லிவிடுவார். இவரும் இரண்டு மூன்று ரசகுல்லாக்களை மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுவிடுவார். சாப்பிட்டு விட்டு, எல்லோரும் பார்ட்டிக்கு காசு கொடுத்த ஊழியருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றுவிடுவார்கள். சுவாரஸ்யமே இனிமேல் தான். ஆமாம். ரசகுல்லாக்கள் காலியாகி விடும். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு டம்பளர் வரை ஜீரா தண்ணீர் பாலிதீன் பைகளில் தங்கி, தேங்கி இருக்கும். சர்மா அவர் மேசைக்கு சென்று அங்குள்ள அவரது கிளாஸ் டம்பளரில் இந்த ஜீரா தண்ணியை ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக (மதுவை ரசித்து குடிப்பது போல) உறிந்து அவரே குடித்து விடுவார். நான் மிகவும் ஆச்சரிய பாடுவேன். எப்படி இரண்டு டம்பளர் ஜீரா தண்ணீரை ஒருவராக குடித்து விடுகிறார் என்று. ஆனால் அதெல்லாம் அவருக்கு சர்வ சகஜம் என்று பின்பு தெரிந்து கொண்டேன். நீங்கள் இப்போது சந்தேகத்துடன் கேட்கலாம், ஆமாம், சர்மாவின் நண்பர் திவேதிக்கு ஜீரா தண்ணீர் கிடையாதா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் ஒவ்வொரு பார்ட்டியிலும் இரண்டு ரசகுல்லாவுடன் நிறுத்தி கொள்வார்(???).

செய்தி இல்லையென்றாலும் மகிழ்ச்சி பார்ட்டி:
கொஞ்சம் அதிகமான நாட்கள் பார்ட்டி இல்லாமல் போனால் சர்மாவுக்கு பொறுக்காது. ஒரு முறை சந்தோஷ செய்திகள் கிட்ட தட்ட ஒரு மாதமாக வரவில்லை. பொறுமை இழந்த சர்மா ஒருநாள் எல்லா சக ஊழியர்களையும் கூட்டி " கிட்டத்தட்ட ஒருமாதமாகிறது. எவர் ஒருவரும் சந்தோஷ செய்தி அறிவிக்கவில்லை. இருப்பினும் நம் சந்தோஷத்தின் வேகத்தை குறைக்கக்கூடாது. எனவே, அனைவரும் தலா 20 ரூபாய் கொடுங்கள். நாளை, சனிக்கிழமை, மதியம் நம் செக்ஷனில் ஒரு பார்ட்டி வைத்துவிடலாம்". எவருக்கும் இதை எதிர்த்து பேச தைரியமும் இல்லை. பலருக்கு இந்த சாக்கில் ஒரு மணி நேரம் அலுவலக வேலை செய்யாமல் இனிப்புடன் பொழுது கழியும் என்று. அதைப்போலவே அந்த விஷயம் ஒன்றும் இல்லாத சந்தோஷ பார்ட்டியும் நடந்தது. சர்மா இரண்டு டம்பளர் ஜீரா தண்ணீர் குடித்திட பார்ட்டி இனிதே நிறைவேறியது.

சிரிக்கும் சித்திரம்:
நாங்கள் மூவரும் ( அதன் பிரம்மச்சாரிகள்) ஒரு வீட்டின் கீழ் போர்ஷனில் தங்கியிருந்தோம். அப்போது பக்கத்துக்கு வீட்டிற்கு ஒரு புதிய குடும்பம் வந்து குடியேறியது. இளமையான கணவன் இளமையான மனைவி, அவர்களது இரு பள்ளியில் படிக்கும் சிறு பிள்ளைகள். அந்த மனைவி, அதாவது பக்கத்துக்கு வீட்டுக்காரரின் மனைவி ஓரளவுக்கு அழகுதான். நான் எப்போது அவளை பார்த்தாலும் என்னை பார்த்து சிரிப்பாள். ஒரு வாரம் இதை கவனித்தேன். ஒரு முறையேனும் நான் அவளை பார்த்தபோது அவள் என்னை பார்த்து சிரிக்காமல் இருந்ததே இல்லை. அடுத்த வாரம் என்னுடைய ஒரு நண்பன் என்னிடம் கூறினான் "பக்கத்துக்கு வீட்டம்மா என்னை எப்ப பார்த்தாலும் சிரிக்கிறாங்க" . அடுத்த ஓரிரு நாட்களில் எங்களது மூன்றாவது நண்பன் எங்களிடம் இதையே சொன்னான். என்னடா இது வம்பாக போய்விட்டது என்று நாங்கள் நினைக்கையில், அந்த மனைவியின் கணவர், ஒரு முறை திடீரென எங்கள் வீட்டிற்கு வந்தார். எங்கள் மூவருக்கும் உடம்பு வெலவெலத்துப்போய்விட்டது. அவரது மனைவி எங்களை பற்றி ஏதாவது புகார் கூறிவிட்டாளா என்று பயந்து போய் விட்டோம். வந்தவர் சிரித்து பேசிவிட்டு அடுத்த நாள் மாலை எங்கள் மூவரையும் அவர் வீட்டிற்கு வந்து தேனீர் அருந்தும்படி கேட்டுக்கொண்டார். கரும்பு தின்ன கூலியா, நன்றியுடன் சரி என்று சொன்னோம். அவர் சென்று விட்டார்.

அடுத்த நாள் மாலை நாங்கள் மூவரும் நன்றாக டிரஸ் செய்து கொண்டு (சொல்லாமல் கொள்ளாமல் தான் மூவரும் டிரஸ் செய்து கொண்டோம். ஆனாலும் ஒவ்வொருவரும் அவரிடம் உள்ள சிறந்த ட்ரெஸ்ஸை அணிந்துகொண்டோம்). பக்கத்துக்கு வீட்டிற்கு சென்றோம். வெளியிலே அவரது மனைவிதான் நின்று கொண்டிருந்தாள். சிரித்தபடியே எங்களை வாருங்கள் என்று வீட்டிற்குள் அழைத்தாள். கொஞ்ச நேரம் அவர் கணவரும் அவளும் சேர்ந்து அமர்ந்து எங்களுடன் அளவளவினர்கள். அப்போது தான் நான் கவனித்தேன். அந்த பெண்ணின் முகம் எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டிருப்பது போல தான் இருந்தது. அவள் அதிகமாக சிரித்தால் முகத்தில் ஏற்கெனவே உள்ள சிரிப்பு இரட்டிப்பாகிவிடுகிறது. நான் என் நண்பர்கள் முகத்தை அவ்வப்போது பார்த்தேன். அவர்களும் நான் கவனிப்பதை போலவே அவளை கவனித்துவிட்டார்கள் என்பது நன்றாக புரிந்தது. அந்த தம்பதியர் நல்ல குணம் உள்ளவர்களே.ஏனெனில் எங்களை அழைத்து இனிப்பு காரம் கொடுத்து பின்னர் சூடான இஞ்சி போட்ட தேநீர் கொடுத்து அனுப்பினார்கள். வீடு திரும்பி வந்தவுடன் மூவரும் வாயடைத்து போய்விட்டோம். இப்படிப்பட்ட முகம் உள்ள பெண்ணை நாங்கள் மூவரும் அதுவரை பார்த்ததே இல்லை. நாங்கள் மட்டும் அல்ல எந்த ஒருவர் அவளை பார்த்தாலும், அந்த மனிதரை பார்த்து அவள் சிரிப்பது போலவே அவள் முகம் இருந்தது. அதனால் தான் அவள் கணவர் அவளை திருமணம் செய்தாரோ என்னவோ!
இறைவனின் படைப்பில் எப்படி பட்ட சிரிப்புகள், எப்போதோ வரும் சிரிப்பு ( காவேரி ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல), அவ்வப்போது வரும் சிரிப்பு(கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் வருவது போல) , எப்போதும் இருந்துகொண்டு இருக்கும் சிரிப்பு , எங்கள் பக்கத்துக்கு வீட்டு மச்சானின் மனைவி முகம் போல( அதாவது வற்றாத ஜீவநதி கங்கை தண்ணீர் போல). தண்ணீரே இல்லாத பாலாறு போல உள்ள முகங்களும் இப்பூவுலகில் நிறைய உண்டு. இதை பற்றி நான் இங்கு அதிகமாக பேச விரும்பவில்லை. ( ஏனெனில் என் முகம் கடுகு போட்டால் வெடிக்கும் போல இருக்கிறது என்று என்னுடைய அண்டைக்காரிதான் ( தவறு, சண்டைக்காரி) கூறுகிறார்).

ஆனந்த ராம்

அதன் பிறகு இரண்டு முறை அவர்களது பிள்ளைகளின் பிறந்த நாள் பார்ட்டிக்கு கூட போய் வந்தோம். வெறும் கையுடன் இல்லை, பரிசுகள் வாங்கி கொண்டு தான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Nov-21, 10:40 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 64

மேலே