யாதெனின் யாதெனின்

காய்ந்து கிடக்கும் விளைநில சரிவுகளைப் போலத்தான்
வெற்று தனங்களை சுமக்கும்
அவளது ஆழ்மன புழுக்கமும்!!

ஒருதுளி நஞ்சை பசியாற்றுவதில் கலப்பதைப் போலத்தான் அக்கறையென உமிழ்நீரில் கலந்து இன்னுமும் நாள் தள்ளிப் போகலையாவெனும் உறவுகளின் விசாரிப்புகளும்!!

அலங்காரப் படகுகளைத் தாங்கும் நீரற்ற நீர்த்தேக்கங்களைப் போலத்தான்
உனக்கு மட்டும் ஏன் ஆண்டவன் இன்னும் கண்ண திறக்கலயேவெனும்
பக்கத்துவீட்டினரது புலம்பல்களும்!!

நோயாளியின் அறையென பிரகடனப்படுத்தும் நச்சுக்கொல்லியின் மணத்தைப் போலத்தான்
ஒவ்வொரு முறையும் நாள் தள்ளிப் போனாலும் இரு கோட்டினைக் காட்டாத அந்த சூலுற்றதை காட்டும் கருவியும்!!

அவளது மார்பெலும்புகள் மஜ்ஜை
இழந்து போயின
மடியேறும் மார்பினை உரசும் மழலையின்றி!!

காலங்காலமாக கருவறையை
புனிதமென கதை வளர்க்கும்
இந்த சமூகத்தில்
சரிந்து கொண்டிருக்கும்
அவளது தன்னம்பிக்கையை
தூக்கி நிறுத்தவேனும் கூறிடுங்கள்

இங்கே புனிதமென கொண்டாடப்படும் பூப்படைதலும் தாய்மையடைதலும் வெறும் சடங்குகளுக்காகவே யன்றி அவளது சுயசிந்தனகளை சாகடிக்கவல்ல என்று!!

இதை வாசித்து முடிக்கும் முன்பே என்னை பற்றிய உயர்ந்த எண்ணங்களை கபளீகரம் செய்திடும் உங்கள் வறட்டு கௌரவத்திடமும் வழமைக்கு ஒவ்வாத பண்பாடுகளிடமும் ஒன்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்...

மற்ற பெண்களைப் போன்றே பூப்படைந்து தாய்மையடைந்த
இவளொரு போலி பெண்ணியவாதி என்று!!
- மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி சரவணன் (26-Nov-21, 10:23 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 67

மேலே