காட்சிப்பிழை
காட்சிப்பிழை
மேளச்சத்தம் ஒருபக்கம்
ஐயர் ஓசை ஒருபக்கம்
அரங்கம் முழுதும் சந்தோசம்
அவர் அவர் முகத்தில் வெளிப்பட
யாரும் அறியா நொடியில்
துடைத்த கண்ணீரை
யார் அறியோர்
காட்டிய காதலெல்லாம்
கண்முன் ஓட
பேசிய வார்த்தையெல்லாம்
செவிகளில் நிறைந்தபடி
நெஞ்சம் உடைந்து
வந்த வேலை மறந்து
நான் நின்றேன்
அவள் முகத்தில் அத்தனை இன்பம்
அவன் அருகினில் அவள் விருப்பப்படி
ஊர் அறிய தன் காதலைசொல்லி
புத்துணர்ச்சியாய் புதுமகளாய்
அவள் அவன் அருகில் நிற்க
நான் அவள் எதிரில்
என் காதலை எண்ணியபடி
நின்றுகொண்டிருந்தேன்
ஆம் அவளும் மணமேடையில்
நானும் மணமேடையில்
அவள் அவள் துணையோடு
நான் என் தொழிலோடு
எத்தனை நாட்கள் இதை
எண்ணி எத்தனை இரவுகள் கடந்திருந்தேன்
எத்தனை ஆசைகள் வளர்த்திருந்தேன்
அனைத்தும் அர்த்தமற்றது ஏனோ
இப்படியொரு நிகழ்வில்
இப்படியொரு சூழலில்
என்னை நிற்கவைத்தது ஏனோ
திருமாங்கல்யம் ஏறும்
அத்தருணம் அவள் வடித்த சிறுகண்ணீரும் மணவாளனை பார்த்து சிரித்த புன்சிரிப்பும்
அவள் காதலை அவ்வளவு அழகாக்கியது
என் காதலை எண்ணி
வருந்த கூட நேரமில்லை அங்கே
மீண்டும் நிகழா அத்தருணத்தை
நான் காட்சிப்படுத்தியே ஆகவேண்டும்
மனதை திடப்படுத்தி
முகத்தில் பொய்சிரிப்பை கொடுத்து
அந்த காட்சியை படமெடுத்த அத்தருணம்
என் விழிபட்ட வலியை
என் கேமரா மட்டுமே உணரும்
இருந்தும் அவள் காதலை எண்ணி
கொஞ்சம் நெஞ்சம் நிறைந்தேன்
அவள் முழு நிறைவானாள்
நெற்றிக்கோட்டினில் தன்காதலை
அவ்வளவு அழகாய் ஏற்றாள்
என்னைப்பார்த்து சிறிதாய்
ஓர் புன்னகை அதை அப்படியே
நிழற்படமாக்கினேன்
அவள் வடித்த கண்ணீருக்கும்
நான் வடித்த கண்ணீருக்கும்
காதல்தான் காரணம்
அவள்காதலுக்காக அவள் பல
தடைகளை தாண்டி நின்றாள்
இன்று இன்புற்று மணந்தாள்
என் காதல் ஏனோ தயங்கி நின்றது
ஆதலால் நான் கலங்கி நின்றேன்
காதல் ஓர் புரியாத புதிர் இங்கே
அன்பு கொள்ளும்
ஆறுதல் கூறும்
அனைத்தும் நீயென
மாயம் பல செய்யும்
இன்பத்தீயூட்டும் இளைப்பாறல் பல தரும்
அனைத்தும் பொதுவென அமைந்தாலும்
திருமணத்தில் கலங்கி நிற்கும்
சிலருக்கு திருமண வழிவகுக்கும்
வாழ்வாகும் வரமாகும்
இன்று நான் கண்ட காதல் ஜோடியைபோல
சிலருக்கு வலியாகும்
வேதனையாகும் என்னைப்போல
காட்சிகள் இரண்டாக
மணமேடை இரண்டாக இருப்பினும்
நான் கண்ட கனவுகளும்
என் ஆசைகளும்
என்முன் பிரதிபளித்ததில்
எந்த பிழைகளும் இல்லை
எல்லாம் காதல் பிழைகளே
எழுத்து சே.இனியன்