மெய்ப்பாடுகளுக்கு உதாரணமாய் சில இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

வீரசோழபுரம் ஆறுவிரல் ஐம்பொறி என்பவரின் அருமையான கட்டுரைகள் மதுரை தமிழ்ச் சங்க வெளியீடான ’செந்தமிழ்’ என்ற திங்களிதழில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் வெளிவருகிறது. அக்கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பது உண்டு. அவரின் ’திருக்குறளில் மெய்ப்பாடுகள்’ என்ற கட்டுரையை நவம்பர் 2013 ’செந்தமிழ்’ திங்கள் இதழில் வாசித்தேன்.

எங்கள் சோழவந்தான் பெரும்புலவர் இலக்கணக் கடல் அரசஞ்சண்முகனாரின் வள்ளுவர் நேரிசை மற்றும் சோமேசர் முதுமொழி வெண்பா, இரங்கேச வெண்பாவில் சில வெண்பாக்களையும் வாசித்திருக்கிறேன். அதற்கேற்ப,

நகையே அழுகை, இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பா லெட்டே மெய்ப்பா டென்க.

என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கேற்ப மேற்கூறிய மெய்ப்பாடுகளுக்கு உதாரணமாய் சில நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் இயற்றியிருக்கிறேன்.

நகை, அழுகை, பெருமை, வெகுளி பொருள்பட அமைந்த
நான்கு இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

கையூட்டு வாங்கியே பொய்ப்பொருள் பெற்றாலோ
ஐயமில்லை தப்பிக்க சட்டத்தின் – கையில்
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇ பொய்த்து நகை.1 * குறள் 182 புறங்கூறாமை

கற்றவரே யானாலும் மற்றவரே யானாலும்
பெற்றோரைப் பேணவில்லை என்றாலே – அற்றேதான்
அல்லற்பட்(டு) ஆற்றா(து) அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 2 * குறள் 555 கொடுங்கோன்மை

தேர்தலில் வென்றே அமைச்சராக ஆனாலும்
ஆர்ப்பாட்ட மின்றியே ஆள்வது – நேர்மை;
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். 3 * குறள் 979 பெருமை

பிறன்நன்றே வாழப் பொறுக்காது மன்றில்
திறனின்றி துன்புற்று வாழ்தல் – அறமோ?
அழுக்கா(று) அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற(து) அறம். 4 * குறள் 35 அறன் வலியுறுத்தல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-21, 2:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே