மெய்ப்பாடுகளுக்கு உதாரணமாய் பல விகற்ப இன்னிசை வெண்பாக்கள் நான்கு

வீரசோழபுரம் ஆறுவிரல் ஐம்பொறி என்பவரின் அருமையான கட்டுரைகள் மதுரை தமிழ்ச் சங்க வெளியீடான ’செந்தமிழ்’ என்ற திங்களிதழில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் வெளிவருகிறது. அக்கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பது உண்டு. அவரின் ’திருக்குறளில் மெய்ப்பாடுகள்’ என்ற கட்டுரையை நவம்பர் 2013 ’செந்தமிழ்’ திங்கள் இதழில் வாசித்தேன்.

எங்கள் சோழவந்தான் பெரும்புலவர் இலக்கணக் கடல் அரசஞ்சண்முகனாரின் வள்ளுவர் நேரிசை மற்றும் சோமேசர் முதுமொழி வெண்பா, இரங்கேச வெண்பாவில் சில வெண்பாக்களையும் வாசித்திருக்கிறேன். அதற்கேற்ப,

நகையே அழுகை, இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பா லெட்டே மெய்ப்பா டென்க.

என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கேற்ப மேற்கூறிய மெய்ப்பாடுகளுக்கு உதாரணமாய் சில நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் இயற்றியிருக்கிறேன்.

இளிவரல், மருட்கை, அச்சம், உவகை பொருள்பட அமைந்த
நான்கு பல விகற்ப இன்னிசை வெண்பாக்கள்

குடிப்பழக்கம் தந்திடுமே புத்திதடு மாற்றம்
குலப்பெருமை தான்கெடுக்கு(ம்) ஆதலால் நீஅறிவாய்
இன்மை ஒருவர்க்(கு) இளிவன்று, சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். 1 * குறள் 988 சான்றாண்மை

பிறன்மனை வேண்டி நயந்துசெல் பேதைமை
தாய்தார வேற்றுமை யைஅறியான் போல்வனேதான்
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று. 2 * குறள் 1020 நாணுடைமை

பணம்பதவி ஆட்பலம் பெற்றாலும் ஆகா
குணம்மாறி அச்சமின்றி மாற்றா(ன்)இல் செல்லல்
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். 3 * குறள் 146 பிறனில் விழையாமை

சூதில் பெறும்பொருள் இன்பம் நனிநட்பை
வாதித்து மூட்டும் பகைமை யதனால்
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 4 * குறள் 531 பொச்சாவாமை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-21, 2:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே