நாணலாய் வாழ்வாய்

நாணலாய் வாழ்வாய்
=======================
வருமானம் குறைந்துன்னை வாட்டிடும் நேரம்
வரலாறு காணாத வாழ்வியல் நட்டம்
உருவாகும் முகம்கொடுத்து உன்னையு ணர்வாய்
உபயோக மில்லாத ஒவ்வொரு திட்டம்
கருவாகக் காரணமாய் கண்ணெதிர் நின்றோர்
கலைந்தோடும் முகிலாகக் கண்டிடும் போதே
பெரும்பாலும் நட்பென்றப் பேரினைக் கொண்டப்
பிழையான வர்களைநீ பெற்றதைக் காண்பாய்
**
மதியாளை முகில்வந்து மூடிடும் வேளை
மண்மீது இருள்சூழும் மாபெரும் லீலை
விதியாகி விளையாடும் வேதனை போலே
வெந்நீரைச் சிந்திவிட வேநமைத் தாக்கும்
புதிரான நிலையொன்று பூமனந் தன்னைப்
புயலாகிச் சாய்த்துவிடும் போதினில் நீயும்
நதியோரம் அலைமோதும் நாணலின் வாழ்வாய்
நாள்தோறும் வாழ்ந்துவிட நட்டமு மில்லை
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Dec-21, 2:00 am)
பார்வை : 110

மேலே