உற்ற பிறப்பைச் சிறப்பாக்கிப் பேரின்ப வாழ்வடையின் மேன்மை உனக்கு - சிறப்பு, தருமதீபிகை 939
நேரிசை வெண்பா
உற்ற பிறப்பை உயர்ந்த சிறப்பாக்கி
மற்றோர் பிறப்பை மருவாமல் - எற்றும்
அழியாத பேரின்ப அவ்வாழ் வடையின்
ஒழியாத மேன்மை உனக்கு. 939
- சிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உரிமையாய் அடைந்த பிறப்பை உயர்ந்த சிறப்பாக்கி வேறு ஒரு பிறவியை அடையாதபடி பேரின்ப வாழ்வைப் பெறுக என்றும், அவ்வாறு பெறின் எவ்வழியும் திவ்விய மேன்மையாகும் என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.
பிறந்த பயனைப் பெறுபவன் சிறந்த பரமன் ஆகிறான். உற்ற என்றது வினைவயத்தால் விளைந்து வந்துள்ள விளைவினை உணர்ந்து கொள்ள வந்தது. அரிய நல்வினையால் அடைந்த பிறவியைக் கொண்டு பெரிய பயனை அடைவதே பெருஞ் சிறப்பாம். உரிய கருவியால் பெறவுரியதை உரிமையோடு பெறவில்லையானால் உற்ற அது பழுதாய் ஒழிந்து போகிறது. உலகக் கடலைக் கடத்தற்கு மரக்கலம் போல் பிறவிக் கடலைக் கடந்து போதற்கு மனித தேகம் இனிதாய் மருவியுள்ளது. எய்த அரிய தேகம் எய்தியது உயிர் துயர் நீங்கி உயர்வாய் உய்தி பெறவேயாம்.
மனிதன் அறிவுடையவனாதலால் யாக்கையின் நிலையை உணர்ந்து அதன் பயனை அடைய நேர்கின்றான். மனைவி மக்களோடு மருவி எவ்வளவு சுக போகமாய் வாழ்ந்து வந்தாலும் முடிவில் இறந்து போவதையே எவனும் எதிர்ந்து காண்கின்றான். அந்தச் சாவு நேருமுன் தன் ஆவிக்கு இனிய உறுதிநலனை அடைந்திருப்பின் அவனுடைய பிறப்பு சிறப்புடையதாகின்றது. சீவன் நலமுறச் செய்து வருபவன் தேவன் ஆகின்றான்.
இல்லாளோடு கூடி இளமையில் இனிது வாழும் பொழுதே முதுமைக்கு உரிய நல்ல அறங்களை நாளும் செய்து கொள்ள வேண்டும் என்பது வாழ்க்கையின் குறிக்கோளாய் வகுக்கப்பட்டுள்ளது. நெறிமுறையோடு அவ்வாறு தோய்ந்து வருவது புகழும் புண்ணியமும் பொருந்தி வந்து அது சிறந்த வாழ்வாய்ச் செழித்து விளங்குகின்றது. வாழ்வுக்குச் சிறப்பு சீவன் தாழ்வாய் விழாமல் தகவாய் உயர்வதேயாகும்.
காம போகங்களை நுகர்ந்து நேம நியமங்களோடு சேமமாய் ஒழுகி வரினும் முதுமை நேர்ந்ததும் துறவு நீர்மை தோய்ந்து அரிய தவம் வாய்ந்து வீடு பேற்றைக் கருதி விரதம் பூண்டு வாழ்வது மேலோர் இயல்பாய் மேவி நிற்கின்றது.
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம், கற்பு 51)
மனைவாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து வந்த மனிதன் முதுமையில் வாழவேண்டிய நிலைமையை இலக்கணம் இவ்வாறு விளக்கியிருக்கிறது. இயல் விதி மனித மரபின் முறையினை உயர்வாய் ஒழுங்கு செய்துள்ளது. வீடு பேற்றினை இங்கே சிறந்தது என்றது. சிற்றின்பங்கள் எல்லாவற்றினும் பேரின்பம் உயர்ந்ததாதலால் சிறந்தது என வரைந்து கூறினார். இந்த அரிய சிறப்பை அடைந்த அளவு உரிய பிறப்பு உயர்ந்து ஒளிமிகப் பெறுகின்றது. இக லோக வாழ்வில் முடிவான பயனை அடைவது பரலோக வாழ்வுக்கு வரமான உரமாய் வழி செய்தபடியாம்.
பிறவிகளுள் மனித உருவில் மருவி வருவது மிகவும் அரிது. கூரிய சீரிய அறிவு நலம் அமைந்தது; கண்டதைக் கொண்டு காணாததைக் கருதிக் காண்பது; அண்ட கோடிகளையும் சீவ கோடிகளையும் ஆராய்ந்து அறிய வல்லது; உலகம், உயிர், பரம் என்னும் மூன்று தத்துவங்களையும் உய்த்துணர்ந்து முடிவு காண வுரியது; இத்தகைய வித்தக விவேகம் தோய்ந்து எத்தகைய நிலைகளையும் எதிரறிந்து உய்தி பெற உரியதாதலால் மானுடப் பிறவி பெறுதற்கரியது எனப் பேர் பெற்று நின்றது.
இந்த அருமையை உணர்ந்தவர் இதனால் பெறவுரிய பயனை விரைந்து பெறுகின்றார். நிலைமையை உணராமல் பொழுதைப் பழுதாய்க் கழிக்கும் இழுதைகளுக்கு இரங்கிப் பிறப்பின் பெருமையை உணர்த்துகின்றார். பரிவு தோய்ந்த அறிவு மொழிகள் அரிய இன்ப ஒளிகளாய் எவ்வழியும் திவ்விய நிலையில் தேசு வீசி யாவருக்கும் இனிய போதனைகளை அருளி வருகின்றன.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
தென்பர வையினுள் கழிவட பரவை
..சேர்நுகத் துளையினில் செலல்போல்
ஒன்பதிற் றொன்ப தோடுமூ விலக்கம்
..உளவியோ னியும்பிழைத் தேறிப்
பின்பிறப் பிதுபெற்(று) அதனினும் பாதி
..பிறப்புறா நாளதாக் குநரின்
இன்பமீ தெனமிக்(கு) உறங்கலர் பிறவிக்(கு)
..அறவெரீஇ உளந்துளங் கிடுவோர். 86
- வைராக்கிய தீபம்
தென் கடலில் வீழ்ந்து கிடந்த ஒரு சிறு கழி வடகடலில் அலைந்து கிடந்த ஒரு நுகத்துளையுள் வந்து புகுந்ததுபோல் எண்பத்து நான்கு நூறாயிர பேதமாயுள்ள பிறப்புகளில் தப்பிப் பிழைத்து அரிதான இந்த மானிடப் பிறவியை அடைந்திருக்கிறோம்; இதிலிருந்து விரைந்து உய்ய வேண்டும் என்ற கவலையினால் கண்ணுறங்காமல் கதிநலம் கருதி மதிநலமுடைய தவசிகள் மறுகியுள்ளனர் என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது.
பிறவியில் யாண்டும் துயரங்களே நீண்டு வருதலால் பிறவாத பேரின்ப நிலையை அடைவதே பிறவிப் பெரும் பயனாய் வந்தது. பாசமயல் ஒழியின் ஈசன் ஒளி எதிரே தெளிவாம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
பிறப்பிறப்பாம் பூட்டைதனைப் பிணித்துழற்றும் வாதனையாம்
பெரிய பாசம்
அறப்பெரிய முயற்சியிநால் அறுத்திடுவாய் பரமமாம்
அறிவின் முன்னே
புறப்படும்பொய் யாம்உள்ளம் புவனவிகற் பங்களெனும்
பொய்யைக் காட்டும்
சிறப்புளவிண் இலதாயும் இலதான நீலநிறம்
செறிவ தேபோல். 1
சோகமுறு சங்கற்ப நாசத்தால் மனம்மாளின்
தொன்று தொட்ட
மோகமெனும் மூடுபனி விட்டகலும் சரற்காலம்
முதிர வந்தால்
மாகம்விளங் குவதென்ன நல்லறிவு மாத்திரமாய்
மாயா தாகி
ஏகமாய் வடிவின்றிப் பிறப்பிறப்பு இலாப்பிரமம்
இலங்கும் நொய்தாய். 2 ஞான வாசிட்டம்
ஒழியாத பிறப்பு ஒருங்கே நீங்கி அழியாத பேரின்ப வீட்டை அடையும் வழியை இவை விழிதெரிய விளக்கியுள்ளன. வீணான எண்ணங்களில் மனதை விரியாமல் அடக்கி மெய்யான பரம்பொருளில் செலுத்திவரின் வெய்ய பிறவி விலகிவிடும். பிறவாத ஒருவனைக் கருதி யுருகிப் பிறவியை அறவே நீக்கிக் கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.