தூக்கம் சரியின்மை சரியான துக்கம்
நாம் எப்படி காலையில் எழுகிறோம் என்பதை பொறுத்தே அந்த நாளின் தன்மை அமைகிறது. காலை நேரம் , குறிப்பாக விடியற்காலை நேரம், பொதுவாகவே நல்ல நிறைந்த நேரம், அமைதியான நேரம், தியானம் செய்வதற்கு ஏதுவான நேரம். ஆனால் காலையின் இந்த அற்புதமான உணர்வுகளை ஒருவர் உற்சாகத்துடன் பெற்றிட மிகவும் இன்றியமையாதது இரவில் கொள்ளும் உறக்கம். நல்ல தூக்கம் இருந்துவிட்டால் ஒருவர் உள்ளத்தில் கண்விழிக்கும்போதே உற்சாகமும் சக்தியும் பொங்கும். இதை நாம் பலரும் அனுபவத்தில் உணர்ந்துவருவதே. ஒரு வேளை இரவு தூக்கம் சரியாக அமையவில்லையேல் நாம் கண்விழிக்கையில் உற்சாகத்திற்கு பதில் சோர்வும் எரிச்சலும் தான் உண்டாகும். இதையும் நாம் வாழ்க்கையில் பல நாட்கள் கண்டு வருவது தான். இரவு தூக்கம் நன்றாக அமைந்துவிட்டது என்றால் அதற்கு காரணம் சொல்ல தேவையில்லை. தூக்கம் சரியாக இல்லை என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். மதியம் தூங்குவது, கவலைகளுடன் படுக்கச்செல்வது, மிகவும் அதிகமாக சிந்தனை செய்வது, மனதில் ஏதேனும் பயம் அல்லது குற்ற உணர்வு, உடல் பிணிகள் (அஜீரண கோளாறுகள்) இப்படி ஏதாவது ஒன்று. இவைகளை தாண்டி, காரணமே இல்லாமல் கூட தூக்கம் கெடலாம். உதாரணமாக, நடு இரவில் சிறுநீர் கழிக்க சென்று வந்து மீண்டும் படுத்தால் உடனேயே தூக்கம் வந்துவிட்டால் நல்லது. ஆனால் சிலருக்கு உடனடியாக தூக்கம் மீண்டும் வருவதில்லை. மீண்டும் தூக்கம் வர ஒருமணியிலிருந்து மூன்று மணி நேரங்கள் கூட பிடிக்கலாம். சிலவேளை காலை வரை கூட தூக்கம் வராது. இரவில் ஒரு மணிக்கு பிறகு தூக்கம் கேட்டு விடி காலை நான்கு ஐந்து மணி வரை தூக்கம் வராமல் ஒருவர் தவிக்கும் தவிப்பு, அதை அனுபவிப்பருக்கு மட்டுமே தெரியும்.இதன் விளைவால் ஒருவர் நினைத்த நேரத்தில் எழ முடியாது. காலை ஆறு மணிக்கு எழ நினைப்பவர் எட்டு மணிக்கு விழிப்பார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இடையில் தூக்கம் தடை பட்டவருக்கு மீண்டும் தூக்கம் வந்தாலும் அது கனவுகள் நிறைத்த தூக்கமாக அமையலாம். அதிகமான கனவு, மனதுக்கு பிடிக்காத கனவு, பயங்கர கனவு இவை எல்லாம் காலை எழுகையில் நல்லதொரு உணர்வை கொடுக்காது.
நான் கவனித்த வரையில், பொதுவாக நல்ல தூக்கம் அமைவது ஒருவரின் அதிர்ஷ்டத்தை பொறுத்ததே. நன்கு தூங்குபவர்களை கவனித்தால் அநேகம் பேர்கள் அதிகமாக கவலை கொள்ளாத மனிதராக இருப்பார்கள். எது நடப்பினும் அந்நேரத்தோடு அதை மறந்துவிட்டு, நிகழ்காலத்தில் வாழ்வார்கள். நடந்த விஷயங்களை மாடு போல அசைபோட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு பொதுவாக நிம்மதியான அல்லது நேரத்தில் தூக்கம் அமைவதில்லை. ஒருவர் நல்லவராக இருப்பின் நன்றாக தூங்குவார் அல்லது நல்லவராக இல்லை என்றால் நன்கு தூங்கமாட்டார் என்பதெல்லாம் சுத்த பொய். கொடிய பாவங்கள் செய்பவர்கள் நன்கு குறட்டை விட்டு 7 -8 மணி நேரங்கள் தூங்குகிறார்கள், மனிதநேயமும் கருணையும் பிறரை புண்படுத்தாத உள்ளம் படைத்த பல பேர் சரியான உறக்கமின்று தவிக்கிறார்கள். தூக்கத்திற்கும் கடவுளுக்கும் கூட சம்பந்தம் எதுவும் இல்லை என்பது என் சொந்த கருத்து.கடவுள் பேரை சொல்வதால் தூக்கம் நிச்சயம் வரும் என்பதை என்னால் ஏற்க முடியாது. ஏனெனில் கடவுளை பற்றி சிறிதும் நினைக்காதவர்கள் எவ்வளவு பேர் நன்றாக உறங்குகின்றனர்.
ஒருவர் முடிந்தவரை தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணத்திற்கு, நேரத்துடன் இரவில் உணவு எடுப்பது, தூங்குவதற்கு முன் தொலைகாட்சிகளை மற்றும் செல் போனை பார்க்காமல் இருப்பது, நல்ல சிந்தனையுடன் இருப்பது , சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடை பழகுவது, இவை எல்லாம் சில யோசனைகள். இவை ஒருவருக்கு பலன் அளிக்குமானால் அவர் அதிர்ஷ்டக்காரர். இவை எதையும் செய்யாமலே சாப்பிட்டு படுத்து தூங்குபவர்கள் பல மடங்கு அதிருஷ்டக்காரர்கள். இவ்வளவு செய்தும் தூக்கம் கெட்டால் அந்த மனிதரின் நேரம் சரியில்லை. அவ்வளவே.
ஒருவருக்கு நல்ல இரவு தூக்கம் கிடைத்தால் பாக்கியம்
அவர் இரவு காவலாளி கடமை பார்த்தாலோ லேக்கியம்
ஆனந்த ராம்