27 ஆன்மீக வழியி அமைதி

அத்தியாயம் – 27
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

சுதர்மம் என்றால் நமது கடமைகள் எதுவோ அந்தக் கடமைகளை மட்டும் செய்வது ஆகும். சுதர்மம் பற்றி நம் கடமைகளை செய்யும்போது நாளடைவில் நம் அனுபவங்களின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். நம்முடைய கடமையை மட்டும் நன்கு புரிந்து அதன்படி செயல்புரிய வேண்டும். அதாவது நாம் உலகில் காணும் தேவையற்ற விசயங்களில் இருந்து மனதை விலகியிருத்தல் வேண்டும். நமது வாழ்வில் நல்லவைகளை நேர்மறை எண்ணங்களை மனதில் எண்ணி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதேபோல் வாழ்வில் நல்லவைகளை படித்தும் கேட்டும் மகிழவேண்டும். நன்மை தரும் உயர்ந்த கருத்துக்களை, நாம் தவறாமல் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும்....

இவற்றையெல்லாம் நாம் கடைபிடிப்பதற்கு மனதில் வைராக்கியம் வேண்டும். வைராக்கியம் இருந்தால்தான் ஆன்மீக வழியில் முன்னேற்றம் காணலாம். ‘மனம் போன போக்கில் போக வேண்டாம்’ என்ற கருத்தை மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அதனால் மனிதன் சிந்தித்து சுயகட்டுப்பாட்டுகளுடன் உலகில் செயல்படுவதற்கு முடியும். அவ்வாறு மனிதன் செயல்படும்போது அவன் விரும்பும் தேடும் மனஅமைதி, அவனையும் அறியாமல் அவனிடம் வந்து சேர்ந்து விடும்.

மனித மனம் அடிக்கடி எதையாவது நினைத்துக்கொண்டு சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும். அவ்வாறு மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கும்போது மனிதனுக்கு மன அமைதி என்பது கிடைப்பது அரிது. பொதுவாக மனிதர்களுடைய மனம் இருவகையில் சஞ்சலப்படலாம். ஒன்று நமது மனம் வெளியிலிருந்து வரும் விசயங்களின் மூலம் சஞ்சலம் அடைகிறது. மற்றொன்று ஏற்கனவே நம் மனதில் பதிந்து வைத்துள்ள வேண்டாத விசயங்கள் செயல்களினால் மனம் சஞ்சலம் அடைகிறது. எனவே மனதிலிருந்து வேண்டாத விசயங்கள் செயல்பாடுகளை அறிந்து அவைகளை மனதிலிருந்து முற்றிலும் அகற்ற வேண்டும். அவ்வாறு வேண்டாத விசயங்களை நீக்காமல் மனதில் மனச்சுமைகளை வைத்துக்கொண்டே இருந்தால் அவனையும் அறியாமல் மனம் துன்பங்களில் மூழ்கி அமைதியை இழந்து விடும்.

மேலும் மனிதன் தனது எதிர்கால வாழ்வை நினைத்து பயந்துகொண்டு மனம் துக்கத்தில் ஆழ்ந்து சஞ்சலப்படலாம். மனிதன் இந்திரியங்கள் வழியாகக் காணும் காட்சிகள் கேட்கும் கருத்துக்கள் மூலம் அவன் மனம் சஞ்சலபடலாம். அவ்வாறு நமது மனதை சஞ்சலப்படுத்தாமல் அமைதியாக இருப்பதற்கு ஆன்மீக வழியில் சென்று தீர்வு காணலாம். மனிதன் கண் காது நாக்கு, நாசி, மெய் போன்ற ஐம்புலன்களையும் உலக விசயங்களில் மிகவும் கவனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று ஆன்மீகம் வலியுறுத்தி கூறுகிறது. இதனை திருவள்ளுவர்

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க,
நெறிநின்றார் நீடு வாழ்வார்”

என்ற குறள் மூலம் புலனடக்கத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுகிறார். இதனை வலியுறுத்தி புலனடக்கம் மன அடக்கம், இந்திரிய ஒழுக்கம் பற்றி வேதங்கள் சாஸ்திரங்கள் இதிகாசங்களும் கூறுகிறது.

விலகியிருத்தல் என்றால் உலகில் உள்ள தேவையற்ற விசயங்களில் இருந்து மனம் விலகி இருத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது நமது மனதிற்கு எதெல்லாம் துன்பம் சஞ்சலம் தரக்கூடியதாக இருக்குமோ அதனை அறிவுபூர்வமாக சிந்தித்து அனுபவபூர்மாக உணர்ந்து அதிலிருந்து மனம் விலகி இருக்க வேண்டும். ஆன்மீக வழியில் சென்று நாம் என்னென்ன சாதனைகளை செய்து புலனடக்கம், மனக்கட்டுப்பாடு போன்றவைகளை செய்து கொண்டிருந்தமோ, அத்தகைய சாதனைகளை விட்டுவிடாமல் தொடர்ந்து தவறாமல் கடைப்பிடித்து வரவேண்டும். அதாவது நமது இந்திரியங்களையும் மனதையும் கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்து கொண்டிருந்தமோ அதனை நாம் தொடர்ந்து தவறாமல் கடைபிடித்து வர வேண்டும்.

எடுத்தக்காட்டாக ஒரு மூன்று வயது குழந்தை தாய் ஊட்டும் உணவு உண்ணாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தக் குழந்தையின் தாய் அக்குழந்தைக்கு உணவு கொடுக்க வேண்டுமென்றால் ஓடிய குழந்தையை முதலில் வெளியே சென்று பிடித்து வரவேண்டும். அதன்பின் மீண்டும் அக்குழந்தை தன்னை விட்டு ஓடிவிடாமல் அதன் கையை இறுகிப்பிடித்து தாய் தன்னோட மடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த தாய் குழந்தைக்கு உணவை ஊட்டுவதற்கு முடியும்.

அதேபோல் நமது மனம், இந்திரியங்கள் மூலம் வெளியே பல வழிகளில் நம்மை இழுத்துச் சென்று கொண்டேயிருக்கும். அவ்வாறு இழுத்துச் செல்லும் மனதை, ஆன்மீகச் சாதனைகள் மூலம் மனதை நம் வசம் கொண்டு வருவதற்கு பொறுமையுடன் அப்போது முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஆன்மீக வழியில் இந்திரியக் கட்டுப்பாட்டுக்காக எத்தகைய சாதனைகளை எல்லாம் நாம் மேற்கொண்டமோ, அத்தகைய சாதனைகளைத் தவறாமல் தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும். நமது இந்திரியங்கள் வழியாக வெளியே சென்ற நமது மனதை நம் வசம் கொண்டு வந்தால் மட்டும் போதுமானதாக இருக்காது.

தாய் ஊட்டும் உணவை உண்ணாமல் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தையை மீண்டும் ஓடி விடாமல் தாய் இறுகிப் பிடித்துக்கொண்டு இருப்பதுபோல், நமது மனதை நாமும் நம் வசம் வரப்பெற்ற மனதையும் இந்திரியங்கள் வழியாக மீண்டும் வெளியேறி விடாமல், அதாவது மனம் தவறான வழியில் சென்று விடாமல் கவனமாக பிடித்து வைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு ஆன்மீக வழியில் சென்று வைராக்கியத்துடன் நாம் வசப்படுத்திய நமது மனதை நம்மை விட்டு தவறான வழியில் சென்று விடாமல் இறுகப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். நம் இந்திரியங்கள் வழியாக மனம் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தால் துன்பங்கள் துயரங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் நமது மன அமைதியும் இழக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அவற்றை நாம் தவிர்ப்பதற்கு ஆன்மீக வழியில் சென்று நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக நண்பகல் வெயிலின்போது சூட்டினைத் தாங்கிக்கொண்டு தார்ச்சாலையில் நாம் ஓடுவது சுலபம். ஆனால் அந்த உச்சிவெயில் சூட்டினைத் தாங்கிக்கொண்டு ஓடாமல் ஒரே இடத்தில் நாம் நிற்பதுதான் மிகவும் சிரமம். உச்சிவெயில் சூட்டினை தாங்கிக்கொண்டு தார்ச்சாலையில் நிற்க முடியாது ஆனால் அந்த இடத்தில் நிற்காமல் நிழல் இருக்கும் இடத்திற்கு ஓடி விடலாம். அதேபோல் தேவையற்ற விசயங்களில் நம் மனதை நிலை நிறுத்தாமல் துன்பப்படாமல் அதிலிருந்து தப்பித்து ஓடிவிட வேண்டும். அதாவது உலகில் காணப்படும் தேவையற்ற விசயங்களில் மனம் சென்று விடாமல் நாம் கவனமுடன் இருந்து கொள்ளலாம். ஆனால் பல சமயங்களில் நமது மனதை அவ்வாறு வெளியே சென்று விடாமல் இருப்பதற்கு மனதை எளிதில் கட்டுப்படுத்துவதற்கு முடிவதில்லை.

நாம் கண்கள் என்ற இந்திரியத்திடம் உலகில் காணும் நம் மனதை பாதிக்கக்கூடியவைகள் எதையும் பார்ப்பதில்லை. காதுகள் என்ற இந்திரியத்திடம் மனதை பாதிக்கக்கூடியவைகள் எதையும் கேட்பதில்லை. நாசி என்ற இந்திரியத்திடம் மனதை பாதிக்கக்கூடியவைகள் எதையும் நுகர்ந்து பார்ப்பதில்லை. வாய் என்ற இந்திரியத்திடம் மனதை பாதிக்கக் கூடியவைகள் எதையும் பேசுவதில்லை என்று மனிதன் சுய கட்டுப்பாடுகளுடன் மன உறுதியுடன் இருக்க வேண்டும். அவ்வாறு மன உறுதியுடன் இருப்பதற்கு ஆன்மீக வழியில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சிலர் ஆன்மீக வழியில் சென்று இந்திரியங்கள் வழியாக மனம் செல்வதற்கு விடாமல் தங்கள் மனதை ஓரளவுக்கு கட்டுப்படுத்தவும் செய்வார்கள். மேலும் அவர்கள் மனக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் செய்வார்கள். ஆனால் அவர்கள் அவற்றை அவ்வாறு தொடர்ந்து மன வைராக்கியத்துடன் கடைபிடிப்பதில்லை. இதற்கு முக்கிய காரணங்கள் நம்மிடம் வைராக்கியம், பொறுமை, மனஉறுதி சகிப்புத்தன்மை போன்றவைகள் இல்லாமைதான். அதனால் நாம் ஆன்மீகத்தில், நமது வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியாமல் மன அமைதியின்றி மிகவும் துன்பப்படுகிறோம்.

பொதுவாக மனதை எந்தெந்த பொருள்கள், செயல்கள் மூலம் நமது மனதுக்கு ஒருவிதமான மயக்கம், துன்பங்கள், தீமைகள், கோபம் போன்றவைகள் வருமோ அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். அவ்வாறு விலகுவதற்கு ஆன்மீக வழியில் சிந்தித்து செயல்புரிய வேண்டும். அதாவது நமது மனதையும் இந்திரியங்களையும் கட்டுப்படுத்தி தீமை தரக்கூடிய எண்ணங்கள் செயல்கள் போன்றவை நம் மனதில் புகுந்து விடாமல் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது மனதையும் இந்திரியங்களையும் தீயவற்றிலிருந்து தீயசெயல்களிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மனிதன் இந்திரியங்களை அதன் போக்கில் போகவிடாமல் மனதை கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். இதற்கு ஆன்மிகம் பல வழிமுறைகளைக் காட்டி பெரிதும் துணை புரிகிறது.

இதற்கு ஒரு சிறந்த உபாயம் சந்நியாசம் கொள்ளுதல் வேண்டும். சந்நியாசம் என்று நினைத்தவுடன் நமக்கு ஒருவிதமான பயம் அச்சம்கூட தோன்றலாம். சந்நியாசம் கொண்டால்தான் மோட்சம் நல்ல பண்புகள் நமக்கு கிடைக்குமா? இல்லறத்தில் இருந்துகொண்டு மோட்சத்தை ஆன்மீகப் பண்புகளுடன் வாழமுடியாதா ? என்ற ஒரு சந்தேகம் கவலை நமது மனதில் எழுகிறது. இந்த இடத்தில் சந்நியாசம் என்றால் நமது முக்கியப்பொறுப்புகளை விடுதல் அல்லது பொறுப்புகளில் இருந்து விலகியிருத்தல் வேண்டும் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருந்துகொண்டே இல்லறஞானி போல் வாழ வேண்டும்.

அதாவது நம்முடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்து விட வேண்டும். அவை அலுவலகப் பொறுப்புகளாகவோ அல்லது குடும்ப பொறுப்புகளாகவோகூட இருக்கலாம். பொறுப்பு என்றால் அதாவது நம் வீட்டுப் பீரோவின் சாவியை நம்மிடம் இருந்து நமது வீட்டில் இருக்கும் நம்பிக்கையானவரிடம் கொடுப்பதுபோன்று ஆகும். நமது பொறுப்புகளை நம்பிக்கையானவரிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு முழுச்சுதந்திரத்தையும் அப்போது கொடுத்து விடவேண்டும். சிலபேர் நம்பிக்கையுடன் பொறுப்புகளை ஒருவரிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். ஆனால் ஒப்படைத்ததற்கு பிறகு, நாம் நினைத்தபடி கூறியபடிதான் செயல்புரிய வேண்டும் என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டவரிடம் நாம் கட்டளையிடாமல் இருக்க வேண்டும்.

அதாவது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர் சுதந்திரமாக செயல்படுவதற்கு முழுச்சுதந்திரத்தினைக் கொடுத்து விடவேண்டும். நாம் பொறுப்பில்லாமல் இருப்பது என்பது உலக நடைமுறையில் வேறு அர்த்தம் ஆகும். அதாவது வீட்டைக் கவனிக்காமல் தன்னிச்சையாக சுற்றுவது, பொறுப்புகளை தட்டிக் கழிப்பது என்று உலகவழக்கில் கூறுவதாகும். இந்த இடத்தில் அதாவது ஆன்மீக வழியில் அப்படி அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தேவையில்லாத பொறுப்பான பதவியில் இல்லாமல் இருத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நாம் தேடும் விரும்பும் மன அமைதி நமக்குக் கிடைக்கும்

சிலர் தங்களிடமிருந்த பொறுப்புகளை நம்பிக்கையானவரிடம் ஒப்படைத்து விட்டு, நமக்கு பாரம் குறைந்து விட்டது என்று நிம்மதியாக இருப்பதில்லை. நாம் பொறுப்பை ஒப்படைத்தவரிடம் அதாவது பொறுப்பை ஏற்றுக்கொண்டவரிடம் அவர் அறியாமல் அவரை கண்காணித்து வருகிறோம். அவர்கள் ‘என்ன செய்கிறார்கள்’ என்பதை அவர்களுக்குத் தெரியாமலே ‘அவர்கள் உண்மையாக பொறுப்பாக நம்மைப்போல் கவனித்துக் கொள்கிறார்களா?’. என்று கவனித்துக்கொண்டு வருகிறோம். அவ்வாறு அவர்கள் நாம் நினைத்தபடி கவனிக்கவில்லையென்றால் அவர்கள் சுதந்திரத்தில் நாம் நம்மையறியாமல் தலையிட்டு, சில நேரங்களில் அவர்கள் மீது கோபப்பட்டு கட்டளையிடுவது போன்ற செயல்களில் நம்மையும் அறியாமல் ஈடுபடுகிறோம். அதனால் நமது மன நிம்மதியை வீணாக இழக்கிறோம்.

ஒருவர் பொறுப்புகளை ஒப்படைத்தபின் பொறுப்பை ஏற்றுக்கொண்டவரை அவர் கண்காணிப்பதால் யாருக்கு என்ன பயன் ஏற்படப்போகிறது? அதனால் அவருக்கு மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போன்ற துன்பங்கள்தான் ஏற்படும். ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பின்பு நமக்கு விடுதலை கிடைத்ததுபோல் உணர்ந்து நாம் முற்றிலும் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். அவ்வாறு விலகி இருந்தால்தான் ஆன்மீக வழியில் நாம் விரும்பிய தேடிய மன அமைதி என்பது கிடைக்கும். அவ்வாறு விலகிவிடாமல் இருந்தால் நமக்கு மன அழுத்தம், துன்பங்கள், துயரங்கள் ஆன்மீக வழியில் செல்வதற்குத் தடைகள் போன்றவைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். அதனால் நமது உடலும் உள்ளமும் அமைதியின்றி தவிக்க நேரிடும். நாம் தேவையில்லாத பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும்போது நம்மையும் அறியாமல் நாம் தேடும் விரும்பும் மனம் அமைதி கிடைக்கிறது.

இப்படி தேவையில்லாத பொறுப்புகளிலிருந்து விலகி இருப்பதால் என்ன பலன் என்றால் நமக்கு போதியளவு சுதந்திரமாக செயல்புரிவதற்கு காலமும் நேரமும் கிடைக்கிறது. அதாவது தியானம், ஜபம், பஜனை பாராயணம் செய்வதற்கு, சத்சங்கம் போன்றவற்றில் கலந்து ஆன்மீக அன்பர்களைச் சந்திப்பதற்கு போதியளவு நேரம் காலம் கிடைக்கிறது. அதனால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்து அதன் மூலம் நாம் தேடும் விரும்பும் மனஅமைதி போன்றவற்றை பெறுவதற்கு முடியும். நமக்குத் தேவையற்ற முக்கியப் பொறுப்புகள், பதவிகளை நாம் எடுத்துக்கொண்டால் நமது எண்ணமும் செயலும் அதில்தான் இயல்பாக ஈடுபடும். அதனால் ஆன்மீகத்தில் போதியளவு காலம் நேரம் கிடைப்பதில்லை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம்.

நமது பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுத்து விட்டால் பொறுப்புகள் பற்றி எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் ஆன்மீக வழியில் நமது மனமானது இடர்பாடுகளின்றி செல்வதற்கு முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். பொறுப்பு இல்லாமல் இருப்பது வேறு, பொறுப்புகளில் இருந்து விலகி இருத்தல் என்பது வேறு ஆகும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். நமக்கு கிடைக்கும் முக்கிய பதவிகள் அதன் மூலம் கிடைக்கும் புகழ் போன்றவற்றிலிருந்து விலகி இருத்தல் என்பதாகும். நம்முடைய அவசியமான கடமைகளை மட்டும் செய்தல் வேண்டும். ஆனால் நாம் வாழ்வில் அவ்வாறு இல்லாமல் நமது கடமைகளுக்கு அப்பாற்பட்டுள்ள பொறுப்புகளில் மற்றவர்களின் கடமைகளில் தேவையில்லாமல் உலக விசயங்களில் ஆழ்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு ஈடுபடக்கூடாது என்று ஆன்மிகம் வலியுறுத்துகிறது.

சிலபேர் நம்மிடம் ‘நீங்கள் ஏன் இதிலெல்லாம் தலையிடுகிறீர்கள், இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்‘ என்று அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தபின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் நம்மிடம் கேட்பார்கள். அவ்வாறு அவர்கள் கேட்கும்படியாக இல்லாமல், நாம் பொறுப்புகளிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும். நமது கடமையை மட்டும் செய்ய வேண்டும். மற்றவர்களின் கடமைகளில் அவர்களுடைய விசயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு நாம் செயல்படும்போது மனநிலையில் நமக்கு ஒரு சித்தசுத்தி மனத்தூய்மை மன அமைதி போன்றவற்றை நம்மையும் அறியாமல் கிடைக்கும்.

இதனை நமது அனுபவத்தின் மூலம் நன்கு புரிந்து கொள்ளலாம். நமக்குத் தேவையில்லாத சம்பந்தமேயில்லாத விசயங்களில் தலையிடாமல் இருந்து விலகியிருப்பதற்கு நமது மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலபேர் ஆர்வக்கோளாறுகளினால் மற்றவர்களின் பொறுப்புகளை கடமைகளை வலிய சென்று ஏற்றுக்கொண்டு அல்லது பொறுப்புகளை வலிய தாங்களே எடுத்துக்கொண்டு அவதிப்படுவார்கள். அதனால்தான் நம்முடைய கடமைகள் எதுவோ அதை மட்டும் சிந்தித்து செயல்புரிய வேண்டும் என்று வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள் போன்றவை வலியுறுத்திக் கூறுகிறது. பொதுவாக மற்றவர்களின் கடமைகளில் தலையிடாமல் இருந்தாலே அது ஒரு நல்ல பண்பாகும். இதனை நம் மனதில் நன்கு பதிந்து வைத்துக்கொண்டு செயல்புரிய வேண்டும். இதில் நாம் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

சிலபேர் ஏதாவது ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்ளச் சொன்னால் எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை என்று புலம்புவார்கள். அதற்கு நாம் காலையில் இருந்து இரவு படுக்கப்போகும்வரை நாம் செய்த செயல்களை பட்டியலிட்டுப் பார்த்தால் எவ்வளவு நேரத்தை வீணாக்கி இருக்கிறோம் என்பது தெரிய வரும். எடுத்தக்காட்டாக தண்ணீர் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம் தண்ணீர் இருக்கும்போது, எவ்வளவு தாராளமாக வீணாக தண்ணீரை மகிழ்ச்சியுடன் செலவழிக்கிறோம். தண்ணீர் தட்டுப்பாடு வரும்போதுதான் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தத் தோன்றுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு வரும்போதுதான் கடந்த காலத்தில் தண்ணீரை வீணாக்கி இருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.

நாம் சிந்தித்துப் பார்த்தால் தண்ணீர் இருக்கும்போது எவ்வளவு தண்ணீரை இதுவரையில் வீணாக்கி இருக்கிறோம் என்பது நாம் சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்தும்போதுதான் தெரிய வரும். தண்ணீரை வீணாக்கிய பிறகு வருந்தி என்ன பயன் ஏற்படப்போகிறது. அதேபோல்தான் காலமும் நேரமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காலம் பொன் போன்றது என்று பெருமையாகக் கூறிக் கொண்டால் மட்டும் போதாது, காலத்தின் மதிப்பு எத்தகையது என்பதை நாம் சிந்தித்து காலத்தை வீணாக்காமல் பயனுள்ள வழிகளில் ஆன்மீக வழியில் மன அமைதியை பெறுவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சன்னியாசம் என்றால் பொறுப்புகளில் இருந்து விலகி இருத்தல் என்று அர்த்தம் ஆகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு விலகி இருத்தல் வேண்டும். நமக்கு வாழ்வில் மனஅமைதி அடைவதற்கும் ஆன்மீகவழியில் தியானம், ஜபம், பாராயணம் போன்றவைகளைக் கடைபிடிப்பதற்கு நமக்கு போதிய காலம் தேவைப்படுகிறது. அதனால் நாம் தேவையற்ற பொறுப்புள்ள பதவிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மன அமைதி வேண்டுமென்றால் நம் தேவையற்ற பதவி மற்றும் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதற்கு தயக்கம் கொள்ளக்கூடாது. அவ்வாறு நாம் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்தபின் அதன்பேரில் எந்தவித எண்ணமும் கவலையும் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

அதாவது நாம் ஒப்படைத்த பொறுப்புகளை எப்படி அவன் செய்கிறான் தான் விரும்பியபடி செய்யவில்லை என்றால் அவனுக்கு விளக்கி அதற்கான கட்டளையிடுவது, அவன் அறியாமல் அவன் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டு இருத்தல் போன்ற செயல்பாடுகளை விடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அப்படி விலகி இருந்து உன்னுடைய கடமை எதுவோ அதனை மட்டும் செய்தல் வேண்டும். இதனைத்தான் சந்நியாசம் என்று வேதங்கள் இதிகாசங்கள் கூறுகிறது. காலத்தின் பெருமை அறிந்து ஆன்மீக வழியில் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும்.

சுதர்மத்தை மட்டும் செய்தல், தன்னோட கடமைகளை மட்டும் செய்தல், தேவையற்ற விசயங்களில் ஈடுபடாமல் விலகி இருத்தல் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். நாம் ஆன்மீகச் சாதனைகள் மூலம் இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஓரளவு அமைதிப்படுத்தி விட்டோம் என்று தவறாக தனக்குத்தானே எண்ணிக்கொண்டு, தொடர்ந்து ஆன்மீக சாதனைகள் செய்வதை மட்டும் விட்டுவிடக்கூடாது. மனதில் நல்ல சிந்தனைகள் செயல்பாடுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மன அமைதியை எப்படி தொடர்வது என்று இடைவிடாமல் ஆன்மீக வழியில் சிந்தித்து அதன்படி செயல்புரிவதற்கு மனதை பக்குவபடுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

நம் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி தகுந்த குருவின்மூலம் சாதனைகளை தவறாமல் செய்தால் மட்டும் நாம் தேடும் விரும்பும் மன அமைதியை அடைய முடியும். அவ்வாறு ஐம்புலன்களை கட்டுப்படுத்துவதற்கு புராணங்கள் இதிகாசங்கள் போன்றவை ஆன்மீக வழியில் எளிய வழிமுறைகளை காட்டுகின்றன. ஆன்மீக சாதனைகள் செய்வதில் மனமகிழ்ச்சியோடு முழுமையாக அதில் ஈடுபடுவதற்கு வேண்டும். நமது மனம் அலைபாயாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கு வழிமுறை என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், நாம் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதில் மட்டும் மனம் இருக்க வேண்டும். அதாவது மனதை நிகழ்காலத்தில் கவனம் வைத்துக்கொண்டு இருந்தாலே மனம் வேறு எங்கும் செல்வதில்லை. இதனை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

சிலர் புத்தகம் படித்துக் படித்துக்கொண்டிருக்கும்போது நமது குரங்கு மனம் வேறு எதையாவது நினைத்துக் கொண்டிருக்கும். இதனைத்தான் ஆன்மிகம் நிகழ்காலத்தில் மனம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நமது மனம் நிகழ்காலத்தில் இருக்கும்போது வேறு எதனைப் பற்றியும் நினைப்பதில்லை. புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் கவனம் முழுதும் புத்தகம் படிப்பதில் இருக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது படிப்பதில் மட்டும் கவனம் இல்லாமல் இருந்தால் படிப்பதால் நாம் எவ்விதப்பயனும் பெறமுடியாது. புத்தகத்தினை படிப்பதில் மட்டும் மனம் இருக்க வேண்டும். அவ்வாறு கவனம் இருந்தால்தான் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் நம் மனதில் பதியும். நாம் எந்த ஒரு செயல் செய்தாலும் நமது மனமும் செயலும் இணைந்து செயல்புரிய வேண்டும். அவ்வாறு செயல்புரியும்போது நாம் தேடும் விரும்பும் மன அமைதி கிடைக்கும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (27-Dec-21, 8:56 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 141

மேலே