உண்ணார்கைத் துண்ணாப் பெருமை - இனியவை நாற்பது 11
இன்னிசை வெண்பா
அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத்(து) உண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல். 11
- இனியவை நாற்பது
பொருளுரை:
நாடோடியாக ஊரூராகத் திரிந்து இரந்துண்டு வாழாதிருப்பது மிக இனியது.
நூற்பொருளை நுனித்தறியாது வலிந்தும் நலிந்தும் தம் கருத்திற்கு இயைந்தவாறு தப்பு வழியிற் செல்லாத மதிநுட்பம் இனியது.
பசியால் உயிர் இறக்க நேரிட்டாலும், அன்போடு உபசரியாதார் கையிலிருந்து தரும் உணவை உண்ணாமலிருக்கும் பெருமை போல பெரும் பெருமை உடையது வேறொன்றும் இல்லை.