நேரின்பம் எய்த உடம்பை இடையகற்றும் சாக்காடு வெய்தாவது ஆமோ - இறப்பு, தருமதீபிகை 929
நேரிசை வெண்பா
பேரின்ப மான பெரும்பொருளை விட்டுவந்து
பாரின் புழந்து படுமுயிரை - நேரின்பம்
எய்த உடம்பை இடையகற்றும் சாக்காடு
வெய்தாவ(து) ஆமோ விளம்பு. 929
- இறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அதிசய ஆனந்தமுடைய ஆதிமூலப் பொருளைப் பிரிந்து வந்து அவல நிலைகளில் இழிந்து உயிர்கள் உழலுகின்றன; துயர்களுக்கு இடமாய் நேர்ந்த உடல்களை இடை நீக்கி உய்தி தருகிற சாவு கொடியது ஆகுமா? எவ்வழியும் இனியதே என்கிறார் கவிராஜ பண்டிதர்.
பிறப்பும் இறப்பும் இயற்கை நிகழ்ச்சிகள்; மனித முயற்சிகளைக் கடந்தன; பழவினைகளால் விளைந்து வருவன; அவை வந்த வண்ணமே வாழ்வு வாய்ந்து வீழ்வுகள் தோய்ந்துள்ளன. தோன்றின மறையும் என்பது ஆன்ற மறை மொழி.
உருவங்கள் தோன்றலும், சிலகாலம் உலாவித் திரிதலும், பருவம் முடிந்ததும் அருவமாய் மறைந்து போதலும் அதிசய வினோதங்களாய் நிலவுகின்றன. எண்ணரிய நிலையில் மண்ணறிய வந்து விண்ணறிய நின்று எங்கும் அவை பொங்கிக் திரிகின்றன.
உயிர்கள் ஏன் இவ்வாறு உடல்களை எடுத்து எவ்வழியும் நிலையின்றி வெவ்விய துயர்களோடு தொடர்ந்து உழலுகின்றன? இந்தக் கேள்வி பலருடைய சிந்தனைகளுக்கு வந்துள்ளன: வந்தும் தெளிவான விடைகூற முடியாமையால் பழவினை வழியே பிறவிகள் விளைந்து வருகின்றன என்று விழுமிய மேலோர் நயமாய் மொழிந்து வாழ்வில் நல்ல தருமங்களைச் செய்யும்படி தூண்டியுள்ளனர். தருமம் அரிய பல நலங்களை அருளுகின்றது.
பாவம் செய்தவர் கொடிய நரக வேதனைகளை அடைகின்றனர்; புண்ணியம் புரிந்தவர் பொன்னுலகத்தில் தேவபோகங்களை நுகர்கின்றனர்; அறம், மறம் என்னும் இந்த இருவகையும் கலந்தவர் மண்ணுலகத்தில் மனிதராய் மறுகி வாழுகின்றனர்.
இந்த வினைத்தொடர்புகள் அறவே நீங்கிவிடின் ஆன்மா பரமான்வை அடைந்து கொள்கிறது; அதுவே முத்தி என்றும், பரகதி என்றும், பேரின்ப வீடு என்றும், அழியாத ஆனந்த நிலையம் என்றும் வியந்து புகழ்ந்து போற்றப்படுகின்றது.
ஊன உடல்களை நீக்கி, ஈனப் பிறவிகளைப் போக்கி, பொல்லாத் துயர்கள் எல்லாவற்றையும் ஒருங்கே ஒழித்து உயர்ந்த பரம்பொருளோடு உயிரை எந்த இறப்பு இனிது சேர்க்கின்றதோ முடிவான அந்தச் சாவே அதிசயமுடையதாய்த் துதி செய்யப்பெறுகிறது. பிறப்பை ஒழித்த இறப்பே பெருஞ் சிறப்புற்றது.
தரும நீதிகள் தழுவிய தேகமே தன்னை மருவி நின்ற உயிர்க்குப் பிறவியை நீக்கிப் பேரின்பத்தை அருளுகிறது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
கைத்த சொல்லால் உயிரிழந்தும், புதல்வற் பிரிந்தும், கடைஓட
மெய்த்த வேந்தன் திருஉடம்பைப் பிரியார் பற்றி விட்டிலரால்;
பித்த மயக்காம் சுறவெறியும் பிறவிப் பெரிய கடல்கடக்க.
உய்த்து மீண்ட நாவாயில், தாமும் போவார் ஒக்கின்றார். 72 தைலம் ஆட்டு படலம், இராமாயணம்
தசரதன் இறந்து போனான்; அந்த உடலைச் சூழ்ந்து கொண்டு அவனுடைய மனைவிமார் மறுகி அழுதனர்; அந்த நிலையை இது இந்தவாறு விந்தையாய் விளக்கி யுள்ளது.
தமது பிராண நாயகனுடைய ஆவி நீங்கிய பின் அத் தேவியர் கூவி அழுத வகையை ஓவியக் காட்சியாய் எழுதிக் காட்டியிருப்பதில் உயர்ந்த சீவியம் ஒளி வீசி நிற்கிறது. இராச கம்பீரமான அவ்வுடம்பிலிருந்த உயிர் புகழும் புண்ணியமும் பொருந்தி நெடுங்காலம் சுகமாய் வாழ்ந்து முடிவில் பரம பதத்தை அடைந்தது; அந்த உருவைப் பற்றித் தொடர்ந்து நாமும் பரகதி அடைய வேண்டும் என்று அரசிகள் உரிமையோடு தழுவியிருந்தனர்.
தன்பால் ஏறியிருந்த பிரயாணியை அடுத்த கரையில் சேர்த்து விட்டு அழகான ஒரு தோணி மீண்டு வந்தது; இந்தக் கரையில் ஆயத்தமாயிருந்த பிரயாணிகள் ஆவலோடு விரைந்து அதில் ஏற நேர்ந்தனர்; அதுபோல் தேவியர் யாவரும் அத்தேகத்தைப் பற்றி நின்றனர். அந்தப் பரகதி யாத்திரை இங்கே பார்க்க நேர்ந்தது. ’பிறவிப் பெரிய கடல் கடக்க உய்த்து மீண்ட நாவாய்’ எனத் தசரதன் உடம்பை வித்தக விநயமாய்க் காட்டி யிருக்கும் காட்சி ஈண்டு உய்த்துணர்ந்து உறுதி நலங்களை ஓர்ந்து கொள்ள வுற்றது.
தந்தை இறந்தான் என்பதை அறிந்ததும் வனம் போயிருந்த இராமன் வருந்தி அழுதான். அப்பொழுது வசிட்ட முனிவர் அவ்வீரனை ஆர்வமுடன் தேற்றினார். உலக வாழ்வையும் இறப்பு நிலைகளையும் குறித்து அப்பெரியவர் பேசிய அரிய உரைகள் இனிய ஞான ஒளிகளை வீசி உறுதி நலங்களை உணர்த்தி உண்மை நிலைகளை நன்கு விளக்கி வந்தன. சில அயலே வருகின்றன.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
துறத்தலும் நல்லறத் துறையும் அல்லது
புறத்தொரு துணையிலை, பொருந்தும் மன்னுயிர்க்(கு);
“இறத்தலும் பிறத்தலும் இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்டநீ? 71
பெருவதன் முன்னுயிர் பிரிதல் காண்டியால்?
மறுவறு கற்பினில் வையம் யாவையும்
அறுபதி னாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டவற்(கு), இரங்கல் வேண்டுமோ? 73
சீலமும் தருமமும் சிதைவில் செய்கையாய்!
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம்வந்(து) உதவிய மூவர்க்(கு) ஆயினும்
காலமென்(று) ஒருவலை கடக்கல் ஆகுமோ? 74
கண்முதற் காட்சிய, கரைஇல் நீளத்த,
உண்முதற் பொருட்கெலாம் ஊற்றம் ஆவன,
மண்முதற் பூதங்கள் மாயும் என்றபோ(து),
எண்முதல் உயிர்க்குநீ இரங்கல் வேண்டுமோ? 75
இவ்வுல கத்தினும் இடரு ளேகிடந்(து)
அவ்வுல கத்தினும் நரகில் ஆழ்ந்துபின்
வெவ்வினை துய்ப்பன விரிந்த யோனிகள்
எவ்வள வில்செல எண்ணல் ஆகுமோ? 77
‘உண்டுகொல் இதுஅல(து) உதவி நீசெய்வ(து)?
எண்தகு குணத்தினாய்! தாதை என்றலால்,
புண்டரீ கத்தனி முதற்கும் போக்கரு
விண்டுவின் உலகிடை விளங்கி னானரோ! 78
ஐய!நீ யாதொன்றும் அவலிப் பாயலை;
உய்திறம் அவற்கினி இதனின் ஊங்குண்டோ?
செய்வன வரன்முறை திருத்திச், சேந்தநின்
கையினால் ஒழுக்குதி கடனெ லாமென்றான். 79
‘விண்ணுநீர் மொக்குளின் விளியும் யாக்கையை
எண்ணி,நீ அழுங்குதல் இழுதைப் பாலதால்;
கண்ணினீர் உகுத்தலின் கண்ட(து) இல்லை;போய்
மண்ணுநீர் உகுத்தி,தா மலர்க்கை யாலென்றான். 80
- திருவடி சூட்டுப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
இந்தப் பாசுரங்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. தெளிந்த ஞான சீலருடைய வாய்மொழிகளால் உயர்ந்த உண்மைகளைக் கவி இங்கே உலகம் அறிய வழங்கியிருக்கிறார். உறுதி நலங்கள் உணர்வின் மணங்கள் தோய்ந்து ஒளிமிகுந்து நிற்கின்றன. போதனையில் பொதிந்துள்ள பொருள்கள் இருள் நீக்கி இன்பம் பயக்கும் இயல்புகளோடு உயர்ந்து திகழ்கின்றன.
உடலோடு பிறந்த உயிர் மறைந்தே தீரும்; அந்த இறப்பு நேருமுன் பிறப்பின் பயனைப் பெறின் உயிர் ஒளி மிகுந்து உயரும்; தருமமே உயிர்க்கு எவ்வழியும் உறுதித் துணை; துறவும், ஞானமும் சீவப் பறவைக்கு இரு சிறகுகள் போல் அமைந்துள்ளன; அவை மருவிய அளவு அது மகிமையுறுகிறது; உன்னை மகனாகப் பெற்ற பெருமையால் மன்னன் பரகதி அடைந்திருக்கிறான்; நீண்ட காலம் புகழோடு வாழ்ந்து நித்திய நிலையைப் பெற்றுள்ளமையால் நீ உள்ளம் உவந்து கொள்ள வேண்டும்; தேவதேவரும் காலத்தைக் கடந்து வாழமுடியாது; தந்தை இறந்த போனாரே என்று சிந்தை வருந்தாதே; இந்த உலகில் எவரும் நிலையாய் இருப்பதில்லை; இறத்தலும் பிறத்தலும் இயற்கை; இதனை மறந்து மறுகலாகாது; சிறந்த மேதையான நீ தாதையிடம் கொண்டுள்ள பாசத்தால் நெஞ்சம் உருகி நிலை குலைந்து அழுகிறாய்; கண்ணீர் சொரிந்து அழுவதை நிறுத்தித் தந்தைக்குத் தண்ணீர் சொரிந்து கருமக் கடனை உரிமையோடு செய்து அருளுக என மாதவர் இவ்வாறு ஆதரவோடு ஆறுதல் கூறியிருக்கிறார்.
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்டநீl
என்று இராமனை நோக்கி முனிவர் குறித்துள்ள இதில் இறந்துபடுதலை யாரும் மறந்து விடலாகாது; மறவாமல் நின்று பிறந்த பயனை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரிய வந்தது. உற்ற பிறவியில் உறுவதை உணர்த்தியது.
அரிய மனித தேகம் மருவியது பெரிய பேறுகளைப் பெறவேயாம்; உரிய பொழுதே உயிர்க்கு உறுதி நலனைக் கருதியுணர்வது உயர்ந்த ஞானமாய் ஒளி மிகுந்து வருகிறது. உண்மை நிலையைத் தெளிவாக உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வு என வந்தது. அது நன்கு எய்தியபோது பொய்யான மாய மயல்கள் ஒழிந்து மெய்யான தூய பரம்பொருளைத் தெளிந்து பிறவியை அறவே நீக்கிப் பேரின்ப நிலையைப் பெற விரைகின்றனர். அவரது எண்ணம் இறைவனையே எண்ணுகிறது; உரைகளும் செயல்களும் அவனோடேயே உறவு கொண்டாடி உரிமையுடன் முறையீடுகள் புரிகின்றன.
பட்டினத்தார் ஒருமுறை திருவையாறு என்னும் தலத்துக்குப் போயிருந்தார்; கோயிலுள் புகுந்து சிவலிங்கத்தைக் கண்டு தொழுதார்; கண்ணீர் பெருகி மார்பில் வழிய அழுதார்; அவர் எதை எண்ணி அழுதார்? அதனை அயலே காண வருகிறோம்
நேரிசை வெண்பா
மண்ணும் தணலாற வானும் புகைஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாற வும்மடியேன் காலாற வும்கண்பார்
ஐயா திருவையா றா. - பட்டினத்தார்
தன் பிறவியை நீக்கியருளும்படி இறைவனிடம் இவ்வாறு முறையிட்டிருக்கிறார். எல்லையில்லாத சாவுகளை நான் எய்தியிருக்கிறேன்; நான் பிறந்து இறந்த இடங்களில் எல்லாம் என் உடல்களைச் சுடலைகளில் வைத்துச் சுட்டிருக்கின்றனர்; அந்த வெய்ய சூடு வையகம் எங்கும் பரவியுளது; அவ்வாறு சுடுங்கால் எழுந்த பிணப்புகை வானகம் முழுதும் விரிந்திருக்கிறது: மண் தணல் ஆற, வான் புகை ஆற, தாயர் இளைப்பு ஆற, அயன் களைப்பு ஆற, அடியேன் கால் ஆற ஐயா! கண்பார்! என்று ஐயாறனை நோக்கி ஐந்து ஆறுதல்களை வேண்டியிருக்கிறார். இதில் மருவியுள்ள சுவைகளை நுணுகி உணர்ந்து கொள்ள வேண்டும்.
எழுகடல் மணலை அளவிடின் அதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்:
இனியுன(து) அபயம் எனதுயிர் உடலும்
இனியுடல் விடுக முடியாது;
கழுகொடு நரியும் எரிபுவி மறலி
கமலனும் மிகவும் அயர்வானார்;
கடனுன(து) அபயம் அடிமையுன் அடிமை
கடுகியுன் அடிகள் தருவாயே! 288 திருப்புகழ்
அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இவ்வாறு உருகி உரையாடியிருக்கிறார். அளவிடலரிய பிறவிகளை எடுத்து நான் செத்துச் சிதைந்திருக்கிறேன்; இனிமேல் என்னால் சாகமுடியாது; இறப்பை எவ்வழியும் யாதும் நான் காணாதபடி என் பிறப்பை அடியோடு நீக்கி உன் திருவடியில் சேர்த்துக் கொள் என்று உழுவலன்போடு உருகி அபயம் புகுந்திருக்கும் உறவுரிமை அவரது மனவுறுதியைத் தெளிவாய் விளக்கியுள்ளது.
உடம்பை நீக்கிப் புனிதமான உயிரைத் தனி முதலோடு சேர்த்தலால் சாக்காடு மிகவும் இனியதே என முனிவரர் கருதி யுள்ளனர். சாவு அல்லல்களை ஒழித்தருளும் நல்ல துணை ஆயது.
O death! We thank thee for the light that thou wilt shed upon our ignorance. [Bossuet]
ஓ மரணமேl எமது மடமை இருள் மேல் ஒளியை வீசி உதவியதற்காக உனக்கு நன்றி யறிவான வணக்கம் என இது குறித்திருக்கிறது. குறிப்பைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும்.
Death and love are the two wings that bear the good man to heaven. (M. Angelo)
நல்ல மனிதனைப் பரகதிக்குக் கொண்டு போகிற இரு சிறகுகளாய் மரணமும், அன்பும் மருவியுள்ளன என்னும் இது இங்கு அறிய வுரியது. இறப்பு இறவா இன்பத்தை அருளுகிறது.
பிறந்தவர் யாரும் இறந்து மறைதல் உறுதி; அந்த இறப்பு அணுகுமுன் இனிய நன்மைகளைச் செய்து வாழ்வைப் புனிதமாக்கிப் புண்ணியனாய் உயர்ந்து கொள்க; அது பேரின்பமாய் வரும். நல்ல ஞானம் நல்கும் தேவாய்ச் சாவு மேவியுள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.