மாண்பொருளே வெண்ணீர்ச் சிறியரையும் ஏர்ப்படுத்துஞ் செய் – இன்னிலை 13
நேரிசை வெண்பா
மண்ணீர் உடையார் வழங்கிச் சிறுகாலைத்
தண்ணீரார் சாரும் நிலஞ்சார்வர் - உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே வெண்ணீர்ச்
சிறியரையும் ஏர்ப்படுத்துஞ் செய் 13
– இன்னிலை
பொருளுரை:
நிலமும் நீர்நிலைகளும் ஆகிய செல்வங்களையுடையவர் அவற்றை வறியவர்க்குக் கொடுத்து (அறம்புரிந்து), விரைவில் அருட்குணமுடைய ஆன்றோர் எய்தும் மேலுலகத்தினை அடைவர்,
உண்மைத் தன்மையாய்ந்தால், மாட்சிமையுடைய செல்வப் பொருளே (அந்நற்பண்பு நற்செயல்களை வளர்க்கும்) அருமையான செவிலித்தாயாகும்; (அப்பொருள்) வெள்ளிய தன்மையுடைய சிறியோரையும் பெருமைப் படுத்தும்; ஆதலால் அப்பொருளை ஈட்டுக.
கருத்து:
செல்வமுடையவர்கள் அறம்புரிந்து மேலோர் எய்தும் துறக்கத்தினையும் அடைவர். செல்வமே நற்பண்புகளை வளர்பபது. ஆதலால் நீ செல்வத்தினையே தேடு.
விளக்கம்:
மண் என்பது நன்செய், புன்செய், வீடு, தோட்டம் முதலியவற்றை யுணர்த்திற்று.
நீர் என்பது கிணறு, குளம், முதலியவற்றையுணர்த்திற்று. நன்செய் குளத்து நீர் பாய்ந்து விளைவது. புன்செய் நீர் வேண்டாதது, மழையால் விளையும் இயல்புடையது.
தோட்டம் கிணற்று நீரால் விளையும் இயல்புடையது. வீடுகளிலும் கிணறு அமைந்திருக்கும்.
புன்செய் ஒன்று தவிர மற்ற நிலங்களில் நீர் இருக்கும் ஆதலால் மண்ணீர் ஆகிய செல்வமெனப் பொருள் படுமாறு மண்ணீர் எனக் கூறினர்.
மண்ணீர் என்பது மண்ணும் நீருமாகிய செல்வத்தை யுணர்த்தியது.
தண்ணீரார் என்பது சான்றோரை யுணர்த்தியது. தண்மை – அருள் – நீர் – பண்பு, அருட்பண்புடையார் என்பது திரண்ட பொருள்.
அவர் சாரும் நிலம் எனவே முத்தியுலகம் என்பது குறிப்பாற் கொள்ளப்பட்டது.
உண்ணீர் - உண்மைத்தன்மை; அறியின் - அறியவிரும்பினால் யான் கூறுகின்றேன் என்பது குறிப்பு.
வெள்நீர்ச் சிறியர் - நுண்ணிய அறிவில்லாதவர்.
ஏர்ப்படுத்தும் - அழகுபடுத்தும், பெருமைப்படுத்தும் என்பது அது.
நேரிசை வெண்பா
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்,
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றும்
தருஞ்சிவந்த தாமரையா டான்,
என்ற கவியின் கருத்தை அடியொற்றியது இது
குறிப்பு:
மண்ணீர் - ஆகுபெயர். தண்மை + நீர் - தண்ணீர், உண்மை + நீர் - உண்ணீர், அருமை + செவிலி - அருஞ் செவிலி
பொருள் – எழுவாய்; ஏர்ப்படுத்தும் – பயனிலை; செய் என்பதற்கு நீ என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது