எந்த நிலையறிந்தால் அந்தமிலா இன்பம் அருளுமோ அந்த அறிவே பரஞானம் - ஞானம், தருமதீபிகை 941

நேரிசை வெண்பா

எந்த நிலையறிந்தால் எல்லாம் அறிந்ததாய்
அந்தமிலா இன்பம் அருளுமோ - அந்த
அறிவே பரஞானம் ஆகும்; அதனின்
நெறியே கதியாம் நினை. 941

- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாய் எல்லையில்லாத பேரின்ப நிலையை அருளுமோ அதுவே மேலான ஞானம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அந்த வழியே எந்தவகையும் ஒளிமிகுந்த அதிசய ஆனந்த நிலையை அடைதல் கருதி ஞான நெறியே கதி என்றது. முத்தி நிலை வித்தக ஒளியால் எளிதே விழி தெரிய எதிரே நின்றது.

அறிவு, புத்தி, யுத்தி, யூகம், விவேகம், உணர்வு என்பன உயர்ந்த மனித நீர்மைகளாய் வந்துள்ளன. விலங்கு, பறவை முதலிய பிராணிகளை விட மக்கள் உயர்ந்தவர் எனச் சிறந்து நிற்பது சித்த விருத்திகளின் சீர்மைகளாலேயாம். புத்தி தத்துவத்திலிருந்து போகங்கள் விரிந்து ஏதங்கள் கழிந்து இனிதே பொங்கி எழுந்தவர் புத்தேளிர் எனப் பொலிந்து விளங்குகின்றனர்.

பொருள்களை ஆய்ந்தறிவது அறிவு.
புதுமையாய்ப் புகுந்து தெரிவது புத்தி.
ஒத்த நிலைகளை உய்த்து ஓர்வது யுத்தி.
யூகித்து உணர்ந்து துணிவது யூகம்.
வியனாக வேகித்துத் தெளிவது விவேகம்.
ஊன்றி ஓர்ந்து நுகர்வது உணர்வு.

இன்னவாறான இந்த அறிவு வகைகளால் மனித இனம் மாண்படைந்துள்ளது. கல்வி அறிவு, காரிய அறிவு, கலை அறிவு, தொழில் அறிவு, எழில் அறிவு, இசையறிவு முதலாகப் பலவகையிலும் பரந்து விரிந்து வாழ்வை அறிவு வளம்படுத்தி வருகிறது.

இந்த அறிவுத் துறைகள் எல்லாவற்றிலும் உயர்ந்து பொய்யான மருள்களை ஒதுக்கி மெய்யான பொருளையே கருதி நிற்பது மெய்யுணர்வு என வந்தது. இவ் வித்தக வுணர்வையே தத்துவ ஞானம் என்று வடமொழியாளர் வழங்கி வருகின்றனர்.

உலக நிலைகளை அறிவதினும் உண்மை நிலையை உணர்வது மிகவும் உயர்ந்தது. அந்தத் தெளிந்த உணர்வே இங்கு ஞானம் என வந்தது. அதனையுடையவர் ஞானி என மேன்மையாய் விளங்கி நின்றனர். மாய மயக்கங்கள் நீங்கிய தூய அறிவினர் துயரநிலைகளைக் கடந்து இன்பநிலைக்கு உயர்ந்து போகின்றனர்.

நிலம், நீர் முதலிய ஐவகைக் கலவைகளால் உலகம் அமைந்தது; பலவகையான உயிரினங்களை யுடையது; நிலையில்லாத நிலையது; தோன்றின யாவும் மறையும் இயல்பின; இத்தோற்றங்களுக்கெல்லாம் மூல முதல் ஒன்று உண்டு; அது எல்லாம் வல்லது; என்றும் உள்ளது; எங்கும் நிறைந்தது. இன்ப மயமான அந்தத் தனி முதலை அடைந்த போதுதான் அல்லல் யாவும் நீங்கி ஆன்மா ஆனந்த நிலையை அடையும். இன்னவாறு ஓர்ந்துணர்ந்து உண்மை தெளிவதே ஒளி நிறைந்த ஞானமாம்.

ஒளி இருளை நீக்கித் தெளிவாய் உவகை தருதல் போல் ஞானம் மருளை நீக்கி மாறாத பேரின்ப நிலையை அருளுகிறது.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 352 மெய்யுணர்தல்

மையல் நீங்கிய மெய்யறிவாளர்க்கு வெய்ய துன்பங்கள் நீங்கி மேலான இன்பம் உண்டாகும் என வள்ளுவர் இங்ஙனம் கூறியிருக்கிறார் பாசப்பற்று அற்ற ஞானிகளை மாசறு காட்சியவர் என்று இங்கே காட்டியிருப்பது கருதி உணரத்தக்கது.

தெளிவான ஒளி விழி போல் ஞானம் மனிதனுக்குப் புனிதக் காட்சியாய் நின்று அரிய பல மாட்சிகளை அருளி வருகிறது. பொய்யான புலைகளை நீக்கி .மெய்யான நிலைகளை நோக்கி மேலான பேரின்ப நலங்களை ஞானம் நல்குதலால் அது வான அமுதம் என மானவர்க்கு மகிமையாய் மருவியுளது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மெய்வகை தெரிதன் ஞானம்; விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை யின்றித் தேறல் காட்சியைம் பொறியும் வாட்டி
உ’ய்’வகை யுயிரைத் தேயா(து) ஒழுகுதல் ஒழுக்கம்; மூன்றும்
இ’வ்’வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான். 25,

- கேமசரியார் இலம்பகம், சீவகசிந்தாமணி

உண்மை நிலையை உள்ளபடி உணர்தல் ஞானம்; அங்ஙனம் உணர்ந்ததைத் தெளிந்து பொறிகளை அடக்கி நெறியே ஒழுகிவரின் இருவினைத் துயர்களும் ஒருங்கே ஒழிந்து போகும்; விழுமிய உயர்ந்த இன்பம் விளைந்து வரும் என இது உணர்த்தியுள்ளது.

பிறவியில் யாண்டும் ஓயாமல் தொடர்ந்து அடர்ந்து வந்த துன்பங்களை எல்லாம் அடியோடு நீக்கி என்றும் அழியாத பேரின்ப நிலையை ஞானம் அருளும் என்றதனால் உயிர்க்கு அது எவ்வளவு உரிமைத் துணை என்பதை ஈண்டு ஊன்றியுணர்ந்து கொள்ள வேண்டும்.

எவ்வழியும் ஞானம் திவ்விய போகங்களை அருளுகிற செவ்விய துணை; அது இனிது உதயமாகும்படி தனது இதயத்தை எவன் புனிதமாக்கிக் கொள்ளுகிறானோ அவன் அதிசய பாக்கியவான் ஆகிறான். உணர்வின் ஒளி உய்தி தருகிறது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா விளம் விளம் மா)

தனதகத்(து) அகலா திருந்துபே ரின்பம்
..தருதலால் மனைவியும், தன்பால்
இனிதுதித்(து) ஒருதன் வினையொழித்(து) அசையா(து)
..இருத்திவீட்(டு) அமுதருத் துதலால்
உனலரும் சுதனும் ஒருவனுக் கவனுா(டு)
..உதயமாய் எழுந்தமெய் யுணர்வே
பினையிஃ தன்றி மனைசுத ரெனயாம்
..பேணிநாள் கழிப்பதும் பிழையே, 23 வைராக்கிய தீபம்

ஞானம் அருமை மனைவிபோல் இனிய சுகங்களைத் தரும்; உரிமை மகன்போல் அரிய கதிகளை நல்கும்; பெரிய முத்தியை அருளும் எனச் சாந்தலிங்க சுவாமிகள் இவ்வாறு ஞானத்தைக் குறித்து மாந்தர் மதி தெளியும்படி உணர்த்தியிருக்கிறார்.

தூய்மையாய்த் தெளிந்த உணர்வு ஞானம்; தீமையாய் இழிந்த மடமை அஞ்ஞானம். முன்னது இருளை நீக்கி இன்பம் அருளும்; பின்னது மருளில் ஆழ்த்தி எவ்வழியும் துன்பங்களையே கொடுக்கும். ஞானம் உடையவன் நலம் பல அடைகிறான்,

உண்மையை உ ணர்ந்து உயர்நலம் உறுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-22, 12:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே