பாதையும் பார்வையும்1 ”ட்ரெண்ட்”

”என்னடா இது ? உன் டேஸ்ட் இப்படி மட்டமா இருக்கு? ” என்று பல இடங்களில் பலவாறு நக்கல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு விஷயத்தைப் பார்க்கும்போது அருவெறுப்பாகவோ, கேலிபண்ணும் விதமாகவோ அல்லது உடனே கண்டிக்க விதமாக தோன்றினாலோ அவசரப்பட்டு உடனே அந்த உணர்வை வெளிப்படுத்திவிடக் கூடாது. காரணம்?
அவ்வாறு நீங்கள் செயல்பட்டால், நீங்களே அருவெறுப்பிற்கோ, கேலிசெய்யப்படும் நிலைக்கோ, அல்லது பெரும் கண்டனத்திற்கோ ஆளாகக்கூடும். சிலநேரங்களில் தாக்குதலுக்கு கூட ஆளாக நேரலாம். அப்படிப்பட்ட சூழலில்தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதற்கு என்ன பெயர்?
நாகரீக மாற்றம் !
ஆம் …. ஒருகாலத்தில் நவீனத்தை “ஃபேஷன்” என்று வர்ணித்தோம். இன்று நவீனத்தைக் குறிப்பிட வேறு சொல் வந்துவிட்டது. அதுதான் “ட்ரெண்ட்”. எதற்கெடுத்தாலும் “ட்ரெண்டியா இருக்குல்ல!”, என்பதும், விளம்பரங்களில் கூட ”ட்ரெண்டி கலெக்ஷன்ஸ்” என கத்துவதும், பரபரப்பைக் குறிப்பிட ”வைரலாக பரவுது” என்று சொல்வதும் இப்போது சகஜம். அதிலும் இந்த ”வைரல்” என்கிற வார்த்தையை எதற்குத்தான் பயன்படுத்துவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போனது. தொலைக்காட்சி ஊடகங்கள், இணையள செய்திகள் போன்றவை அனைத்தும் இந்த “வைரல்” என்கிற வார்த்தையை விடாப்பிடியாக பிடித்து தொங்கிக்கொண்டிருக்கின்றன. (எந்த புண்ணியவானோ அல்லது புண்ணியவதியோ எந்த நேரத்தில், எந்த இடத்தில் தொடங்கினார்களோ தெரியவில்லை. செம ஹிட் ஆகியிருக்கிறது. எல்லா மாநிலத்துலேயும் கொரோனா-1 , கொரோனா – 2, ஒமைக்ரான் இப்படி போவுது.)
ஒரு காலத்தில் ”ஃபேஷன்” என்பது (அடச்சே… இதுவே இப்ப பழசு) அதாங்க ”ட்ரெண்ட்” ன்னு சொல்றோமே… ஒரு காலத்துல இந்த ட்ரெண்ட் குறஞ்சது 30 வருஷத்துக்கு ஒரு முறை மாறியிருக்கிறது. ஆனா… இப்ப அப்படி இல்ல. மூணு வாரமே அதிகம்தான். அந்த அளவுக்கு வேகமா இருக்கு.
இந்த வேகம் சில விஷயங்கள்ல்ல இருந்தா பராவாயில்ல. எல்லாத்துலேயும் புகுந்து விட்டது.
ஒருகாலத்துல மாட்டுவண்டி ஓட்டுறவங்க, சுமைதூக்கும் தொழிலாளிங்க, ரோடு போடுறவங்க, துப்புரவுத் தொழிலாளிங்க, அப்படின்னு பலபேரு, அவங்க வேலை செய்யுறப்போ டவுசரை மட்டும் போட்டுக்கிட்டு, வேலைசெய்வாங்க. அப்புறம் நல்லது, பொல்லதுக்கு போறப்போ மட்டும் நல்ல வேட்டி சட்டை உடுத்துவாங்க. ஆனா அதுக்கே அப்பவெல்லாம் டவுசர் மட்டும் போட்டவங்களை எல்லாரும் ஒரு மாதிரியா பார்ப்பாங்க. அது நாகரீக குறைபாடுன்னு நெனைச்சாங்க.
உதாரணத்துக்கு …. நடிகர் வடிவேலு ஒரு படத்துல தன் பொண்டாட்டியோட ரோட்டுல நடந்து போறப்போ, அரைக்கால் டவுசர் போட்டுக்கிட்டு சினிமாவுக்குப் போவாரு. அவரோட வேட்டியை தன் தொடை தெரியுற மாதிரியும், பின்பக்கம் தெரியுற மாதிரியும், தூக்கி சுருட்டி விட்டுருப்பாரு. வழியில ஒரு இன்ஸ்பெக்டர் இதைப்பார்த்துட்டு ரெண்டு போடு போட்டு வடிவேலுவை “கவனிச்சி” அனுப்புவாரு. அப்ப அதை காமெடியா பார்த்தோம். ஏன்னா…. அந்த காலகட்டத்துல நாட்டுல கலாச்சாரம் அப்படி இருந்தது. ஆனா… இப்ப எல்லாம் மாறிப் போச்சு.
ஷாப்பிங் மால், கோயில் அப்படின்னு, பாத்ரூம் போறதுலேருந்து, ராத்திரி பகல்ன்னு எந்த நேரமும் டவுசரோட (அதாங்க “ஷார்ட்ஸ்”) போற பழக்கம் வந்துருச்சு. அப்படி போறதுதான் இப்போதைக்கு ட்ரெண்ட். இது ஆம்பிளங்களுக்கு மட்டுமில்ல பொம்பளைங்களுக்கும் பொருந்தும். தனியா போற பொண்ணுங்க, தன் தோழிகளோட போற பொண்ணுங்கதான் அப்படியான்னா… அப்படி இல்ல. பெத்தவங்களோட போற பொண்ணுங்களும் அப்படித்தான் போறாங்க. அட… பொண்ணுங்களைப் பெத்த அம்மாக்களும் சரி, அப்பாக்களும் சரி … அவங்க அதுக்கும் மேல இருக்காங்க. இதுக்குன்னு ட்ரெண்டி கலெக்ஷன்ஸ் ஷோரூம்கள், ஆன்லைன் ஷாப்பிங்கெல்லாம் ரொம்ப பிரமாதம்.
இதேபோல குருவிக்காரங்கன்னு சொல்றோமே… அதாங்க நரிக்குறவர் இனம் ! அந்த இனத்து பொண்ணுங்க ஊசி, மணி, பாசி வித்துக்கிட்டு போறப்போ சின்னதா ஒரு துணி பர்ஸை நீளமான கயித்துல தைச்சி, தோள்ல தொங்க விட்டபடி போவாங்க. கூடவே லைசென்ஸ் வாங்குன ரேடியோ ஒன்னு வேற . அதுல பேட்டரிங்க போட்டு, சத்தமா பாட்டுகேட்டுக்கிட்டே போவாங்க. அப்பவெல்லாம் “அட… இங்க பாருடா… குறத்தி எப்படி போறா”ன்னு” நக்கல் விடுவாங்க.
ஆனா… அந்த மாதிரி நக்கல் செஞ்சவங்களோட தலைமுறையிலேயே, இப்ப எல்லாரும் ஹேண்ட் பேக், மொபைல் போன்ல பாட்டு கேட்டபடியே வாக்கிங், டாக்கிங், ஈட்டிங் இப்படியாயிடுச்சு.
ஆக, இப்படி டவுசரோட (ஷார்ட்ஸ்) போறது, மொபைல் சமாச்சாரம் இப்படி எல்லாத்தையும் நீங்க அருவெறுத்தீங்கன்னா… நக்கல் பண்ணினா… கண்டிச்சா … நிச்சயமா நீங்க கேவலப்படுறது நிச்சயம்.
பாருங்க. ”படிக்குற பிள்ளைக்கு எதுக்கு போ? அப்படின்னு கேட்டதுபோயி, இப்ப படிக்குறதே போன்லதான்” அப்படின்னு மாறலியா?
ஆனா… எப்போ? , எந்த இடத்துல?, எப்படி ? அப்படிங்குற விஷயத்துல கொஞ்சம் தெளிவிருந்தா போதும். அதுவே ரொம்ப நல்லது.
அதனால, மனசை போட்டு ரொம்ப அலட்டிக்காம போவோம்.
அதான் நமக்கும் நல்லது. சுத்தி இருக்குறவங்களுக்கும் நல்லது.

எழுதியவர் : - எம்.பழனிவாசன் (4-Jan-22, 5:56 pm)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 54

மேலே