எண்ணாசை இல்லாத மேதையை ஈசனும் ஆசையாய் உல்லாச மாடும் உவந்து – துறவு, தருமதீபிகை 951
நேரிசை வெண்பா
மண்ணாசை எல்லாம் மறந்து துறந்தவனை
விண்ணாசை யோடு விரும்புமால் - எண்ணாசை
இல்லாத மேதையை ஈசனுமே ஆசையாய்
உல்லாச மாடும் உவந்து. 951
- துறவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
மண், பெண், பொன் என மருவியுள்ள உலக ஆசைகள் யாவும் துறந்துள்ள துறவியை விண்ணவரும் ஆசையோடு வியந்து புகழ்வார்; ஈசனும் அவனை உவந்து காண்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஈசனை அடைவதே சீவனுடைய இறுதியான உறுதி முடிவு. அவ்வாறு அடைந்த போதுதான் அதிக ஆனந்த மயமாய் அது அமைந்து திகழும் அந்தப் பேரின்பப் பேற்றைப் பெற முடியாதபடி சிற்றின்ப ஆசைகள் இடையே புகுந்து தடைகளாய் நீண்டு எவ்வழியும் வெவ்விய துயரங்களை விளைத்து வருகின்றன. இழிந்த நீசத் தொடர்புகள் உள்ள அளவும் உயர்ந்த ஈசனை அணுக முடியாது. பாசம் அற்றவழி ஈசன் உற்ற துணை ஆகிறான்.
உயிரைத் துயருறுத்தி வருகிற அவல ஆசைகள் அளவிடலரியன; ஆயினும் அவை மூவகையுள் அடங்கியுள்ளன.
மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை என்னும் இந்த மூன்றனுள் பொல்லாத ஆசைகள் எல்லாம் அடங்கி நிற்கின்றன. ஆசைத் தீ இந்த மூன்று வகையான விறகுப் பொதிகளிலிருந்தே என்றும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. விறகு சேரச் சேர தீ வீறு கொண்டு விரிந்து பரவும்; பொருள் சேரச் சேர ஆசை மருளோடு ஓங்கி வளர்ந்து நீளும்.
ஆசை வளர்ந்த அளவு மனிதன் நீச நிலையில் அழுந்தியுழல்கிறான்; அது ஒழிந்த அளவு ஈசன் அருளை அடைந்து உயர்கிறான். எவ்வழியும் வெவ்விய துயரமே விளைப்பதாதலால் மயலான ஆசையை ஒழிப்பதே உயிர்க்கு உயர்வான உய்தி செய்வதாம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
ஆசை அறுதல் வீட்டின்பம் நேரே அடையக் காரணமாம்
ஆசை அறுதல் அலதில்லைப் பலநூல் அனைத்தும் ஆய்ந்திடினும்
ஆசை அறுவோன் சிவனாதல் திண்ணம் எனநன் றறிந்திருந்தும்
ஆசை உறுதல் என்கொண்டோ அந்தோ மனிதர் அறியேமே. 13
– 24 மனோலய கதி, பிரபுலிங்க லீலை
ஆசை அற்ற போது சீவன் பேரின்ப நிலையைப் பெறுகிறது; அறாது நின்றால் அது அவல நிலையில் இழிந்து வருகிறது. ’ஆசை அறுவோன் சிவனாதல் திண்ணம்’ என உணர்த்தியுள்ள இதன் உண்மையை உரிமையோடு ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். ஆசை நீங்கினவன் நீசம் நீங்கி ஈசனாய் ஓங்குகிறான்.
பாச பந்தங்கள் உயிரை நீசப்படுத்தித் துயருறுத்துமாதலால் உண்மையை உணர்ந்த ஞானிகள் அவற்றை அறவே துறந்து உய்தி பெறுகின்றார். பிறவித் துயரங்களை நீக்கியருளுதலால் துறவு இறைவன் .அருள் போல் உயிர்க்குறவாய் உதவி புரிகிறது. இருள் நீக்கும் இரவி போல் துறவு மருள் நீக்கும்.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படைஅந் தணனை
மறவியை இன்றி மனத்துவைப் பாரே. 1
- ஆராதிப்பார்க்கு மிக இனியன், நம்மாழ்வார் திருவாய் மொழி, நான்காம் ஆயிரம், நாலாயிர திவ்ய பிரபந்தம்
பற்றுக்களைத் துறந்தவர் துறவியர்; அவர் பிறவித் துயர் ஒருவி இறைவனை மருவி யிருப்பர் என நம்மாழ்வார் இவ்வாறு அருளியுள்ளார்; உலக பந்தங்களை விட்டவர் அலகிலின்பமுடைய அமலனை ஒட்டி அதிசய நிலையில் நிலவுகின்றார். ஞானமும் துறவும் ஈன இனங்களை நீக்கி இன்ப நலன்களை அருளுகின்றன; அந்த உண்மை நிலைகள் ஈண்டு நுண்மையாய் எண்ணியுணர வந்தன.
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)
மண்ணினும் தனத்தினும் மனைக்கு வாய்த்தநற்
பெண்ணினும் மகவினும் பெரிய பேரினும்
துண்ணென விழைவினைத் துறந்த தூயரே
விண்ணினும் இன்புடன் விளங்கி மேவுவார். - சிவதருமோத்தரம்
இழிந்த சிற்றின்ப ஆசைகளைத் துறந்தவரே உயர்ந்த பேரின்ப நிலையை அடைந்து விளங்குவர் என இது விளக்கி யுள்ளது.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
தன்னை அறியத் தனதருளால் தானுணர்த்தும்
மன்னைப் பொருளெனவே வாழாமற் பாழ்நெஞ்சே
பொன்னைப் புவியைமடப் பூவையரை மெய்யெனவே
என்னைக் கவர்ந்திழுத்திட் டென்னபலன் கண்டாயே. 1 - 34. தன்னை, தாயுமானவர்
நிலையான மெய்ப்பொருளை மேவி வாழாமல் புலையான பொய்ப்பொருள்களில் அழுந்திப் பொல்லாத துயரங்களை விளைக்கின்றாயே! இது நல்லதா? ஒல்லையில் உணர்ந்து உய்க! என்று தன் நெஞ்சை நோக்கித் தாயுமானவர் இங்ஙனம் இரங்கியிருக்கிறார்.
கட்டளைக் கலித்துறை
இல்லம் துறந்து பசிவந்த போதங்(கு) இரந்துதின்று
பல்லும் கரையற்று, வெள்வாயு மாய்ஒன்றில் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே
அல்லும் பகலும் இருப்பாதென் றோ?கயி லாயத்தனே! 1
கட்டளைக் கலித்துறை
சுரப்பற்று வல்வினை சுற்றமும் அற்றுத் தொழில்களற்று
கரப்பற்று மங்கையர் கையிணக் கற்றுக் கவலையற்று
வரப்பற்று நாதனை வாயார வாழ்த்தி மனமடங்கப்
பரப்பற்றி ருப்பதன் றோ?பர மா!பர மானந்தமே. 2 - பட்டினத்தார்
பாசப் பற்றுக்கள் யாவும் துறந்து மனம் அமைதியாய் அடங்கி யிருக்கும் துறவிகளே ஈசனது இன்பப் பேறுகளை இனிது எய்துகின்றார் எனப் பட்டினத்தார் தமது அனுபவத்தை இப்படிப் பரிவோடு உலகம் அறிய வெளியிட்டிருக்கிறார்.
பெண் பொன் முதலிய பாசப்பசைகள் அற்றபோதுதான் ஈசனைப் பற்றமுடியும் என்றதனால் அந்த நீசநிலைகளின் புலைகள் நேரே தெரிய வந்தன. துக்கங்களுக்கெல்லாம் ஆசை மூல வித்தாதலால் அதனை அடியோடு துறந்தவரே ஆனந்த வீட்டில் குடியேறுகின்றார். நித்திய முத்திக்கு நேரான வழி நிராசையே.
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச்சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)
ஆசையொன்(று) இலனெனின் அகில லோகமும்
பூசைசெய் புனிதனாய்ப் பொலிந்தி லங்குவன்;
ஆசையொன்(று) உளனெனின் அவலப் பேயனாய்
நீசவெந் துயர்களை நெடிது நேருமே.
பாச பந்தங்களில் இழிந்து துயருறாமல் யாவும் துறந்து தேவின் உயர்ந்து தேசு பெறுக. பிறவித் துயர்களை நீக்கியருளும் அரிய பேரமுதம் துறவே, துறவு தோய இறைமை தோய்கிறது; அதனை உறவாய் மருவி இறவாத இன்ப நிலையை எய்துக என்கிறார் கவிராஜ பண்டிதர்,