சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்கு இறுவரை யில்லை யெனின் - நீதிநெறி விளக்கம் 41

நேரிசை வெண்பா
(’ம்’ ‘ன்’ மெல்லின எதுகை)

தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்
இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக - பின்னர்ச்
சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்(கு)
இறுவரை யில்லை யெனின் 41

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

இனிமேல் சிறிது காலமாயினும் திண்ணமாக தமக்குச் சாங்காலம் வரை இல்லையானால் தம்முடைய வலிமையையும் மானத்தையும் இழந்து தமது இனிய உயிரை காக்கினுங் காக்க.

விளக்கம்:

பிறந்த போதே இறப்பு உண்மையாகலின், வலியும் மானமும் இழக்காது வாழவேண்டும் எனப்பட்டது.

போர்முகத்தும் பகைவர்க்குப் புறங்காட்டல் வலியிழத்தல்:

இழிதொழில் செய்து பிறரால் அவமதிக்கப் படலும் தண்டிக்கப்படலும் மானம் இழத்தல்.

பிறந்த உயிரெல்லாம் என்றேனும் ஒருநாள் இறந்தே தீரும். இறவாத உயிரெதுவும் மண்ணிலில்லை.

ஆசிரியர் குமரகுருபர அடிகள் தம் முதற் செய்யுளிலேயே இவ்வுண்மையை விளக்கி மண்ணிற் பிறந்தார்க்கெல்லாம் இறப்பு உண்டாகையால் "எம்பிரான்மன்று வழுத்தாததென்னே நமரங்காள்" என்று கூறி வருந்தினார்.

கருத்து:

தமக்கு இனி இறத்தல் இல்லை என்று உறுதியாக உணர்ந்தார் தம் வலிமையையும் மானத்தையும் இழந்தேனும் தம் உயிரையும் பாதுகாக்க முயலலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jan-22, 4:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே