உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே - இனியவை நாற்பது 26
இன்னிசை வெண்பா
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினிது இல். 26
- இனியவை நாற்பது
பொருளுரை:
ஒரு பொருளைப் பெற விரும்பி தன்னை அடைந்தவரது விருப்பத்தைத் தகர்க்காத மாட்சிமை இனியது.
மதிப்பு இல்லாத இடத்தில் வாழாது ஒதுங்கி யிருக்கும் மன உறுதி மிக இனியது.
(மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம் என்பது போல - ஒளவையாரின் உலக நீதி)
எப்படியாவது பிறர்க்குக் கொடுக்கக் கூடியவற்றை, ஒளிக்காத அன்பை விட சிறந்த இனியது வேறொன் றுமில்லை.
விளக்கம்:
நசை கொல்லலாவது ஒன்றைப் பெறலாமென்ற ஆசை நாளடைவில் தேய்ந்து அழியுமாறு செய்தல்;
அதாவது கொடுத்தற்கு விருப்பமில்லை என்றால் உடனே மறுக்காமல் பன்முறையும் தருவதாகப் பொய் கூறி நாளடைவில் அவ்வாசை தானே அழியுமாறு செய்தல்.