காட்சி நிறையில் மனிதரைப் புல்லா விடுதல் இனிது - இனியவை நாற்பது 25
நேரிசை வெண்பா
(‘ர்’ இடையின ஆசு)
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் - தீ’ர்’வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. 25
- இனியவை நாற்பது
பொருளுரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து வழியாக வருகின்ற ஆசையையும், அதனை ஒருகால் விடினும் பழைய பயிற்சி வயத்தான் அதன்கட் செல்லும் நினைவையும் ஒழிப்பது இனியது.
கையில் நிற்கக் கூடிய பொருளைப் பெறுவதாய் இருப்பினும் கல்லாதவரை விடுவது இனியது.
நிலையில்லாத அறிவினையும், நெஞ்சில் நேர்மையையும் இல்லாத மனிதரைச் சேராது நீங்குவது இனியது.