உள்ளம் படர்ந்ததே கூறும்முகம் - பழமொழி நானூறு 41
இன்னிசை வெண்பா
வெள்ளம் வருங்காலை ஈரம்பட் டஃதேபோல்
கள்ள முடையாரைக் கண்டே அறியலாம்
ஒள்ளமர் கண்ணாய்! ஒளிப்பினும் உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம். 41
- பழமொழி நானூறு
பொருளுரை:
ஒளிபொருந்திய கண்ணை உடையவளே!
வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் கொண்ட மணலைப் போல, வஞ்சனையான எண்ணம் உடையவர்களின் மனத்தை அவர்களின் முகங் காட்டும் குறிப்பி லிருந்தே அறிந்து கொள்ளலாம்.
தம் கருத்தை வெளிக் காட்டாமல் ஒருவர் மறைத்தாலும், அவர் மனத்தில் உள்ளதை அவர்களின் முகமே வெளிப்படுத்தி விடும்.
விளக்கம்:
ஆற்றில் முன்னே உண்டாகின்ற ஈரத்தினால் பின்னே வெள்ளம் வருமென்று அறியப்படுதல் போல, முகத்தின் குறிப்பால் அகத்தில் உள்ள எண்ணம் அறியப்படும் எனப்படுகிறது.
படர்ந்ததே கூறும் என்றது அவர் மறைத்தமை யையும் கூட வெளிப்படுத்தும் என்பதாம்.
பழமொழி: உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்.