காலத்தின் பல்வேறு கோலங்கள்

இன்று நல்ல உடல் நலம் இருப்பினும் நாளை எப்படி இருக்கும் என்று தெரியாது. அதுவும் கரோனா வைரஸ் வந்ததிலிருந்து நாளை யார் எப்படி இருப்பார் என்று தெரியாது. முதன் முறையாக வந்த போது எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டனர், எவ்வளவு அப்பாவி மக்களின் உயிர்கள் கருணையின்றி தட்டி பறிக்கப்பட்டது. எவ்வளவு தான் தற்காப்பு எடுத்துக் கொண்டாலும் இந்த வைரஸ் பலரை விட்டு வைக்கவில்லை. இப்படி பட்ட நேரங்களில் கடவுள் நம்பிக்கை உள்ள மனிதனும் கூட ஒரு கணம் நம்பிக்கை என்ற ஊன்றுகோலை இழக்கிறான். வெள்ளம், பூகம்பம், சுனாமி, இப்போது கரோனா, இதுபோன்ற பேரழிவை விளைத்திடும் இயற்கை சார்ந்த மற்றும் இயற்கை சாராத சம்பவங்கள் மனித இனத்தை என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் திக்குமுக்காட வைக்கிறது.
இத்தகைய சீரழிவிலிருந்து ஏதோ ஒரு வகையில் தப்பிக்கும் மக்கள், தாங்கள் பிழைத்ததை தெய்வாதீனம் என்று எண்ணுகின்றனர்.
ஆனால் சொல்லொணாத் துயரை அநுபவித்து வரும் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் இந்த கொடிய நிகழ்வுகளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வாரா அல்லது மிகவும் நம்பிக்கை கொண்டிருந்த கடவுளை பழித்து தூற்றுவார்களா?
இவர்கள் அடைந்த மாபெரும் துயரங்களுக்கு யார் இவர்களுக்கு ஈடு செய்வார்கள்? நாமா அல்லது கடவுளா? இப்படி பட்ட ஒரு சூழலில் கடவுளை சாடும் இந்த மக்களின் செயல்களை நாம் , எல்லாம் அவரவர் விதி என்ற போர்வையில் மறைத்து, இந்த அப்பாவி மக்களை நாம் உதாசீனம் செய்வோமா அல்லது முதலை கண்ணீர் வடிப்போமா?
இப்போது உலகம் இயங்கி வரும் நிலையில் இது போன்ற எதிர்மறையான, பேரழிவு விளைவிக்கும் நிகழ்வுகள் ஏற்படுகையில் , இத்தகைய அழிவிலிருந்து தப்பித்து இருக்கிற வரையில் நாம் எண்ணி வியக்க வேண்டியது அல்லது நினைத்து துன்புற வேண்டியது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். அந்த எண்ணம் தான் " உலகமே மாயை. வாழ்க்கை ஒரு சூதாட்டம் போன்றது. என்ன செய்தாலும் எவ்வளவு முயன்றாலும் அதிர்ஷ்டம் என்பது இருந்தால் தான் ஒருவர் நன்றாக வாழ முடியும், ஏன் உயிர் வாழவே முடியும்."
இந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட எனக்கு இங்கு இப்போது உதிப்பது புத்த ஞானோதயம் அல்ல. ஒரு சாதாரண மனிதனின் ஒரு உயரிய தற்காப்பு தரும் எண்ணம் தான். அது என்னவெனில் , மனதளவில் " நான் தைரியமும் துணிச்சலும் உடையவன். எது நேர்ந்திடிலும் நான் அதை எதிர் கொள்வேன். அதன் மூலம் இவ்வுலகில் உள்ள வரை நான் மகிழ்ச்சியாக வாழ்வேன்" என்று ஒவ்வொரு நாளும், ஏன், ஒவ்வொரு வேளையும் நாம் நம்பிக்கை உறுதியுடன் நினைவு கூர்கையில் நாம் வாழ்வில் நிகழும் இன்ப துன்பங்களை இன்னும் சரிசமமாக நோக்க இயலும். எப்போதும் வாழ்க்கை கேளிக்கையாக அமைய நினைப்பது, சூரியன் காலை மேற்கு திசையில் உதிக்க வேண்டும் என்பது போல.
நமக்கு அமையும் ஒவ்வொரு நாளுக்கும் கண்ணிற்கு தெரியாத , ஆனால் நிச்சயமாக இப்பிரபஞ்சத்தை இயக்கும், எப்படி என்ன என்று அறியமுடியாத பரம்பொருளுக்கு நன்றி கூறுவது மனித இனத்தின் நன்றி பெருக்கையே எடுத்துக் காட்டும்.

ஆனந்த ராம்

எழுதியவர் : Ramasubramanian (12-Jan-22, 7:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 68

மேலே