கையார உண்டமையால் காய்வார் பொருட்டு - பழமொழி நானூறு 44

இன்னிசை வெண்பா

கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப்
பொ’ய்’யாகத் தம்மைப் பொருளல்லார் கூறுபவேல்
மையார உண்டகண் மாணிழாய்! என்பரிவ
செ’ய்’யாத எய்தா வெனில். 44

- பழமொழி நானூறு

பொருளுரை:

மையினை மிகுதியும் உண்ட கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய்!

(தம் பகைவர் கொடுத்த பொருளை) கைநிறைய வாரி வாரி உண்டமையால் (அவர் கூறியதைச் செய்யாத பொழுது) சினப்பர் என்பது காரணமாக, மனிதனாகவன்றி ஒரு பொருளாகவும் கருதப்படாத அற்பர்கள் தம்மீது உண்மை இல்லாத சில பழிச் சொற்களைக் கூறினரேல்,

தாம் செய்யாத பழிச் சொற்கள் தம்மை வந்து அடையாவாகலான் எது கருதி வருந்துவது? வருந்துதல் வேண்டாம்.

கருத்து:

தம் பகைவர் முயற்சியால் அறிவிலார் பழி கூறினரேல் அதற்காக வருந்த வேண்டுவதில்லை.

விளக்கம்:

பகைவருடைய தூண்டுதலாற் கூறுதலால் அதற்கு வருந்த வேண்டுவதில்லை.

பகைவருடைய சொற்களைக் கேட்கும் பேதையர் தாம் உண்டது நினைந்து நன்றி அறிதலுடையவராய்ச் சோற்றுக்கடன் கழிக்கின்றார்கள் என்பது கருதி, அவர்கொண்ட நன்றியறிவுக்கு மனம் மகிழ்தலல்லது வருந்தலாகாது,

'செய்யாத எய்தா' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 7:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே