இனிதே வாழ்வதற்கு இகிகாய்

*இனிதே வாழ்வதற்கு இகிகாய்*

இனிதே வாழ்வதற்கு ஒரு சொல்
இதமாய் சொல் என்றேன்
இகிகாய்' என்றான் ஜப்பானியன்
இதற்குப் பொருள் கேட்டேன்

ஓரிரு வார்த்தையில் உண்மைப்
பொருள் அரிய முடியாது.
இகிகாய் என்ற சொல்லுக்கு
மகிழ்வாய் வாழும் முறை என்றான்.

மகிழ்ச்சி என்பதை அறிய
மனமோ துடித்துப் பதைத்தது
நிம்மதியே வெகுமதி என்று
நின் மதி செப்புமே என்றான்

நீள் ஆயுள் ஒரு கொடை - அடைய
உள்ளத்தின் உயர்வே விடை
நிதர்சனமாய் அறிய விருப்பமா?
நீ சென்றுவா ஒக்கினாவா
நேரில் ஒரு முறை என்றான்

தத்துவம் என்ன என்றேன்
குத்துமதிப்பாக மூன்று என்றான்
*இயற்கையோடு இணைந்து வாழ்*
*இதயம் விரும்புவதைச் செய்*

*விரும்பியதை ருசித்துச் சாப்பிடு*
விதம் விதமாய் சாப்பிடு - ஆனால்
சதம் அடிக்காமல் *இடம் மீதம் வை வயிற்றில்* என்றான்

விடமான தீய எண்ணங்கள்
கடந்து *உறவும் நட்பும்*
*தொடர்ந்து வர* *சமூகத்தில்*
*தடம் பதித்து வாழ்வாய் என்றான்*

உன்னையே நீ அறிந்துகொள்
உந்தன் வாழ்க்கை நோக்கம்
என்னென்று நீ புரிந்துகொள்
மனதில் உணர்ந்து செயலில்
முன் நிறுத்து சோம்பல் தவிர்த்து.

திடமான உடல் பெறவே மனம்
முடமாகாமல் ஓர் நிலையான
இடம் தேங்காமல் எப்போதும்
நடமாடிக் கொண்டிரு என்றான்

நகர் நகர்ந்தபடியே இரு
ஓ அதுதானோ *ஜர்கண்டி*
அன்று சொன்னவரைக் கடிந்தேன்
இன்று இயன்றவரைப் படித்தேன்.


திபத்திய பழமொழி ஒன்று
தித்திப்பாய் சுருக்கமாய் சொல்வது
உண்பது அரை விழுங்கு -உடல்
உரம் பெற நடப்பது இருமடங்கு

சிரிப்பதும் சிந்திப்பதும் மும்மடங்கு
சீர்மிகு சிந்தையின் ஊற்றாம்
*அன்பு வெள்ளம் செய்யும்*
*விந்தைக்கு என்றும் அளவில்லையே!*

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (19-Jan-22, 10:42 am)
பார்வை : 79

மேலே