ஒழுக்கம் பிழையாதவர் எய்துவர் எட்டு - ஆசாரக் கோவை 2
இன்னிசை வெண்பா
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையா தவர். 2
- ஆசாரக் கோவை
பொருளுரை:
நற்குடிப் பிறப்பு, நீண்ட வாழ்நாட்கள், பொருட் செல்வம், பொலிவான தோற்றம், நிலத்திற்கு உரிமை, தான் சொல்லும் சொல்லில் மேன்மை, கல்வி, பிணியில்லாமை ஆகிய எட்டு வகையான நலன்களையும் எக்காலத்தும் ஒழுக்கம் தவறாதவர் அவற்றிற்குரிய இலக்கணங்களுடன் அடைவர்.
ஒழுக்கமுடையவர் நோயடையாதவராய்ச் செல்வங் குன்றாதவராய்ச் சிறப்பர் எனப் படுகிறது.
இச்செய்யுள் பல விகற்பத்தாலும், இரண்டாம் அடியின் நான்காவது சீரில் தனிச் சொல்லின்றியும் அமைந்த இன்னிசை வெண்பா ஆகும்.