கேள்வியுள் இன்னாதன மூன்று - திரிகடுகம் 57

நேரிசை வெண்பா
(’ட்’ ‘ச்’ வல்லின எதுகை)

கொட்டி யளந்தமையாப் பாடலும் தட்டித்துப்
பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான்
ஆளுங் கலங்கா முறுதலும் இம்மூன்றும்
கேள்வியுள் இன்னா தன 57

- திரிகடுகம்

பொருளுரை:

தாளவோசையால் அளவிட்டு அதற்குத் தகுந்தபடி பாடாத பாடலும், கைதட்டி சோற்றுப் பிச்சைக்குப் போய் வாங்கி உண்ணுபவனுடைய இரைதலும், ஒதுக்குக்குடி இருந்தவன் (அவ்வில்லத்தான்) ஆளும் பண்டங்களை விரும்புதலும் ஆகிய இந்த மூன்றும் கேட்கப்படுபவைகளுள் இன்பத்தைத் தராதனவாம்.

கருத்துரை:

தாளத்துக்கு ஒவ்வாப் பாட்டும், பிச்சையெடுத்துண்பான் பேரிரைச்சலும், ஒட்டுக்குடியன் பெருவீட்டின் பொருளைக் கருதுதலும் இன்பத்தைத் தராதவை.

து – உணவு, துச்சு - சிறிது பொழுது தங்குமிடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-22, 7:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே