திரைமறைவில் உள்ளபொருள் காணும் உறுதிபோல் காண்க புகுந்து - ஞானம், தருமதீபிகை 946
நேரிசை வெண்பா
உரையுணர்வுக்(கு) எட்டா ஒருபொருள் உண்டு
கரையறுபே ரின்பமது கண்டாய் - திரைமறைவில்
உள்ளபொருள் காணும் உறுதிபோல் உற்றவிப்
பொள்ளலுடல் காண்க புகுந்து. 946
- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உரைக்கும் உணர்வுக்கும் எட்டாத ஒரு தனியான தலைமைப் பொருள் பேரின்ப நிலையமாய் எங்கும் பெருகியுள்ளது; திரை மறைவில் இருப்பதைக் காண்பது போல் தெளிவான உணர்வால் உன் உடலகத்தே அதனைக் கண்டு மகிழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.
கண்ணால் உலகப் பொருள்களைக் காண்கின்றோம்; காதால் ஒலிகளைக் கேட்கின்றோம்; மூக்கால் வாசனைகளை அறிகின்றோம்; இவ்வாறு பொறிகளால் நனவில் உணர்ந்ததையே நினைவு கூர்ந்து வருகின்றோம். விழுமிய நிலையில் தெளிவாக எதையும் சிந்தனை செய்வதில்லை. கண்டதையே கண்டு உண்டதையே உண்டு கொண்டதையே கொண்டு குருடுபட்டு வாழ்வதே முருடுபட்ட வாழ்வாய் யாண்டும் நீண்டு அவல நிலையில் பெருகி வருகிறது.
அரிய மனித அறிவுக்கு உரிய பெரிய பயன் அறிவானந்தமாயுள்ள ஆதிமூலப் பொருளை அறிந்து கொள்வதேயாம். இறைவன் அருவமாய் எங்கும் நிறைந்துள்ளான்; பொறிபுலன்களால் அவனை யாதும் அறியமுடியாது; உரை உணர்வுகளுக்கு எட்டாமல் ஒளி மயமாய் ஒங்கியுள்ள பரமனை வெளியே தெளிவாய்க் காண இயலாதாயினும் ஞானிகள் அவனைக் கண்டு மகிழ்கின்றார். உணர்வின் ஒளி உரியவனைத் தெரிகிறது.
பசுவின் உடல் முழுதும் பால் சுரந்திருந்தாலும் முலை வழியே அது வெளி வருகிறது; சூரியன் ஒளி எங்கும் பரவி நின்றாலும் பளிங்கு முதலிய கண்ணாடிகளிலேயே தெரிய நேர்கிறது; அழுக்குப் படிந்திருந்தால் கண்ணாடியிலும் கதிர் ஒளியைக் காண முடியாது. அழுக்கு இல்லாத இடத்தேதான் கதிர் ஒளி எதிர் வீசுகிறது. மனம் மாசு படிந்திருந்தால் ஈசன் ஒளி அங்கே யாதும் தெரியாது; மாசு படியாத மனத்திலேதான் பரஞ்சோதியின் தேசு வீசுகிறது. சித்த சுத்தியில்லாதவன் ஈசனைக் குறித்து எத்தனை வகையாய்ப் பேசினாலும் பித்தன் பிதற்றுவது போல்வதேயாம். பிழையான வழியில் ஈசனைக் காண இயலாது.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற்றி ருந்தான் புரிசடை யோனே. 2
- 26. வரையுரை மாட்சி, ஒன்பதாம் தந்திரம், பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்
வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பொருளைக் குறித்து வீணே பேசி வெறியராய்க் கழியாதீர்கள்; உங்கள் உள்ளத்தைத் தூய்மை செய்து வையுங்கள்; வைத்தால் பரம பரிசுத்தமான அந்தப் பேரின்பப் பொருள் தெளிவாய்த் தெரிய வருமெனத் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிறார். இதயம் சுத்தமானால் ஈசன் அங்கே உதயமாய் உவந்து இருப்பன் என்பது உணர வந்தது. புனித மனம் புனிதனது இனம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர் கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத் தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யு மிழலை யாமே. 6
- 132 திருவீழிமிழலை, முதல் திருமுறை, ஞானசம்பந்தர் தேவாரம்
தூய ஞானிகளுடைய இதயக் கமலத்தில் இருக்கும் பரமன் என ஞானசம்பந்தர் இங்ஙனம் ஈசன் நிலையைக் குறித்திருக்கிறார். பாசம் நீங்கியபோது பசு பதியாய் வருதலால் ஈசனுக்குப் பசுபதி என்று ஒரு இனிய பெயரும் தனியே வந்தது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
பாரறியும் அறிவினுமிப் பார்மேல் நின்ற
..பசுஞானத் தானுமெட்டிப் பார்க்கொ ணாத
பேரறிவே! சிற்றறிவேற்(கு) இருளை நீக்கும்
..பேரொளியே அங்கயற்கண் பிரியா தானே
யாரறிவார் தமிழருமை என்கின் றேன்என்
..அறிவீனம் அன்றோவுன் மதுரை மூதூர்
நீரறியும் நெருப்பறியும் அறிவுண் டாக்கி
..நீஅறிவித் தாலறியும் நிலமும் தானே. 45 – மதுரைப்பத்து
சீவ போதத்தால் சிவனை அறிய முடியாது; அவன் அருள் பெருகி வரும்படி மனம் புனிதமாக வேண்டும்; அவ்வாறானால் தெய்வநிலை யாவும் தெளிவாய் விளங்கும் எனப் பரஞ்சோதி முனிவர் இங்ஙனம் பரஞ்சோதி வழியை விளக்கியிருக்கிறார்.
தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுரிமையை உணர்ந்த போது பிரிந்து நின்ற தாயை நினைந்து பிள்ளை அழுவது போல உள்ளம் உருகி ஞானிகள் அழுகின்றனர். உருக்கமான இந்த அன்பு நிலையில் பரமன் உரிமையோடு விரைந்து அருள் புரிகின்றான். தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு உள்ளியுணரவுரியது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
..பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
..உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
..செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
..எங்கெழுந் தருளுவ தினியே. 9
- 37 பிடித்த பத்து, எட்டாம் திருமுறை, திருவாசகம்
பெற்ற தாயினும் பேரன்போடு வந்து தனக்குச் சிவபெருமான் அருள் புரிந்துள்ளதை மாணிக்கவாசகர் இவ்வாறு குறித்திருக்கிறார். பத்தியும் ஞானமும் பெருகிவரின் சீவன் சிவனாய் மருவி வருகிறது. ஞான ஒளி அவனை நேரே காட்டுகிறது; அன்பு அவனது இன்ப நலனை இனிதூட்டுகிறது.
கலிவிருத்தம்
(மா விளம் விளம் கூவிளம்)
முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. 2
- 091 பொது, ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர்
.
மெய்ஞ்ஞான ஒளியால் அஞ்ஞான இருள் நீங்கி அருள் நிலையில் நின்ற அப்பர் ஞான முதல்வனை பரமனை ஞானத் தளையிட்டு வைத்திருப்பதை இதனால் அறிந்து கொள்கிறோம்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
..நாட்டமே நாட்டத்துள் நிறைந்த
வானமே எனக்கு வந்துவந் தோங்கும்
..மார்க்கமே மருளர்தாம் அறியா
மோனமே முதலே முத்திநல் வித்தே
..முடிவிலா இன்பமே செய்யுந்
தானமே தவமே நின்னைநான் நினைந்தேன்
..தமியனேன் தனைமறப் பதற்கே. 6
- 22. சிவன்செயல், தாயுமானவர்
ஞானமே வடிவமான மோன யோகிகள் மோகமாய் நாடித் தேடுகின்ற தேட்டம் எனப் பரமனைக் குறித்துக் காட்டித் தாயுமானவர் இங்ஙனம் உறவு கொண்டாடியுள்ளார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தாயுமென் ஒருமைத் தந்தையும் ஞான
..சபையிலே தனிநடம் புரியும்
தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
..தூக்கமும் சோம்பலும் துயரும்
மாயையும் வினையும் மறைப்புமா ணவமும்
..வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
..நல்அருட் சோதிதந் தருளே.
- 11 திருவருள் விழைதல், ஆறாம் திருமுறை, அருட்பா
தாய் தந்தையரிடம் மைந்தன் உரிமைகளை வேண்டுதல் போல் சிவபெருமானிடம் இராமலிங்க அடிகள் இங்ஙனம் அருளை வேண்டியிருக்கிறார். உன் உடலிலுள்ள சீவனே நீ; தேகம் முதலிய மோக மயல்களை நீக்கி உனது ஏக நிலையை உணர்க; அவ்வாறு உணரின் இறைவன் உறவு என உனது உயர் தலைமை தெரிய வரும். ஞான விழி திறந்து உன் தானம் காணுக.
நேரிசை வெண்பா
தன்னைநேர் காணின் தலைவனும் அப்பொழுதே
இன்னமுதம் ஆக எதிரெழுவன் - உன்னை
உணர உணர உயரின்பம் ஓங்கிப்
புணரப் புணரும் புறம். - கவிராஜ பண்டிதர்
இதனை உணர்ந்து உண்மை தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.