எல்லாம் பரமன் திருவுருவாய்ப் பார்த்திருப்ப தன்றோ வரமார் துறவோர் வழி - துறவு, தருமதீபிகை 956

நேரிசை வெண்பா

அல்லல் பிறர்க்கோர் அணுவளவும் ஆற்றாது
நல்ல புரிந்து நசைஒரீஇ - எல்லாம்
பரமன் திருவுருவாய்ப் பார்த்திருப்ப தன்றோ
வரமார் துறவோர் வழி. 956

- துறவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: பிறவுயிர்களுக்கு யாதொரு அல்லலும் புரியாமல், எவ்வழியும் நல்ல நீர்மைகளே நிறைந்து, நசைகள் யாவும் நீங்கி எங்கும் எல்லாம் பரமன் உருவமாய்ப் பார்த்திருப்பதே மேலான துறவிகள் இயல்பாகும்; அந்த நீர்மை அளவு சீர்மை விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர்

உயிரினங்கள் உடல்களை மருவி வாழும் வாழ்வில் துயரங்களே பெருகியுள்ளன. அவ்வாறு பெருகி வருதற்குக் காரணம் அவை மருவி வந்துள்ள வினைகளேயாம். மனம் மொழி மெய்களால் செய்து வந்த இத அகிதங்களே மனித இனத்தில் சுக துக்கங்களாய்த் தொடர்ந்து படர்ந்து எவ்வழியும் அடர்ந்து நிற்கின்றன. இந்த வெய்ய துன்ப விளைவுகளை மெய்யுணர்வாளர் நன்கு தெரிந்து கொள்வராதலால் அல்லலான செயலை யாதும் தீண்டாமல் யாண்டும் எவ்வுயிர்க்கும் இதமே கருதி ஒழுகுவர்.

பிறவித் துயர்களை அறவே ஒழிக்கத் துணிந்து துறவு நிலையை அடைந்த பெரியோர்கள் எவ்வழியும் செவ்விய தண்ணளியே புரிந்து வருவது இயல்பாயமைந்துள்ளது. ஒரறிவுயிர்க்கும் ஊறு செய்யாமல் ஒழுகுவதே பேரறிவின் விழுமிய பயனாகும். பசும் புல்லும் நோக மிதியார் எனத் துறவு வாழ்வுடைய முனிவர்களை இவ்வாறு கூறி வருவது மரபாயுள்ளது.

நேரிசை வெண்பா

எறும்பு முதலாக எவ்வுயிரும் ஈசன்
உறும்பல் உடம்பாய் உணர்ந்து - வெறும்புல்
எனினும் இடர்கள் எதிரா(து) இயலல்
இனிய முனிவர் இயல்.

துறவிகளுடைய உணர்வு நலனையும் உறுதி நிலையையும் அருள் ஒழுக்கங்களையும் இது இனிது விளக்கியுளது. கருணை வழி கடவுள் ஒளியாய் மிளிர்தலால் அந்நெறியே செல்வோர் அரிய பல நலங்களை எளிதே அடைந்து இன்பம் நுகர்கின்றனர்

பிறவுயிர்களைத் தன் உயிர் போல் கருதி எவன் உரிமையோடு இனிது ஒழுகி வருகிறானோ அவன் பெரிய தவசி ஆகிறான்; புண்ணியங்கள் அவனிடம் பெருகி வருகின்றன; சீவ தயாபரனான சிவனும் அவனை உவகையோடு நோக்கி உறவு புரிகிறான்.

தெளிந்த அறிவு ஒருவனிடம் நிறைந்துள்ளமைக்கு அடையாளம் எவ்வுயிர்க்கும் இதமாய் இரங்கி ஒழுகுவதேயாம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

பிறிதுநோய் தன்நோய் போன்றுபோற் றானேல்
..பெரிதுநூல் அரிதினோர்ந்(து) உணர்ந்த
அறிவினான் உண்டோ ஆவதென் றமையான்
..அறைதரு சராசரம் எவைக்கும்
சிறிதுமோர் துயரம் மறவியுற் றேனும்
..செய்யுமே மெய்யுணர் வடைவான்
மறுவறு துறவைப் பொன்செய்வா ணிகர்போல்
..வருந்திநாள் தொறும்வளர்ப் பவனே. 56

- வைராக்கிய தீபம்

துறவு பூண்டவர் உறவு பூண்டு ஒழுகும் கருணை நீர்மையை இது காட்டியுள்ளது. சராசரம் எவைக்கும் யாதொரு துயரமும் மறந்தும் புரியார் என்றதனால் துறந்தவருடைய சிறந்த செந்தண்மை நிலையைத் தெரிந்து கொள்கிறோம். பொன் செய் வாணிகர் போல் துறவை அவர் போற்றி வருவர் என்றது உன்னி யுணரவுரியது. துறவின் பெருமை தெரிய அரிய பொன்னை உவமை காட்டியது. பொருளைப் போற்றி வருபவர் செல்வராய் உலக நிலையில் உயர்கின்றார்; அருளைப் போற்றும் துறவர் அரிய பெரிய திருவராய் முத்தியுலகில் உயர்ந்து முதன்மை பெறுகின்றார்.

பிற உயிர்களுக்கு இரங்கி எவன் அளி புரிந்து வருகிறானோ அவன் உயிர் ஒளி மிகுந்துயர்ந்து வருகிறது. சீவ தயை சிவனது நீர்மையாதலால் அதனை உரிமையாக உடையவன் அவனை நேரே அடைய நேர்கின். அருள் கனிய ஆனந்தம் கனிகிறது.

துறவிகள் மெய்யறிவுடையவர்; இயல்பாகவே உள்ளம் தூயராய் உலக பாசங்களைத் துறந்தவர் எவ்வழியும் எவ்வுயிரிலும் ஈசனையே காணும் தேசினராதலால் யாண்டும் எந்தப் பிராணியையும் அன்போடு போற்றி அருள் புரிந்து வருவது அவரது பண்பாய் அமைந்தது. தண்ணளி தவ ஒளியாய் நின்றது.

தரவு கொச்சகக் கலிப்பா

இருந்தாலும் நின்றாலும் இடம்பெயர்ந்து நடந்தாலும்
வருந்தாமல் எவ்வுயிரும் வண்கருணை யுடன்வருவார்:
குருந்தான புல்பூடு கொடிசெடிகள் வாடினுமே
பொருந்தாமல் நயனங்கள் புலம்பியுளம் உருகுவரால்.

துறவிகள் இவ்வாறு தண்ணளி யுடையவராய்த் தவம் புரிந்து வருகிறார். புண்ணிய நீர்மைகள் அவர்பால் பொலிந்து திகழ்கின்றன. கருணைப் பண்பு கடவுள் நிலையமாயுள்ளது.

கடல் கலங்கினும் மலை குலுங்கினும் நிலம் நடுங்கினும் விண் துளங்கினும் யாதும் கலங்காமல் அமைதியாயிருக்கும் துறவியர் ஒரு புல் வாடினும் அல்லலாய் உள்ளம் இரங்கியருளுவது உலக விசித்திரமாயுள்ளது. அருள்நிலை அதிசய நலனை அருளுகிறது.

வைராக்கியத்தில் வைர மலைபோல் துறவிகள் உறுதியாய் நிற்கின்றனர்; உயிர் இரக்கமான தண்ணளியில் வெண்ணெய் போல் உருகி விடுகின்றனர். சிறிய ஒரு ஈசல் துயருறினும் பெரிதும் மறுகி ஈசனை எண்ணி அவர் கண்ணீர் சொரிகின்றனர்.

அரச போகங்கள் யாவும் துறந்து காடு புகுந்து கவுதமர் கடுந்தவம் புரிந்திருந்தார்; அப்பொழுது அவருக்கு வயது முப்பது; அருந்தல் பொருத்தல்களில் திருந்திய சுவைகளை நுகர்ந்து சிறந்த சுக போகியாயிருந்தவராதலால் துறவி ஆனாலும் அவரது மன நிலையை எளிதே கலைத்து விடலாம் என்று கருதி மன்மதன் மாய வஞ்சங்கள் புரிந்தான். பேரழகுடைய தருண மங்கையரை மருமமாய் ஏவி மையல் மோகங்களை விளைத்தான். தையலார் செய்த வெப்ப காமக் காட்சிகளில் எல்லாம் யாதும் கலங்காமல் மெய்ஞ்ஞான வீறோடு அவர் விளங்கியிருந்தார். புல்லுக்கும் புதலுக்கும் இரங்கியருளுகிற உள்ளம் பொல்லாத காமன் வில்லுக்கு யாதும் அசையாமல் கருங்கல்லாய் நின்றதைக் கண்டு தேவர் எல்லாரும் அவரது துறவு நிலையை வியந்து புகழ்ந்தார்.

நேரிசை ஆசிரியப்பா

வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கும்
அருளின் றீந்தே னுறைப்பநனி நெகிழ்ந்து
மலரினு மெல்லி தென்ப வதனைக்
காமர் செவ்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கி நிமிர்ந்தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின்
யாதோ மற்றது மெல்லிய வாறே?

உத்தமத் துறவியான புத்தருடைய அருள் நிலையையும் மருள் நீங்கி மாசற்றுள்ள சித்த சுத்தியையும் இது தெளிவாக விளக்கியுள்ளது. அரிய துறவும் பெரிய அறிவும் பெருங்கருணையும் ஒருங்கே நிறைந்துள்ள இவர் உலக சோதியாய் நிலவி நிற்கின்றார்.

பொறி புலன்கனை வென்று நல்ல அறிவு நலன்கள் அமைந்து எல்லா வுயிர்களிடத்தும் கருணை புரிந்து எங்கும் இறைவன் உண்மையை இனிது கண்டு புனித நிலையில் ஒழுகிப் புண்ணியரே நீரராய்ப் பெருகி வருவதே முற்றத் துறந்த முனிவர் முறையாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 5:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே